சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

ரலாறு, ஆனந்தம்; வரலாற்றுப் புதினம், பேரானந்தம். வெறுமனே கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகளோடு நின்றுவிடாமல், கற்பனையாக இருந்தாலும் கால எந்திரம்போல, அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை தானே!

வீராணம் ஏரிக்கரையில் நடக்கும்போது, ‘இங்குதானே பாண்டிய நாட்டின் அழகுப்பதுமை நந்தினி பதுங்கிப் பதுங்கி நடைபோட்டது.’ மணிமங்கலத்தின் பிரமாண்ட வயல்வெளிகளில் நடக்கும்போது, ‘இது நரசிம்மப் பல்லவன் போர்ப் பரணி பாடியபடி கால்தடம் பதித்த பூமியல் லவோ’என்றெல்லாம் வரலாற்றுக் காலத்துக்குள் நம் மனது சிறகடிக்கும்.

ஆனால், வரலாற்றுப்புதினங்களில் கண்ட அனைத்துமே அப்படியே உண்மை அல்ல என்பதுதான் உண்மை. கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பேசுவதுதான் உண்மை என்றாலும், அவற்றையும்கூட நூற்றுக்கு நூறு நம்பிவிட முடியாது. பிறநாடுகள், பிற அரசர்களின் கல்வெட்டுகள், செப்பேடுகள் இன்னபிற வலுவான ஆதாரங்களையும் கணக்கில் கொண்டுதான் முடிவுக்கு வரமுடியும். இத்தகைய சூழலில், வரலாற்றையும் வரலாற்றுப் புதினங்களையும் குழப்பிக்கொள்ளாமல் இருப்பது அபூர்வமே.

பொன்னியின் செல்வன்

இதோ, கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக்கப்போகிறார் என்கிற செய்தி வட்டமடிக்க ஆரம்பித்ததுமே, பலவாறாகப் பிரித்து மேய ஆரம்பித்துவிட்டனர் இணையவெளியில். ‘அருள்மொழிவர்மன் அல்ல, அருண்மொழி வர்மன்.’ ‘வந்தியத்தேவன் என்பதே கற்பனைப் பாத்திரம்தான்.’ இப்படியாக நீளும் வாதப் பிரதிவாதங்களில், ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தொடராக வெளிவந்தது ‘ஆனந்த விகடன்’ இதழில்தான்’ என்பதும் ஒன்று.

என்ன உண்மை?

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, இந்த நாவலைத் தொடராக எழுதியது, அவர் உருவாக்கிய ‘கல்கி’ வார இதழில்தான்; ஆனந்த விகடனில் அல்ல.

சரி, மற்ற வரலாற்று விஷயங்கள்?

தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வந்தியத் தேவன்தான் கதாநாயகன். ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி, பூங்குழலி, செம்பியன்மாதேவி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் உள்ளிட்ட முக்கிய கதா பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் யாரெல்லாம் நிஜ மனிதர்கள், எவரெல்லாம் கற்பனைப் பாத்திரங்கள் என, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே நீடிக்கின்றன கேள்விகள். கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சொல்வதென்ன?

இந்தியத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல் துறைப் பேராசிரியருமான முனைவர் ராஜவேலு, இதுகுறித்து விளக்குகிறார்.

“வந்தியத்தேவன் கதாபாத்திரம் கற்பனையல்ல. இவரைப் பற்றிய குறிப்புகள் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் உள்ளன. ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவையின் கணவர்தான் வந்தியத்தேவன். ஆனால் பொன்னியின் செல்வனில் இவரைப் பற்றி இடம்பெற்றுள்ள வர்ணனைகள், காட்சிகளுக்கான குறிப்புகள் எவையும் கல்வெட்டுகளில் இல்லை. ராஜராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட ஓர் சிற்றரசனாக விளங்கியவர் வந்தியத் தேவன். இவர், ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ என அழைக்கப்படுகிறார். இன்றைய வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடி-ராணிப்பேட்டை இடையில் உள்ள திருவல்லம் என்கிற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசன். இவருடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி, ‘வாண க்கோப்பாடி மண்டலம்’ என அழைக்கப்பட்டுள்ளது. இவர் வானாதிராயர் வம்சத்தைச் சேர்ந்தவர். வந்தியத்தேவன் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் அங்கும் உள்ளன.

திருவல்லம் என்பது சோழப் பேரரசின் வட எல்லை. எதிரிகளின் படையெடுப்பை எல்லையி லேயே தடுத்து நிறுத்தி, சோழப்பேரரசைப் பாதுகாக்கும் பணியில் சிற்றரசர்கள் ஈடுபட்டி ருந்தார்கள். திருவல்லத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்பாடியில் சோழர்களின் படை ஒன்று அந்தக்காலத்தில் நிரந்தரமாக இருந்திருக்கிறது. சோழப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் என்கிற முறையில் வந்தியத்தேவன் தஞ்சைப்பகுதிக்கு அடிக்கடி வந்திருக்கிறார்.
பூங்குழலி என்ற படகோட்டிப் பெண், வந்தியத் தேவனைக் கோடியக்கரைக்கும் இலங்கைக்கும் அழைத்துச் சென்றார். ராஜராஜனின் தந்தை சுந்தரச் சோழன் இலங்கை செல்லும் வழியில் நாகதீபம் என்ற தீவின் அரசியைச் சந்தித்தார். வாய் பேச முடியாத அந்த அரசியின் மகள்தான் பூங்குழலி என்றெல்லாம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பூங்குழலி கற்பனைக் கதாபாத்திரம். இவரைப் பற்றி, கல்வெட்டுகளில் எந்தக் குறிப்பும் இல்லை. இலங்கையின் பழைமையான தொகுப்பு நூல்களான ‘தீபவம்சம்’, ‘மகாவம்சம்’ ஆகியவற்றில் நாகதீபம் தீவு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்புபடுத்தித்தான் பூங்குழலி கதாபாத்திரத்தைக் கற்பனையாக உருவாக்கியிருக்கிறார் கல்கி. உண்மை யில் அந்த நூல்கள் சுந்தரச்சோழன் ஆட்சிக் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகள் முந்தையவை’’ என்ற ராஜவேலு, ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் பழிதீர்க்க வரும் பேரழகி நந்தினி, ரவிதாசன் உள்ளிட்ட இன்னும் பல பாத்திரங்களைப் பற்றிப் பேசப்பேச சுவாரஸ்யம் கூடுகிறது.

“ஒரு போரில் பாண்டிய மன்னனான வீர பாண்டியனை, ஆதித்த கரிகாலன் கொன்று விடுகிறான்; வீரபாண்டியனை நேசிக்கும் நந்தினி என்ற பெண், ஆதித்த கரிகாலனைப் பழிதீர்க்க, காட்டுக்குள் சபதமேற்கிறாள்; தன்னைவிட வயது முதிர்ந்த பழுவேட்டரையரைத் திருமணம் செய்துகொள்கிறாள் என்றெல்லாம் நாவலில் எழுதியிருக்கிறார் கல்கி. இதில் நந்தினி கதாபாத்திரம் கற்பனையானது. ஆனால், பழுவேட்டரையர், அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூரை ஆட்சி செய்த சிற்றரசர். இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நந்தினி பற்றி எதுவும் கிடைக்கவில்லை. பாண்டிய நாட்டு அரசு அலுவலரான ரவிதாசன், சோழ நாட்டு அரசு அலுவலராகப் பணியில் சேர்ந்து, சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொலை செய்கிறான். இவனுக்கு ராஜராஜன் தண்டனை வழங்குகிறான். இதைப்பற்றிய குறிப்புகள், கடலூர் மாவட்டம், உடையார்குடி கல்வெட்டில் உள்ளன. ‘ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது ராஜராஜ சோழன்’ என்று உலவிக்கொண்டிருக்கும் செய்தி உண்மை அல்ல என்பது இதன்மூலம் உறுதியாகிறது. ராஜராஜனின் தாத்தா கண்டராதித்தன், அவரின் மனைவி செம்பியன் மாதேவி, குந்தவை உள்ளிட்ட பாத்திரங்கள் நிஜமானவை. தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு முன்பு உள்ள மகா மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டில், பிரம்ம கூட்டம் என்ற கோயிலுக்குக் குந்தவை கொடை வழங்கிய தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி. கல்வெட்டுகளில் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதை அருள்மொழி என்றே கையாண்டி ருக்கிறார் கல்கி” என்று முடித்தார் ராஜவேலு.

‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் பொறுத்தவரை, ராஜராஜ சோழனுக்கும் அவரின் அண்ணனான ஆதித்த கரிகாலனுக்கும் நேரடியாகப் பதவிப்போட்டி இருக்காதே தவிர, மறைமுகமாக அந்தப் போட்டி, நாவலில் இழையோடும். சம்புவரையர், பழுவேட்டரையர் என்று எங்கோ ஓரிடத்தில் அது பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். அதேபோல, ஆதித்த கரிகாலனை மயக்கி, அவன் கதையையே முடிக்கும் திட்டத்தைச் சுமந்தபடிதான் நந்தினி பாத்திரமும் பயணிக்கும். கற்பனையோ... நிஜமோ... நந்தினிகள், பூங்குழலிகள், வந்தியத்தேவன்கள், சூழ்ச்சிகள், கொலைகள், அண்ணன் தம்பி அரசியல் போட்டிகள் என்று நிகழ்கால அரசியலையும் நம் கண்முன்னே நிறுத்தும் புதினம்தான் பொன்னியின் செல்வன்! இது மணிரத்னத்தின் கைகள் பட்டு எப்படி உருமாறப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, காத்திருப்போம்!

-கு. ராமகிருஷ்ணன்