சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தெருக்கூத்திலும் அட்மின்!

தெருக்கூத்திலும் அட்மின்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெருக்கூத்திலும் அட்மின்!

தெருக்கூத்திலும் அட்மின்!

பாரம்பர்யமான கலையும் சமகால நாட்டு நடப்புகளும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதற்கான கலை உதாரணமாய் விளங்கியது, சங்ககிரி ராச்குமார் இயக்கிய ‘நந்திக்கலம்பகம்’ என்ற தெருக்கூத்து. தமிழுக்காகத் தன் உயிரைத் தந்த நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனின் வாழ்க்கையைத் தெருக்கூத்து வடிவத்தில் தந்ததற்குப் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு.

தெருக்கூத்திலும் அட்மின்!

நந்திவர்மன் மக்களின் குறைகளைக் கேட்டறிய நகர்வலம் செல்கிறான். உடன் செல்லும் நாகரிகக் கோமாளி, “என்ன, குறையா... நீட், ஸ்டெர்லைட் இப்படிப் பல பிரச்னை இருக்கு மன்னா!” என்று பதில் சொல்ல, அரங்கம் கைத்தட்டலால் அதிர்கிறது. இன்னொரு காட்சியில் மன்னன் தனக்கு துரோகமிழைத்த தன் சகோதரனைச் சிறைவைத்தது குறித்துப் பேசுகிறான். உடனே கோமாளி  “அட போங்க மன்னா! 28 வருஷமா ஏழுபேர் ஜெயில்லயே இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க மன்னா” என்கிறார் சாதுர்யமாக. “அப்படியா! உடனே ஆளுநரிடம் இதுகுறித்துப் பேசுகிறேன்’’ என்கிறான் மன்னன். “ஐயய்யோ மன்னா! எதுவா இருந்தாலும் நீங்களே ஒரு முடிவு பண்ணுங்க. ஆளுநர்கிட்ட சொல்லி எப்ப நடக்குறது?” என பதிலளிக்கிறான். பார்வையாளர் வரிசையில் இருந்த அற்புதம்மாள் முகத்தில் கவிந்திருக்கிறது வலியுடன் கூடிய மௌனம்.

இன்னொரு காட்சியில் பிற மதக் கடவுளின் சிலைகளை உடைக்க ஆயத்தமாகின்றனர் நந்தி வர்மனின் மகனும், சகோதரனும். சிலை உடைப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், “உடைச்சதுக்கப்புறம் ‘அட்மின்’தான் சொன்னான்னு சொல்லக் கூடாது” எனக் கோமாளி கிண்டலடிக்க, மீண்டும் அரங்கில் சிரிப்பலை. இப்படி நாட்டு நடப்புகளை நையாண்டியில் கரைத்துப் பல காட்சிகள்.

தெருக்கூத்திலும் அட்மின்!

நந்திவர்மனின் வாழ்க்கையை அசலாகக் கண்முன் நிகழ்த்தியது இந்த நவீனத் தெருக்கூத்து.  துரோகம், காதல், தியாகம், வீரம் என அத்தனை அம்சங்களையும் தங்கள் நடிப்பால் சாத்தியப்படுத்தினர் கூத்துக்கலைஞர்கள். தெருக்கூத்தின் விசேஷ அம்சமே அதன் நாகரிகக் கோமாளி கதாபாத்திரம்தான். கூத்தின் எல்லாக் காட்சிகளிலும் கோமாளியும் உடனிருக்கிறான். நாம் அனுபவிக்கும் சமகால இன்னல்களை நகைச்சுவையுடன் சாமானியனின் குரலில் பதிவு செய்கிறான். வில்லங்கமான கேள்விகளைக் கேட்டு சவுக்கடியைப் பரிசாகப் பெற்றுக்கொள்கிறான். அதிகாரத்தை நோக்கி சாமானியன்  கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு அதிகாரத்தின் எதிர்வினையாக ‘சுளீர் சுளீரென விழுகின்றன சவுக்கடிகள். தமிழுக்காக நந்திவர்மன் உயிர் துறக்கும் காட்சியில் ‘தமிழை, தமிழ் மக்களை நேசிப்பவர்கள் முத்துக்குமாரையும், செங்கொடியையும் போல உயிரை விட்டுவிடாதீர்கள்! நீங்கள் சமூகத்துக்குத் தேவை’ என்ற அழுத்தமான குரலோடு கூத்து முடிந்தது.

“தெருக்கூத்து நம் பாரம்பர்யக் கலை. எங்க தாத்தாவும் கூத்துக்கலைஞர்தான். என் ‘வெங்காயம்’ படத்திலும் கூத்துக் காட்சிகளைப் பதிவு செஞ்சிருந்தேன். செலவு செஞ்ச காசைவிட ரொம்பக் கம்மியாதான் திரும்பக் கிடச்சிருக்கு. ஆனாலும் இந்தக் கலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும்கிற ஆசைதான் இந்த முயற்சியின் மூலதனம். அடுத்த முயற்சியாகத் திருக்குறளைக் கூத்து வடிவில் அரங்கேற்றப்போகிறேன்” என்று சங்ககிரி ராச்குமாரின் வார்த்தைகளில் நவீனமும் மரபும் நம்பிக்கையாய்த் தொனிக்கின்றன.

- சக்தி தமிழ்ச்செல்வன்,  படங்கள்: சி.ரவிக்குமார்