சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தனி இருக்கை -சிறுகதை

தனி இருக்கை -சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
தனி இருக்கை -சிறுகதை

02.05.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

மாலை 4 மணிக்குத் திறக்கப்படும் கே.கே.நகர் சிவன் பார்க் வாசல் முன், முதல் ஆளாக நின்றிருந்தார் ராஜ்பாரதி. வாசல் திறக்க இன்னும் 10 நிமிடம் இருந்தது. வாட்ச்மேன் கண்ணில்பட்டால் முன்கூட்டியே திறந்துவிடுவார்தான். அங்கிருந்தே தேடிப்பார்த்தார். ஆள் அகப்படவில்லை. மூலிகைச் செடிகளுக்கிடையே முளைத்திருக்கும் தேவையற்ற புற்களைப் பிய்த்துக்கொண்டோ,  நடைபாதையில் விழுந்த இலை, சருகுகளைக் கூட்டிப்பெருக்கும் பணியிலோ ஈடுபட்டிருக்கலாம்.

  அரை மணி நேரம் தாமதித்து வந்தாலும், வழக்கமாய் அமரும் அந்த சிமென்ட் பெஞ்சை, வசதியின் காரணமாக காதல் ஜோடி யாரேனும் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதனால், இவர் அல்லது இவரின் நண்பரான ஜீவன்ராய், இருவரில் யார் முதலில் வந்தாலும் அந்த பெஞ்சைப் பிடித்து வைக்கவேண்டும் என்பதே இருவருக்குமான பேச்சு ஒப்பந்தம். வாசல் திறந்ததும் சற்று ஒதுக்குப்புறமாய், தனித்து இருவர் மட்டுமே அமரும் பெஞ்சில் சென்று அமர்ந்தார்.

தனி இருக்கை -சிறுகதை
தனி இருக்கை -சிறுகதை

50 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ராஜ்பாரதிக்கு, `பாசாங்குக்காரன்’, `மலராத பூக்கள்’, `தொட்டியம் பஸ்நிலையம்’ போன்ற படங்களில் பல்வேறு இயக்குநர்களிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக 18 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஏழு வருடத்துக்கு முன்பு முன்னணி ஹீரோக்கள் இருவரை வைத்து AVM ஸ்டூடியோவில் பூஜை போடப்பட்டது. `இன்றுமுதல் படப்பிடிப்பு ஆரம்பம்’ என தினசரிகளில் ஹீரோக்களின் படம் போட்டு, `இயக்கம் - ராஜ்பாரதி’ என போட்டோ ஃப்ரேம் டிசைனுக்குள் பெரிய எழுத்துகளில் கால் பக்க விளம்பரம் வந்தது. ஹீரோயின் யார் என்பதில் புரொடியூசருக்கும் இவருக்கும் ஏற்பட்ட விவாதத்தில், ``இந்தப் படத்தின் டைரக்டர் நான். நான்தான் எதையும் தீர்மானிப்பேன். பணம் போடுறதோடு உங்க வேலை முடிஞ்சது’’ என்று கறாராகக் கூற, அந்தப் படம் அத்தோடு நிறுத்தப்பட்டது.

 நலம் விரும்பிகள் சிலர், ``பாரு பாரதி... சினிமா முன்ன மாதிரி இல்லை. படம் பண்ண ஒருசில தயாரிப்பாளர்கள் தான் இருக்காங்க. புரொடியூசர் சொன்ன ஹீரோயின், நீங்க சொன்ன ஹீரோயினைவிட சம்பளம் அதிகமாகத்தான் வாங்குவாங்க. படத்துக்கும் ப்ளஸ்தான். கிடைச்ச வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.’’ 

 ``என்னங்க புரியாம பேசுறீங்க. புரொடியூசர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறதுக்கா இவ்வளவு காலம் சினிமாவுல குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். போன வாரம்கூட ஒரு பெரிய கம்பெனியில கதை சொல்லியிருக்கேன். ஏழு கோடி ரூபாய் பட்ஜெட். ஒரு மாசத்துல ஷூட்டிங் போயிடுவேன்’’ என்றார்.

இவர் முழுமையாக நம்பியிருந்த அந்த ஏழு கோடி ரூபாய் பட்ஜெட் கம்பெனியும், அடுத்த மாதமே வேறோர் இயக்குநரை வைத்து அதே பட்ஜெட்டில் படம் தயாரித்தது. அந்தத் தயாரிப்பாளருக்கு போன்செய்து, ``உன் கம்பெனிக்கு என்னை வெச்சுப் படம் பண்ண குடுத்துவைக்கலை. தோல்விப் படம் எடுக்கப்போற. உன் தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’’ என்றார் கண்கள் சிவக்க.

``இருங்க பாரதி, இன்னும் மூணு மாசத்துல உங்க படம் ஆரம்பிப்போம். அவசரப்பட்டு வார்த்தைய விடாதீங்க.’’

 ``அட போய்யா… இனிமே, உன் கம்பெனிக்கு நான் படம் பண்றதா இல்லை. ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்துட்டேன்னா அப்புறம் என்  வீட்டுவாசல்ல அட்வான்ஸோடு காத்திருப்பீங்கல்ல. அப்ப வெச்சிக்கிறேன்டா உங்களை’’ என்றபடி போருக்குப் போகும் ராஜாபோல மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். 

இந்த விவகாரம், சினிமா உலகில் வேகமாகப் பரவிற்று. திரையுலகில் மட்டும்தான் நல்லது ஆமை வேகத்திலும், கெட்டது புயல் வேகத்திலும் பரவும். ``யாரு... ராஜ்பாரதியா..? ஐயய்யோ வேணாம்பா திமிரு பிடிச்சவன்’’ என்றார்கள். ``அவனை வெச்சுப் படம் பண்றதுக்கு, எருமைமாடு மேய்க்கலாம்’’ என்றார்கள். அதைக் கேள்விப்பட்டு, கொஞ்சம்கூட வருந்தவோ, யோசிக்கவோயில்லை. ``பின்ன… ராஜ்பாரதின்னா இண்டஸ்ட்ரியில ஒரு பயம் இருக்கணுமே!’’ - நெஞ்சை நிமிர்த்தி ஒரு கேலிப்புன்னகையை உதிர்த்தார்.

தனி இருக்கை -சிறுகதை
தனி இருக்கை -சிறுகதை

சில வருடங்களுக்குப் பிறகுகூட, ராஜ்பாரதி பூஜை போடப்பட்ட படத்தில் ஒப்பந்தமான கேமராமேன் அன்புச்செல்வன், இன்று பல பெரிய ஹீரோக்கள் படத்தின் பிஸியான ஒளிப்பதிவாளர். ராஜ்பாரதியைச் சந்தித்தார். ``சார் ஒரு சின்ன பட்ஜெட் படம். நண்பர் ஒருத்தர் தயாரிக்கிறார். உங்க ஞாபகம்தான் வந்துச்சு. ரெண்டு ரூபாய்ல பண்ற மாதிரி சப்ஜெக்ட் இருந்தா சொல்லுங்க. ஒரு மாசத்துல ஷூட்டிங் போறதுக்கு ரெடியா இருக்காங்க’’ என்றவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு…
 ``எங்கிட்ட இருக்கிற கதைக்கு, ரெண்டு கோடி ரூபாய்ல நாலு சாங் மட்டும்தான் ஷூட் பண்ண முடியும் செல்வன்’’ என்றதில் ஆணவம் வழிந்தது.

இந்த ஆள் இன்னும் திருந்தவில்லை என்பது மட்டும் அன்புச்செல்வனுக்குத் தெளிவாகப்  புரிந்தது. ஒரு பக்கம் கோபமாகவும் இன்னொரு பக்கம் பாவமாகவும் இருந்தது. ``சரி சார்.’’ விசிட்டிங் கார்டு ஒன்றைக் கொடுத்து ``இதான் நண்பரோட போன் நம்பர். கதை சொல்லப் போறதா இருந்தா சொல்லுங்க. போன் பண்ணிச் சொல்லிடுறேன்’’ என்று சொல்லிவிட்டுச் செல்ல, அவன் முதுகைப் பார்த்துக்கொண்டு கார்டை கையால் நசுக்கி வீசினார்.

`பெரிய ஹீரோக்களை வெச்சுதான் படம் பண்ணுவேன்’ என்ற பிடிவாதத்தில் அப்போது ரஜினிக்காக எழுதி வைத்த கதை, அஜித்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அஜித்தின் அபரிமிதமான வளர்ச்சியில் நெருங்க முடியாமல்போக, பிறகு சூர்யா, தனுஷ், தற்போது சிவகார்த்திகேயனுக்காக உருமாற்றி வைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த பல நண்பர்கள் படம் பண்ணி ஜெயித்து, பணமும் புகழும் பெற்று ஓய்ந்துகொண்டிருக்க, ராஜ்பாரதி இன்னும் வீண் ஜம்பமடித்துக்கொண்டே இருந்தார்.

 நெருங்கிய நண்பர்கள் சிலர், ராஜ்பாரதியின் குணம் தெரிந்தும் உதவும் நோக்கத்தோடு கதை விவாதத்துக்கு அழைத்துச் சிறு தொகையைக் கொடுத்து வந்தார்கள். அதிலும் சம்பந்தமே இல்லாமல் தன் கருத்துகளைக் கதைக்குள் திணிக்கப்பார்த்து, அது முடியாதபட்சத்தில் பாதியில் எழுந்து வந்த சம்பவங்களும் ஏராளம். ஊரிலிருந்து அவ்வப்போது ராஜ்பாரதிக்கு அப்பா அனுப்பிக்கொண்டிருந்த சிறிய தொகையும் நின்றுபோனது. முன்புபோல் விவசாயம் இல்லை. மூப்பின் காரணமாக உழைக்க முடியாமலும், ராஜ்பாரதியை நினைத்து மனதளவிலும் தளர்ந்து, வீட்டோடு முடங்கிவிட்டார்.

தனி இருக்கை -சிறுகதை
தனி இருக்கை -சிறுகதை

  ``ஹாய் பாரதி’’ ஜீவன்ராய் கை அசைத்துவிட்டு அருகே வர, ராஜ்பாரதி நகர்ந்து இடம் கொடுத்தார். ஜீவன்ராய்க்கும் கிட்டத்தட்ட அரை சதம் வயது. ராஜ்பாரதி அளவுக்கு இல்லையென்றாலும், சினிமாவில் பத்தாண்டுக்கால அனுபவம்பெற்றவர். ஆங்கிலம், ரஷ்யன், கொரியன், ஸ்பானிஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான் என, தமிழ் தவிர மற்ற அத்தனை மொழிப் படங்களையும் பார்த்து சிலாகித்துப் பேசக்கூடியவர். பெரிய நிறுவனம் ஒன்றில் உதவிப் பொறியாளராக, 15 ஆண்டுகளுக்கு முன்பே மாதம் 25,000 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர். அதைச் சட்டெனத் தூக்கியெறிந்துவிட்டுச் சென்னைக்கு பஸ் பிடித்து வந்ததிலிருந்து நிறைய டிவிடி-க்கள் பார்த்துப் பார்த்துக் கதை தேடிக்கொண்டிருக்கிறார்.

  ``திருச்சியில யாரோ புரொடியூசர் இருக்காங்க, பார்க்கப் போறதா சொன்னீங்க, போகலையா பாரதி?’’

``போன் பண்ணிட்டு வரச் சொன்னார். பத்துத் தடவைக்குமேல அடிச்சுப்பார்த்துட்டேன் எடுக்கலை. இவனையெல்லாம் நம்பி எப்படிப் படம் பண்றது? பணத்த வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு அவனுங்களுக்குப் புரியலை. சூப்பர் கதைய வெச்சிக்கிட்டு அலையுற நமக்கு, நல்ல புரொடியூசர் கிடைக்கல. அப்புறம், தமிழ் சினிமா அழியாம என்ன பண்ணும்?’’ என்று வழக்கம்போலத் தனது புலம்பலை ஆரம்பித்தார் பாரதி.

  ``கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள் எங்க இன்னைக்கு வருது? ஹீரோகிட்ட வாங்கின டேட் வீணாகிடக் கூடாதுன்னுதான படம் எடுக்குறாங்க’’ என்றார் ஜீவன்ராய் தன் பங்குக்கு.

  ``பொதுவா சினிமா ரசனையே மழுங்கிப்போச்சு ஜீவன். நான் அசிஸ்டென்டா இருந்த காலத்துல தினம் பத்து ஸீன்களாவது சொல்லணும். இல்லைன்னா டைரக்டர் `நாளையிலேர்ந்து வராதே!’ன்னுடுவார். இன்னைக்கு இருக்கிற எத்தனை டைரக்டர்களுக்கு  ஒழுங்கா ஸீன் சொல்லத் தெரியுது? அது ஏன்... க்ளாப் அடிக்கத் தெரியுமான்னு சொல்லுங்க. ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்ததுமே புரொடியூசரைத் தேட ஆரம்பிச்சுடுறாங்க. அதனால நம்மள மாதிரி சினிமாவுல பழம் தின்னு கொட்டை போட்டவங்க அல்லாடவேண்டியிருக்கு.’’

  ``அதுகூடப் பரவாயில்ல பாரதி. விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு, நேரா படம் பண்ண வந்துடுறாங்க. இல்லைன்னா ஒரு ஷார்ட் பிலிம் பண்ணின அனுபவமே போதும்னு நினைக்கிறாங்க. நூறு வார்த்தை பேசினா, அதுல பத்து வார்த்தைதான் தமிழ்.’’

``அப்படித்தான் ஜீவன் புரொடியூசரைக் கவுக்குறாங்க. ஒரு குரூப்புல அஞ்சு பேர் இருந்தா, அதுல ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களாவது இருக்காங்க. ஒன்றரை மணி நேரம் கதை சொன்ன காலம் போய், இப்ப லேப்டாப்பைத் திறந்து வெச்சுக்கிட்டு, கதைய டீசர்ல காட்டுறாங்க.’’

  ``சிலர், அசிஸ்டென்ட் வாய்ப்பு கேட்கிறதுக்கே கார்லதான வர்றாங்க. ரெண்டு படம் ஏதோ பிக்னிக் போற மாதிரி ஷூட்டிங் போயிட்டு, அடுத்ததா  அப்பனை நச்சரிச்சு சொந்தப் படம் எடுக்குறாங்க. 30 நாளைக்குள்ள எடுத்து முடிச்சா… அது படமாவா இருக்கும்? அதுவும் என்ன கதை பண்றாங்க... ஒண்ணும் புரியமாட்டேங்குது. ஆனா, அதையும் பார்க்க ஒரு கூட்டம் வருதுங்கிறதுதான் பெரிய  கொடுமை. அப்போ வந்த `பாசமலர்’ மாதிரி அண்ணன்-தங்கை கதை இப்போ இவங்களால எடுக்க முடியுமா..? ஏன்.. `வாழ்வே மாயம்’ காதலோட ஆழத்தை அதைத் தாண்டிச் சொல்ல முடியுமா..?’’

  ``அதே மாதிரி அமெரிக்கன் மூவி. `காஸாப்ளாங்கா’ 1942-ல வந்த படம்... முக்கோணக் காதல் கதை. சான்ஸே இல்லை... அந்த மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, செத்துடலாம். நானும் அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் வெச்சிருக்கேன். சான்ஸ் வரும்போது `யார்ரா இந்த ஜீவன்ராய்... எங்கடா இருந்தான் இவ்வளவு நாளா..?’ன்னு திரும்பிப் பார்க்கவைக்கப்போறேன்’’ என்றார்.

``பண்ணணும் ப்ரோ… அதனாலதான் இவ்வளவு நாளா பொறுமையா இருக்கேன். நான் சொல்றதைக் கேட்கிற புரொடியூசர் கிடைச்சிட்டா போதும். அவனவன் கண்ணுல விரலை விட்டு ஆட்டிப்புடுவேன். `பாகுபலி – 2’  ஆயிரம் கோடி ரூபாய் கலெக்‌ஷன் பண்ணினதா சொல்றாங்க. அப்படி ஒரு படத்தை நாம கொடுக்க முடியாதா என்ன..?’’

  ``ஏன் முடியாது... நானா இருந்தா அந்தப் படத்தை இன்னும் வேற மாதிரி பண்ணியிருப்பேன். நிறைய விஷயங்களை ராஜமெளலி கோட்டை விட்டுட்டார்.’’

  ``அவரைச் சொல்றீங்களே... `அவதார்’ படத்துல எவ்வளவு லாஜிக் மிஸ்டேக் இருக்கு தெரியுமா... நோட் பண்ணி வெச்சிருக்கேன். பல வருஷமா உட்கார்ந்து இதையெல்லாம் கவனிக்காம ஜேம்ஸ் கேமரூன் அப்படி என்ன பண்ணினார்னு புரியல’’ என்றபோது அந்தப் பெண்மணி கையில் துடைப்பம், கூடையுடன் அவர்கள் அருகே வந்து நின்றபடி…

  ``சார்... கொஞ்சம் கால நவுத்துங்க, குப்பை அள்ளணும்’’ என்றபடி குனிந்து இருக்கை அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சருகுக் குவியலை, சாய்த்து வைத்துத்திருந்த  கூடைக்குள் வாரித்  தள்ளிக்கொண்டு, அடுத்த குவியலைத் தேடிப் போனார்.

 அவர்களின் விவாதம் மேலும் தொடர்ந்தது. ராஜ்பாரதி, பாலசந்தர் முதல் பா.இரஞ்சித் வரை தமிழ் இயக்குநர்களை வம்புக்கு இழுத்தார் என்றால், ஜீவன்ராய் ஜேம்ஸ் கேமரூன் முதல் மைக்கேல் பே வரை விளாசித்தள்ளினார். பல வெற்றிப் படங்களைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடாவிட்டால் அன்றைய மாலை சுவாரஸ்ய மில்லாமல் சூம்பிப்போய்விடும். இந்த அளவில் அவர்கள் பேசுவது மற்றவர்கள் காதில் விழக் கூடாது என்பதற்கான தேர்வாகவும் இருக்கலாம் அந்தத் தனி இருக்கை.

 அப்போது பூங்கா வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த ஓர் இளைஞனைக் காட்டி… ``அங்க பாருங்க ஜீவன். பார்க் வாசல்ல ஒரு பையன், கிரே கலர் டீ ஷர்ட்.’’

  குறிப்பிட்ட இளைஞனைப் பார்த்துவிட்டு ``ஆமா சொல்லுங்க’’ என்ற ஜீவனிடம்…

``பேரு சதீஷ். நான் கோ-டைரக்டரா வேலைபார்த்த `மணக்கும் சந்தனம்’ படத்துலதான் கடைசி அசிஸ்டென்ட்டா வந்து சேர்ந்தான். என்னைப் பார்த்தாலே பையன் தெறிச்சி ஓடுவான். ஒரு தடவை நான் உள்ளே வர்றேன். சாப்பிட்டுக்கிட்டு இருந்தவன் ஒரு கோ-டைரக்டர்ங்கிற மரியாதை இல்லாம உட்கார்ந்துகிட்டே `வணக்கம் சார்’ங்கிறான். எனக்கா `ஜிவ்’வுன்னு ஏறிக்கிச்சு. அப்போ ஒண்ணும் பண்ணல, மனசுல வெச்சிக்கிட்டேன்.

ஒரு நாள் ஸ்பாட்டுல `ஹீரோவைக் கூப்புடுடா’ன்னு மைக்ல சொன்னேன். அவனும் கூட்டிட்டு வந்தான். அப்பதான் என் வேலைய காட்ட ஆரம்பிச்சேன். `ஏன்டா நாயே... ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மீராவைக் கூட்டிட்டு வரச்சொன்னா, ஹீரோவைக் கூட்டிட்டு வர்றே’ன்னு கையில இருந்த மைக்ல தலையில் ஒரே அடி. மண்டை வீங்கிப்போச்சு. அன்னையிலேர்ந்து என் பக்கம் தலைவெச்சுகூடப் படுக்கிறதில்லை. என்மேல அவ்வளவு பயம்’’ என்று பலமாய்ச் சிரித்தார்.

 ``அப்புறம் என்ன ஆனான்னே தெரியலை. ரொம்ப வருஷமாச்சு. வாங்குன அடியில ஊருக்கே ஓடிட்டான்னு நினைச்சேன்’’ என்றபோது அந்த சதீஷ் அவரை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்.

  ``சார் வணக்கம். என்னை ஞாபகம் இருக்கா..?’’

  “நான் உன்னை மறக்காம இருக்கிறது இருக்கட்டும். என்கிட்ட வாங்கின அடியை நீ இன்னும் மறக்கலைதானே’’ என்றபடி நான் சொன்னது சரிதானே என்பதுபோல் ஜீவன்ராயை ஒரு தரம் பார்த்துச்  சிரித்துக்கொண்டார்.

  கையில் இருந்த கேரிபேகிலிருந்து ஸ்வீட் பாக்ஸைத் திறந்து காட்டி ``எடுத்துக்குங்க சார். படம் கமிட்டாகியிருக்கேன். அதர்வா ஹீரோ. ஏப்ரல்ல ஷூட்டிங். உங்க பழைய ரூம்ல போய்ப் பார்த்துட்டு இங்க வந்தேன்’’ என்றான்.

  ``ஆமாமாம். அந்த ரூமை காலிபண்ணி மூணு வருஷமாச்சு. ரொம்ப வருஷமா இருந்துட்டேன். ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு வேற ஒரு ஃபிரெண்டோட ரூம்ல தற்சமயம் தங்கியிருக்கேன்’’ என்றார். பல மாதம் வாடகை தராததால் வீட்டு ஓனர் பெட்டிகளைத் தூக்கி வீதியில் வீசியதைக் கேள்விப்பட்டுதான் வந்திருந்தான். இன்னும் அதே ராஜ்பாரதி. சற்றும் மாறவில்லை.  ஜீவன்ராயையும் ஸ்வீட் எடுத்துக்கச் சொல்லிவிட்டு…

  ``சார், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். தனியா வர்றீங்களா..?’’

  ராஜ்பாரதி, இனிப்பின் கடைசி வில்லையை வாயில் போட்டுக்கொண்டு, தனியே எழுந்து வந்தார். ``சொல்லுடா சதீஷ்!’’     
     
   ``ஏன் சார் இப்படி இருக்கீங்க? ஒரு துளி அளவுகூட மாத்திக்காம அப்போ இருந்த மாதிரியே அடமென்டா இருக்கீங்க. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த வெட்டித் திமிரு, தெனாவட்டு, மமதையில இருப்பிங்க? உங்கள சுத்தியும் என்ன நடக்குதுன்னு பாருங்க. அதோ... பார்க் வாசல்ல இருக்கிறவன் முன்ன ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பிஸ்கெட்டுன்னு குழந்தைகளுக்குப் புத்தகம் வித்துக்கிட்டிருந்தான். இப்ப டோரா புஜ்ஜி, பவர் ரேஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன்னு டாட்டூ ஸ்டிக்கர்ஸ் வித்துக்கிட்டிருக்கான். குழந்தைகளுக்கு இப்போ இதுதான் பிடிக்கும்னு ரசனைக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிறான். தினமும் 100 ரூபா சம்பாதிக்கிற அவனே காலத்துக்கேத்தபடி மாறும்போது, வாழ்கையையே மாத்தப்போற சினிமாவுக்காகக் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறதுல என்ன சார் தப்பு..? அதனால உங்க சாம்ராஜ்ஜியம் எதுவும் சரிஞ்சுடப்போறதில்லை. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல, தலையெல்லாம்  நரைச்சிடுச்சு. இன்னுமா பாடம் கத்துக்கலை?

இதெல்லாம் சொல்லி உங்களை அவமானப்படுத்துறதா நினைக்க வேணாம். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். போன வாரம் திருவள்ளூர் வந்திருந்தேன். ஃபிரெண்டோட மேரேஜ் மண்டபச்  சமையலறையில, தலையில முண்டாசு கட்டிக்கிட்டு நீங்க காய்கறி நறுக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். எந்தத் தொழிலையும் குறைச்சு மதிப்பிடலை. ஆனா, அதுக்கா ஊர்லேர்ந்து வந்தீங்க..? அனுபவம், ஜெயிக்கிறதுக்கே தவிர... பெருமையா சொல்லி தம்பட்டம் அடிக்கிறதுக்கு இல்லை. முதல்ல `தான்’ங்கிற ஆணவத்தைத் தூக்கிப்போடுங்க’’ என்ற சதீஷின் வார்த்தைகளைக் கேட்டபடி அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார்.

  ``ஸாரி சார்... ரொம்பப் பேசிட்டேன்னு  நினைக்கிறேன்’’ என்றபடி பர்ஸை எடுத்து ``மதியம் சாப்பிட்டீங்களா..? அமைதியா இருக்கிறதைப் பார்த்தாலே சாப்பிடலைன்னு தெரியுது’’ என்று சொல்லி, 500 ரூபாய் நோட்டை எடுத்து, ``இதை உங்க கையில கொடுத்தா, எப்பவோ நான் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போறேன்னு உங்க ஃபிரெண்டுகிட்ட பீத்திக்குவிங்க. அதனால, அந்தச் செடிக்குப் பின்னால வெச்சிட்டுப் போறேன். நான் போனதும் எடுத்துக்கங்க’’ என்றுவிட்டு, செடி அருகே ரூபாயை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

  ராஜ்பாரதி நின்றிருந்த இடம் நோக்கி வந்து,   ``நண்பா, வீட்டுலேர்ந்து போன்... கிளம்புறேன். நாளை மீட்பண்ணுவோம்’’ என்றபடி ஜீவன்ராய் சென்றார்.

ராஜ்பாரதி, மெல்ல தனி இருக்கை நோக்கி நடந்தார். கால்கள் பின்னிக்கொண்டதுபோல் இருந்தன. அதே இருக்கையில் அப்படியே கால்களை மடக்கி முதுகு காட்டிப் படுத்தார். சற்று நேரத்தில் அழுதாரோ என்னவோ… உடல் குலுங்கிற்று. எவ்வளவு நேரம் அப்படியே படுத்துக்கிடந்தார் எனத் தெரியவில்லை. எல்லோரும் அவரைத் தாண்டித் தாண்டிப் போய்க்கொண்டிருந்தனர். மாலை மெல்ல இரவாகிக்கொண்டிருக்க, குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம் கூடியிருந்தது.

   நீண்ட நேரத்துக்குப் பிறகு எழுந்து அமர்ந்தவர், பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தார் எண்களைத் தேடி ``ஹலோ, ராஜ்பாரதி பேசுறேன் சார். 70 லட்சத்துல பண்ற மாதிரி ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார். அப்பாய்ன்மென்ட் கொடுத்தீங்கன்னா வந்து கதை சொல்றேன் சார்’’ என்றார்.  

  எதிர்முனையில், ``ஓ நீயா… அன்னைக்கு பெரிய வீராப்பா பேசின. ஒரு நிமிஷம்…’’ என்று ஹோல்டிங்கில் போட்டுவைக்க… பதிலுக்காக வெகுநேரம் பொறுமையாகக் காத்திருக்க ஆரம்பித்தார் ராஜ்பாரதி.

- எம்.ஜி.கன்னியப்பன்

ஓவியங்கள்: ஸ்யாம்