மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 24

இறையுதிர் காடு - 24
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 24

இறையுதிர் காடு - 24

அன்று   கரடி தன் போக்கில் போகவும், அஞ்சுகனும் புலிப்பாணியும் புதிய ஒரு தெம்பு உடம்பில் ஊற்றெடுப்பதுபோல் உணர்ந்தனர். அப்படியே அந்த வேர்ப்பலாவில் வெடித்த பலா ஒன்றின் மதர்த்த சுளைகள் சிலவற்றை எடுத்துச் சாப்பிட விழைந்தனர். சற்றுத் தள்ளி ஒரு வேங்கைமரம் பூரிப்போடு வளர்ந்திருக்க, அதன் ஒரு கிளை பாகத்தில் அரைவட்டக் கோள அளவில் தேன்கூடு ஒன்றும் கண்ணில்பட்டது. இருவரும் அதையும் கண்டனர். ஒருபுறம் பலாச்சுளை - மறுபுறம் தேன்கூடு... பக்குவமாய் எடுக்கத் தெரிந்தாலோ, அற்புதமான காலை உணவு அது.

இறையுதிர் காடு - 24

கூட்டைச் சிதைக்காமல் தேன் எடுக்க ஒரு வழி உண்டு. விரல் பருமனுள்ள இரண்டடி நீளக் குச்சியை முகப்பில் சிதைத்து நார் நாராக்கிய நிலையில் குறிபார்த்துக் கூட்டின் மேல் எறிந்தால், அது கூட்டைப் பொத்துக்கொண்டு உள் நுழைந்து அதேசமயம் பின்னோக்கி விழாதபடி சிதைந்த பாகங்கள் தேன்கூட்டின் அறுகோண துவாரங் களில் சிக்கிக்கொண்டு அப்படியே நிற்கும். இதற்கு `கம்பாணம்’ என்று பெயர்.

மீதமுள்ள கம்பு பாகம் வழியாக, உள்ளிருக்கும் தேன் பாகுபோல் ஒழுகத் தொடங்கும். அப்படி ஒழுகும் தேனை, தேக்கிலையால் செய்த கும்பாவிலும் பிடிக்கலாம்; சுரைக்குடுவையிலும் பிடிக்கலாம்.

சராசரியாக இரண்டு நாழிகைக்காலம் தேனானது பாகுக்கோடு போட்டு ஒழுகிடும். மூலிகை பறிக்க வரும் நாட்டு வைத்தியர்கள் பாகுக் கோட்டுக்குக் கீழே குடுவையை வைத்துச் சுற்றிலும் கற்களை வைத்து அரண் கட்டிவிட்டு அதன் மேல் மிளகரணை மற்றும் கண்டங்கத்திரித் தாவரத்தைப் பறித்து அது அங்கே பொசிந்து வளர்ந்திருப்பதுபோல் போட்டுவிட்டுச் செல்வார்கள். தரை மேல் திரியும் உடும்பு, ஓணான், கீரி, எறும்புண்ணி போன்ற குறுவிலங்குகள் நெருங்காமல் இருக்கவே அந்த ஏற்பாடு.

ஆனால், இப்போது புலிப்பாணியும் சங்கனும் அப்படியெல்லாம் செய்யவில்லை. அழகாய் கம்பாணம் போட்டு, தேன் ஒழுகத் தொடங்கவும், தேக்கிலை போன்ற அகலமான இலைகளைப் பறித்து வந்து, அதை கும்பாயமாய்ச் சுருட்டி அகன்ற வாய் வழியே விழும் தேனைப் பிடித்து, பிறகு அதில் சுளைகளைப் போட்டு அதை நன்கு தோயவிட்டு, பிறகு விரலால் முயல் காதைப் பிடிப்பதுபோல் பிடித்துத் தூக்கி, அப்படியே நாக்கில் போட்டுக்கொள்ளவும் சில சொட்டுகள், மார்பிலும் பட்டு அவர்களின் வியர்வை மார்பை தேன்துளி மார்பாகவும் ஆக்கின.

மலைப்பயணத்தில் இதுபோன்ற இன்பங்களை அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த இன்பங்களுக்கு இணையாகத் துன்பங்களும் உண்டு. செந்தட்டி எனும் தாவரம் உடல் முழுக்க அரிப்பை உருவாக்கிவிடும். அதேபோல் பெரும்புதர்களைக் கடக்கையில் பச்சைப் பாம்பானது கண் இரண்டையும் பார்த்து அப்படியே விழுங்கவேண்டிச் சீறி வரும். அதற்குள் இமை மூடிக் கொண்டுவிட, மூடிய இமையைப் பாம்பின் வாய் கவ்விப் பிடிக்கும். அதை ஆவேசமாய் நாம் பிடித்து இழுக்கும்போது இமைச் சதையோடுதான் அந்தப் பாம்பு கண்ணை விடும்.

எவ்வளவோ வேடுவர்கள் இதுபோல் கண்ணில் கடிபட்டு போகரை நாடி வந்துள்ளனர்! அவர்களுக்கு மருந்திடுவதோடு கட்டாயம் அவர்களை தலைப் பாகை அணியச்செய்து - அதில் புறத்தில் தெரியும்படி நாகதாளி வேர்த்துண்டை வைத்துக் கொண்டும் அதேபோல் இரு கைகளிலும் காப்புபோல் கட்டிக் கொண்டும்தான் அடுத்து வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்பார் போகர்.


நாகதாளி வேர்த்துண்டு என்றால், அரவங்களுக்கு ஆகவே ஆகாது. அந்த வேரைக்கொண்டு செய்த மையைப் புருவத்தில் தடவிக் கொண்டும் செல்லச் சொல்வார். `யானை வணங்கி’ எனும் வேர்  மூலமும் மூலிகைகளில் ஒன்று. அந்த வேரைக் கையில் பிடித்தபடி நிற்பவன் முன், சீறிக்கொண்டு வரும் யானையும் தேங்கி நின்று பிறகு மண்டியிட்டு வணங்கும். அந்த வேரின் வாடை மற்றும் அதன் ஒளித்தன்மை யானை போன்ற விலங்குகளை மிரட்சியடையவைக்கும்.

மலைப்புறத்து மூலிகைச் செல்வங்களில் இதுபோல் எவ்வளவோ ரகசியங்களும் அதிசயங்களும் அடக்கம். இவையெல்லாம் எளிதாகவும் கிடைத்துவிடாது.

 ``தேவ தாவரங்கள் இவை! நாம் இவற்றை `தாவரம்’ என்று ஏன் அழைக்கிறோம் தெரியுமா?’’ என்று ஒரு நாள் மாணவர்களிடம் கேட்ட போகர்,

 `` `வரம் தா’ என்று நாம் நம் பொருட்டுக் கேட்டு, பசிப்பிணியை வென்று வாழ்ந்துவருகிறோம். இதுவும் தட்டாமல் தருகிறது. ஆதலால், சிறு புல் முதல் பெரும் புல்லாம் தென்னந்தோகை வரை சகலமும் நம் வரையில் கடவுளே! எனவே, இவற்றை வணங்கிவிட்டே தீண்ட வேண்டும். வரமாய் தன்னையே தருவதால், தாவரம் என்கிறோம்’’ என்றார்.

அஞ்சுகனும் புலிப்பாணியும்கூட வணங்கிவிட்டே பலாவையும் தேனையும் உண்டனர். இன்பமான அனுபவம்! பிறகு, நடக்கத் தொடங்கினர். பொதுவாய் ஒரு மலைத்தலத்தில் யானைகள் மிகுந்து இருந்தால், அவை தடங்களை உருவாக்கியிருக்கும். வேடுவர்களோ, மலைக்குமுட்டியர்களோ (பளியர்) வாழ்ந்துவந்தால், கூம்புக்கற்களைத் தரைப்பரப்பில் போட்டு, கூரிய பாகம் காட்டும் திசைவழி நடப்பர்.

ஆங்காங்கே கற்கள் கிடந்து, அவற்றின் கூரிய பாகமே வழியைக் காட்டும். கூரிய கல்லோடு ஓடுகள் கிடந்தால், குடியிருப்பு மந்தைப்பகுதிக்கு அது வழிகாட்டுவதாய்ப் பொருள்.

இறையுதிர் காடு - 24

அந்தப் பகுதிக்கு `மூப்பன் மந்தை’ என்றோ, `இடும்பி மந்தை’ என்றோ, `கிடா மந்தை’ என்றோ பெயர்கள் இருக்கும். மூப்பன் மந்தையில், கோரை வேய்ந்த அரைவட்டக் கோள மனைக்குள் முதியவர்களே இருப்பர்.

கிடா மந்தையில், ஆடும் மாடும் கோழிகளோடு இருக்கும். இங்கே மரவாடிக் காவலில் குமுட்டியர் ஈட்டி, அம்புகளோடு இருப்பர். மரவாடிக்காவல் என்பது, உயர்ந்த மரங்கள் மேல் கிளைகளை இணைத்து மூங்கில்கொண்டு கட்டி உருவாக்கப்பட்ட குடில்கள். அதில் ஒடுங்கி இருப்பர். திமிரில்லா விலங்குகளான ஆடுமாடுகளைத் திமிர் விலங்குகளான புலியும் சிங்கமும் வேட்டையாடிவிடாதபடி மரவாடி மேல் இருந்து காவல் காப்பர்.

இடும்பி மந்தை என்பது, பெரும்பாலும் நீரோட்டம் சார்ந்த ஓடைப் பரப்பையொட்டியே இருக்கும். இங்கே பெண்கள் கூட்டமாய், பாதுகாப்போடு இருப்பர். பெரும்பாலும் மான்தோலாடையில் வைத்த விழியை எடுக்க இயலாத பேரழகுடன்தான் இருப்பர்.

இவர்களின் அணிகளை வைத்தே மணம் ஆனவர், ஆகாதவரை அறிய முடியும். பறை ஒலிப்பது, கொம்பு முழங்குவது, கூக்குரலிடுவது போன்ற ஒலி வகைகளால் தொடர்புகளைக் கொண்டிருக்கும் இவர்களை, பெரும்பாலும் விலங்குகளும் ஏதும் செய்யாது.

கால நேரங்களை, இவர்கள் அருவி நீர்ப் பெருக்கம், புதிய பறவைகளின் பிரவேசம், சில தாவரங்களின் பூக்கும்தன்மை மற்றும் இலைகள் உதிர்க்கும்தன்மை, யானைக்கு ஏற்படும் காமம், காட்டு நாய்களின் குரைப்பு போன்றவற்றைக் கொண்டெல்லாமும் அறிந்திடுவர். வானில் நட்சத்திரக் கூட்டம் பார்த்தும் கால நேரம் அறியும் ஞானம் சிலருக்கு உண்டு.

போகர் பிரான் மலை குறித்துச் சொல்லும்போதெல்லாம் மலை வாழ்வு குறித்தும் இதுபோல் தகவல்களை அளித்துள்ளார். போகர் பிரான் மலை உலாச் செல்லும் சில தருணங்களில், இந்த மலை மந்தைகளுக்குச் சென்று அவர்களின் விருந்தை உண்டுவிட்டும் வருவார்.

அந்த வகையில் வேலாமூப்பர் என்று ஆறடி உயரம் உள்ள ஒருவர், அவ்வப்போது மூப்பரைக் காண வருவார். குடுவைகளில் தேன், கலிங்க மூட்டைகளில் காய்ந்த ஆவாரம்பூ, காய்ந்த குமுட்டிக்காய் மற்றும் கீரை இலை, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், பச்சைச் சீந்தல் கொடி, காட்டுத்துளசி, பிரண்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு, திருகுகள்ளி நாயுருவி, மூக்கிரட்டை, வெள்ளைக் கரிசாலை என அள்ளிக்கொண்டு வந்து, போகர் பிரான் முன் பரத்திவிடுவார். போகர் பிரான்மேல் அவ்வளவு அன்பு. இதன் பின்புலத்தில், ரசமான சம்பவமும் ஒன்றுண்டு.

ஒருசமயம் வேலாமூப்பரைக் கரடி அடித்துவிட்டது. தன் குட்டி ஒன்றை அருவியில் தொலைத்த கரடி, தாய்ப்பாசத்தால் தவித்து அது முற்றி வெறியாகிவிட்டதில் வாயில் மதநீர் ஒழுகத் தொடங்கிவிட்டது. இப்படிப்பட்ட கரடிவசம்தான் வேலாமூப்பர் ஒருநாள் சிக்க நேர்ந்தது. கட்டிப்பிடித்த கரடி, மலைத்தலத்தில் உருண்டு புரண்டு, பிறாண்டி,  கடித்துக் குதறி பிறகு மூப்பரைத் தூக்கி ஒரு பாறைமேல் போட்டுவிட்டு அருகிலேயே அமர்ந்தும் கொண்டது.  அவர் இனத்தவர்களால் தொலைவில் நின்று வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அருகில் நெருங்க முடியவில்லை. தீப்பந்தங்களை எறிந்தும் பலனில்லை. பதிலுக்கு, அந்தப் பந்தங்களை அது எறிந்தவர் மேலேயே திரும்ப எறிந்தது.

இப்படி ஒரு நிலையில்தான் போகர் பிரான் அந்தப் பக்கமாய் தன் விசேட சக்தியால் மேகமணிக்குளிகை எனும் ஒன்றால் பறவைபோல் வான் மார்க்கத்தில் பறந்தபடியிருந்தார். கரடி ஒன்று, பாறை மேல் மனித உடல் அருகே அமர்ந்துகொண்டு மிரட்டி உருட்டும் காட்சியும், சூழலில் மலைப் பளியர்களின் மன்றாடல்களும் அவர் கண்ணில் பட்டன. அவர்கள் எவரும் அறியாவண்ணம் விண்ணிலிருந்து இறங்கிய போகரை, அங்குள்ளோர் வியப்புடன் பார்த்தனர்.

கொக்கின் சிறகையொத்த வெண்ணிற ஆடையும், அதைக் கழுத்தோடு சுற்றி அவர் அணிந்திருந்த விதமும், நெற்றியில் பந்தலிட்டது போல் காட்சிதந்த விபூதியும் அவர்களையும் அறியாமல் வணங்கச்செய்தன! கண்களில் பளிச்சிட்ட தீட்சண்யம், கை நகம் எல்லாமும் வெண்பவழக்கணக்காய் ஒளிர்ந்தவிதம், அவர்களிடம்  பிரமிப்பை உருவாக்கிவிட்டது.

``என்ன நடக்கிறது இங்கே... அந்தக் கரடிக்கு என்னாயிற்று?’’  என்று அவர் கேட்கவும்...

``அதுக்கு, பாசப்பிணிங்க’’ என்றார் வயதான பளியர் ஒருவர். பாசப்பிணி என்று அழகாய் அவர் சொன்னவிதமே, போகரை மிகவும் கவர்ந்துவிட்டது.

``நீங்கள்?’’

``நாங்க பொதிகப் பளியருங்க...  குமுட்டிமார்னும் சொல்வாங்க. குமுட்டிக்கீரை, எங்க பிரதான உணவுங்க.’’

``நல்லது... கரடியோடு உள்ள மனிதர், அதனிடம் எதிர்பாராமல் சிக்கியவரா?’’

``ஆமாங்க. அதோட குட்டி அருவியில உழுந்து அடிச்சிட்டுப் போகவும், இதால தாங்க முடியலங்க... ஏணைக்குக் கோணையா போய், எங்க மூப்பரை அது புடிச்சிடிச்சிங்க...
 வேல் பாய்ச்சிக் கொல்லலாம். ஆனா, பாவப்பட்டதால கொல்ல மனசு வரலை.’’

``அவர் உயிரோடு உள்ளாரா?’’

``தெரியலீங்களே... கிட்டயே அண்ட உடமாட்டேங்குதுங்களே!’’

``கவலை வேண்டாம். அவரைக் காப்பாற்ற முடியுமா எனப் பார்க்கிறேன்’’ என்ற போகர், தன் சித்த சாகசத்தின் ஒரு பாகத்தை அங்கே அவர்கள் அறியாவண்ணம் அரங்கேற்றினார்.
சற்று தொலைவு சென்று குட்டிக்கரடி கத்துவதுபோல் குரல்கொடுக்கவும், கரடி அங்கிருந்து பாய்ந்து வரத்  தொடங்கியது.


அது விலகிய நொடி, மூப்பர் உடம்பை அவரைச் சேர்ந்தோர் தூக்கி வந்து நிழல் மந்தையின் பிரம்புக்கட்டிலின் மேல் போட்டனர்.

சற்றைக்கெல்லாம், வேலாமூப்பர் பளிச்செனக் கண் திறந்து எல்லோரையும் பார்த்தார்! அள்ளையில் சிறுகுடல் துருத்தலாய் வெளியே தெரிந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. தோள்பட்டையில் வாழைப்பழத் தோலைப் பாதி தூரம் உரித்து அதை அப்படியே விட்டாற்போல், சதை உரிக்கப்பட்டு தோலோடு தொங்கியபடி இருக்க, உள்ளே இருக்கும் எலும்பு நன்கு தெரிந்தது.

கண்டங்கழுத்தில் ஊற்றுக்குழியில் நீர் ஊர்ந்து வழிவதுபோல, ரத்தம் குமிழிகளோடு ஒழுகிக்கொண்டிருந்தது. மொத்தத்தில் கரடியின் கை நகங்களும் வாய்ப்பற்களும் மூப்பரை துவம்சம் செய்துவிட்டிருப்பது நன்கு தெரிந்தது. இப்படி ஒரு நிலையில்தான் வேலாமூப்பர் கண் விழித்தார்.
அதுவே எல்லோருக்கும் ஆச்சர்யம்.

கண் விழித்தவர், ஒரு கலயம் அளவுக்கு வரகுக்கஞ்சியைக் கொண்டுவரச் சொல்லிக் குடித்தார். குடிக்கும்போது கஞ்சியானது கண்டங்கழுத்தைக் கடக்கும்போது வலி கொடூரப்படுத்தி அவர் முகமும் சப்பளிப்பானது. இறுதியாக, சிரமப்பட்டு பிராணாயாமம் செய்தார்.

இறையுதிர் காடு - 24

அவர் அப்படிச் செய்து எவரும் பார்த்ததில்லை. அவர்கள் எவருக்கும் பிராணாயாமம் என்றால் என்னவென்றும் தெரியாது.

``மூப்பா... என்னா செய்றே? காத்தை அடைச்சுக் கசக்காதே... எப்புடியோ நீ பொழச்சிட்டே... கஞ்சியும் குடிச்சிட்டே. இப்படியே தரப்பாடுக்கு (தரைப்பாடு - மலைக்குக் கீழே உள்ள கிராமங்கள்) உன்னத் தூக்கிப்போய் வைத்தியம் பார்த்தா எல்லாம் சரியாயிரும்... என்ன சொல்றே நீ?’’ என்று அவர்களில் ஒருவன் கேட்டான்.

மூப்பர் மெல்ல நிமிர்ந்து அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி ``இங்கையே வைத்தியம் நடக்கப்போகிறது...’’ என்றார்.

அதுவரை அவர் குரல் அப்படி மாறி ஒலித்ததேயில்லை. பிறகு அதன்படியேதான் நடந்தது. அதுவரை எங்கே போனார் என்று தெரிந்திராத நிலையில் இருந்த போகரின் உடல்,  ஒரு மரத்தின் நிழலில் கிடந்தது. உயிரற்ற உடல்போல் கிடந்த அந்த உடலும், பிறகு எழுந்து வேலாமூப்பர் உடல் கிடக்கும் இடம் நோக்கி வந்தது.

வேலாமூப்பர் வரையில் சப்த நாடிகளில் ஆறு நாடி அடங்கி உயிர் பிரியும் நிலையில் இருந்தார். போகர் பிரான், பரகாயப் பிரவேச ஆற்றலால் உயிர்க்காற்றைத் தன் உடம்பிலிருந்து விடுவித்து, வேலாமூப்பர் நாசி வழி உள் புகுந்து, இதயத்தை உசுப்பிவிட்டு, அடங்கவிருந்த மூப்பரின் சுவாசத்தைத் தொடரச்செய்து, அதனால் ரத்த ஓட்டமும் நிகழச்செய்து, அடங்கியபடியே வந்த மணிக்கட்டு நாடி முதல் மற்ற நாடிகளையும் துடிக்கவிட்டு உடம்பின் உஷ்ணம் குன்றாதபடி செய்துவிட்டு,  மீண்டும் தன் உயிர்க்காற்றை உடம்பிலிருந்து விடுவித்துத் தன் உடல் கிடக்கும் இடத்துக்கே வந்து, மீண்டும் தனக்குள் புகுந்து
- தன்னுடலின் தற்காலிக பிரேதாயோகம் எனும் இயக்கமற்ற நிலையை இயங்கச் செய்தவராய் நிமிர்ந்தெழுந்தே இப்போது உயிர்த்துள்ளார்.

(பரகாயப் பிரவேசம் என்பது, ஊசிமுனையின் மேல் நிற்பது போன்றது; கத்தியின் விளிம்பில் நடப்பது போன்றது என்பார் போகர்.  இந்தச் செயல்பாடு, அஷ்டமாசித்திகளில் ஆறாவதாக உள்ள சித்தி. இதற்கு, பிரபஞ்ச அறிவும் கர்ம சுத்தமும் முக்கியம். இந்த இரண்டும் இல்லாதவர்கள் வரையில் இந்த வித்தை ஒரு மாயாஜாலமே!)

வேலாமூப்பரிடம் திரும்பி வந்த போகர், தான் மூலிகையைத் தேடிப் போனதுபோல் கையில் சில மூலிகைகளுடன் வந்து, வேலாமூப்பர் அருகே அமர்ந்து அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடங்கினார்.

தனக்குத் துணையாக தொந்தன், தோதன் என்கிற இரு இளைஞர்களை அழைத்துக்கொண்டவர், அவர்களைவைத்தே காயங்களுக்கு மூலிகைக்கட்டு போட்டு, கைக் கட்டைவிரல் முளியால் உடம்பின் சில பாகங்களில் வர்மத்தூண்டல் நிகழ்த்தி - பாதம் இரண்டையும் பிசைந்துவிட்டு நடுநடுவே மணிக்கட்டு நாடிப் பரிசோதனையும் செய்து, ஒருகட்டத்தில் வேலாமூப்பரை எழுந்து உட்காரவே வைத்துவிட்டார் போகர்!

இன்று அந்த டிரைவர் தடுமாறுவது பாரதிக்கு நன்கு தெரிந்தது. இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அரவிந்தன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்த்தாள்.

``அந்த ஜோசியக்காரன் உங்க அப்பாவை ஆக்டோபஸ்போலத்தான் பிடிச்சிருக்கான் பாரதி. இன்னிக்கு இந்த நாட்டுல எல்லா பெரிய மனுஷங்க பின்னாலயும் இப்படி ஒரு ஜோசியக்காரன் இருக்கான். இந்த ஜோசியக்காரன் சொல்றபடிதான் இவங்களும் எல்லாம் செய்றாங்க’’ என்று பொதுவாக ஒரு கருத்தைச் சொன்னபோது, காரிடம் ஒரு பெரும் தடுமாற்றம்... சத்தமும்கூட.

``என்னாச்சு?!’’ - பதறிப்போய் கேட்டாள் பாரதி.

``ஒண்ணுமில்லம்மா. தெருநாய் ஒண்ணு சென்டர் மீடியன்ல இருந்து விசுக்குன்னு குறுக்கப் பாஞ்சிடிச்சு.’’

``ஐயோ... அடிபட்ருச்சா?’’

``லேசா பட்ருக்கும்னு நினைக்கிறேன்.’’

``பார்த்து ஓட்றதுக்கென்ன?’’

``பார்த்துதாம்மா ஓட்றேன்... தெருநாயுங்க பெருத்துப்போச்சு. அரசாங்கம்தான் கட்டுப் படுத்தணும்.

கருத்தடை ஊசி போட்டுட்டதா பொய்க்கணக்கு எழுதிட்டு, காசை அவங்கல்ல எடுத்துக்கிறாங்க’’

- அலட்சி யமாய்ப் பேசிக்கொண்டே காரை ஓட்டிய அவனை, பாரதிக்கு சுத்தமாய்ப் பிடிக்க வில்லை.

``நீ முதல்ல காரைத் திருப்பு... அந்த நாய் அடிபட்ட இடத்துக்குப் போ’’ என்றாள்.

அவன் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

``மேடம்...’’

``முதல்ல திருப்பு... நான் அந்த நாயைப் பார்க்கணும். பாவம், அது இப்ப எந்த நிலையில இருக்குதோ!’’
 - கசிந்த குரலில் அவள் பேச, காரை யுடர்ன் அடித்து பக்கத்து டிராக்கில் செலுத்தியவனாக ஓட்டத் தொடங்கியிருந்தான் அந்த டிரைவர்.

இருளில் இடத்தைக் காண்பது சிரமமாக இருந்தது. நல்ல வேளையாக எதிர்ச் சாரியில் வரும் வாகன வெளிச்சத்தில் அந்த நாய் சாலை ஓரமாகக் கிடப்பது தெரிந்தது.


காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, துப்பாக்கித் தோட்டாக்களாய்ப் பறக்கும் இடை வாகனங்களைக் கடந்து அதன் அருகே சென்றபோது, அதன் பின்னிரு கால்களும் டயர் ஏறி இறங்கியதில் நைந்துவிட்டிருந்தன. தன் செல்போன் டார்ச்சால் அதைக் கூர்ந்து கவனித்த பாரதிக்கு, மளுக்கெனக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.

அந்த நாயும் இளைப் பெடுத்ததுபோல் கிடந்தது. உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்பதுபோல் இருந்தது அதன் பார்வை.

பாரதி, தன்னையும் மறந்து அருகில் இருந்த அரவிந்தன் தோள் மேல் முகம் புதைத்து அழத் தொடங்கிவிட்டாள்.

அரவிந்தன், அந்த நொடி அவளை ஒரு தேவதையாகத்தான் உணர்ந்தான். அவளுக்குள்தான் எவ்வளவு கருணை!

  `கருணை பெரிது என்று நான்கூட கருத்தைத்தான் கொண்டிருக்கிறேன். இவள்போல உணர்வு துடிக்கவில்லையே!’ அவனுக்குள் கேள்வி எழுந்து அடங்கியும்போயிற்று.

அவர்கள்மேல் அவ்வப்போது வாகனங்களின் ஹெட் லைட் வெளிச்சம் படுவதும் மறைவதுமாய் இருந்தது. டிரைவருக்கு தேவையேயில்லாமல் நிற்பதுபோல் தோன்றியது.


 துடிக்கும் அந்த நாய் அவனை மட்டும் எதுவும் செய்யவில்லை. தன்பாடே பெரும்பாடு என்று இருப்பதுகூட காரணமாக இருக்கலாம்.

``பாரதி...’’

``ம்’’

``இப்ப என்ன பண்ணலாம்கிறே?’’

``தெரியல அரவிந்தன்... பாவம்ல! வலியை நாமகூட அழுது கடத்திடுவோம். இதால அதுகூட முடியல பாருங்க.’’

``கொஞ்ச நேரத்துல இது செத்துடும். இதோட தலையெழுத்து இப்படி... நாம என்ன பண்ண முடியும்?’’

``இந்தத் தலையெழுத்துப் பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம் அரவிந்தன். எல்லாத் துக்கும் நம்ம அலட்சியமான மனோபாவம்தான் காரணம்’’

 - அவள் சொல்லும்போதே அதன் திறந்த விழிகள் மூடிக்கொள்ள, அதன் உயிர் முற்றாய்ப்  பிரிந்தது.

``செத்துடுச்சு மேடம்... இனி இங்க நிக்க வேணாம்... கெட்டவாடை அடிக்க ஆரம்பிச்சிடும். போலாம் மேடம்’’ என்றார் டிரைவர்.

``வாய மூடு...  நிதானமா ஓட்டியிருந்தா இப்படி ஆகியிருக்குமா? உனக்கு இப்படி ஆகியிருந்தா எப்படியிருக்கும், யோசிச்சுப்பார்’’

 - பாரதி அவன்மேல் மொத்த ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கினாள்.

``என்ன மேடம் நீங்க... ஒரு நாயோடுபோய் என்ன கம்பேர் பண்றீங்க?’’

``உயிர்னு வந்துட்டா என் வரையில எல்லா உயிரும் ஒண்ணுதான். நாய் என்ன... மனுஷன் என்ன?’’

``பாரதி, தயவுசெய்து எமோஷனை கன்ட்ரோல் பண்ணு. நம்ம தலைக்கு மேல எவ்வளவோ வேலைகள். 

இங்க இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்கிறது புத்திசாலித்தனமில்லை’’ என்று அரவிந்தன் அவளை கன்ட்ரோல் செய்யவும், அவள் அவனை வெறித்துப் பார்த்தாள்.

``புறப்படு... இங்க இனி நாம நிக்கிறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை.’’

``இந்த உடம்பை என்ன பண்ண?’’

``நீ என்ன சொல்ல வர்றே?’’

``குறைஞ்சபட்சம் ஒரு குழியைத் தோண்டிப் புதைச்சிட்டாவது போவோம்.’’

``வாட்... இந்த இருட்டுல குழி தோண்டுறதா?’’

``இருட்டோ, பகலோ... நம்பளாலதான இந்த நாய் இப்படி ஆச்சு?’’

``பாரதி...’’

``அப்படியே விட்டுட்டுப் போறது முதல்ல சிவிக்சென்சா? சொல்லுங்க அரவிந்தன்...’’

இருவரின் இடையே டிரைவர் தனியே போய் தலையில் அடித்துக்கொண்டான்.

``ஓ.கே... நீ கார்ல உட்காரு. நானும் டிரைவரும் எல்லாம் செய்றோம்.’’

``நோ... நானும் ஏதாவது செய்வேன்... இல்லைன்னா என்னை என்னால நேசிக்க முடியாது அரவிந்தன்’’
 - அவள் இறுதியாகச் சொன்ன சொற்கள், அவன் மனதில் ஒரு மின்னலைத் தோற்றுவித்தன.

அவள் தோளை இறுக்கமாய்ப் பிடித்தவன் ``பாரதி, சிம்ப்ளி யு ஆர் கிரேட்... கமான் - முதல்ல ஒரு மண்வெட்டிக்கு வழிய பார்ப்போம்’ என்றபடி களத்தில் இறங்கிய அவர்களுக்கு,
சாலையோர வீடு ஒன்றில் மண்வெட்டி கிடைத்தது.

சாலை ஓரமாகவே காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் குழியைத் தோண்டி அந்த நாய் உடலைப் போட்டு மூடிவிட்டு, மண்வெட்டி தந்த வீட்டிலேயே நீர் வாங்கி முகம் கழுவிக்கொண்டு ஃப்ரெஷ்ஷானவர்கள், காரை நோக்கி நடந்தபோது அந்த வீட்டுக் கிழவி சொன்னாள்...

``நீங்க எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம். ஏன்னா, நீங்களே கோயில்தான்’’ என்று.

அரவிந்தன் அதை ரசித்தான். காருக்குள் ஏறப் போனபோது டிரைவர் சீட்டில் பாரதி ஏறினாள்.

``நானே இனி ஓட்டிக்கிறேன். திருச்சியில இறக்கி விடுறேன். உன் சம்பளத்தோடு சென்னைக்குப் போக டிக்கெட் சார்ஜையும் வாங்கிட்டுக் கிளம்பு’’

 என்றவள், அவன் பதிலைக் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் காரைக் கிளப்பினாள்!

சென்னை விமானநிலையம். கத்தார் ஏர்வேஸின் அந்தக் கம்பீரமான விமானம், ரன்வேயில் தீப்பொறி பறக்க இறங்கி 350-க்கும் மேலான பிரயாணிகளை அந்த நள்ளிரவில் உதிர்த்தபோது,
 அதில் இருவராய் சாந்தப்ரகாஷும் சாருபாலாவும் இருந்தனர். சாந்தப்ரகாஷிடம் பொலிவேயில்லை.

சாருபாலா நெற்றியில் அவள் வீட்டைவிட்டுப் புறப்படும்போது இட்டிருந்த விபூதித்தீற்று
அப்படியே இருந்தது.

பயணத்தின் இடையில் டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்துக் கொண்டபோதும் நெற்றிப்பக்கம் கையைக் கொண்டுசெல்லவில்லை.

லக்கேஜோடு வெளியே வந்தவர்களை ரிசர்வ் செய்திருந்த ஸ்டார் ஹோட்டலின் கார் டிரைவர் காத்திருந்து அழைத்துக்கொண்டு போனார்.

பல
வருடங்களுக்குப் பிறகு சாருபாலா முகத்தில் சென்னைக்காற்று படுகிறது. சாந்தப்ரகாஷ் இறுக்கமாகவே இருந்தான். அவளுக்கோ இனிமேல்தான் எல்லாமே இருக்கிறது என்பதுபோல் ஓர் உள்ளுணர்வு.

கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 1.30. அமர்ந்தே வந்த ஜெட்லாக் என்னும் களைப்பு. அந்தக் களைப்போடு காருக்குள் சாந்தப்ரகாஷைப் பார்த்தாள்.

``என்ன சாரு?’’

``ஹோட்டலுக்குப் போய் ஒரேடியா படுத்துடாதே. பொழுது விடியவும் நம்ப பங்களாவுக்குப் போறோம்.’’

``நம்ப பங்களாவா... மிஸ்ரா காதுல விழுந்தா உதைப்பான்.’’

``பங்களா நமக்குச் சொந்தமில்லாம இருக்கலாம். ஆனா, உங்க தாத்தாவோட சமாதியும் அந்தத் தோட்டமும் நம்ம சொந்தம்தான்.’’

``ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே! அங்க நமக்கு இப்ப கைப்பிடி மண்கூட சொந்தமில்லை. எல்லாத்தையும்தான் வித்துப் பணத்தை வாங்கி பேங்க்ல போட்டாச்சே.’’

``அதைத் திருப்பிக் கொடுத்து, தோட்டத்தைத் திரும்ப வாங்கிடுவோம்.’’

``என்னாச்சு உனக்கு... பேசாமப் படு. மிச்சத்தை நாளைக்குப் பேசிக்கலாம். ஐ’யம் ஸோ டயர்டு.’’

``எனக்கும் டயர்டாதான் இருக்கு சந்து. அதுக்காக தூங்கிப் பொழுதக் கழிக்க என்னால முடியாது. எதுக்கு வந்திருக்கோமோ அதைச் செய்யணும்.’’

``நாம இனி என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்? நம்ப பிள்ளை மாறப்போறானா என்ன? நம்ம தலைமுறையோடுதான் எல்லாம் முடியப்போகுதே!’’

என்ற சாந்தப்ரகாஷ் குரலில் பெரிய அளவில் சோகம். சாருபாலோவோ அந்த அறையின் டேபிள் மேல் தங்கள் குலதெய்வமான பொன்னாச்சியம்மன் படத்தையும், தாத்தாவின் ஜீவசமாதி புகைப்படத்தையும் நிமிர்த்தி வைத்தாள்.

அதில் சமாதிப் படத்தைப் பார்த்த சாந்தப்ரகாஷ் ``ஏய் இந்தப் போட்டோ எப்படிக் கிடைச்சுது?’’ என்று கேட்டான்.

இறையுதிர் காடு - 24

``சென்னையில இருக்கிற என் அத்தை மகன் மனோகருக்கு போன் பண்ணிச் சொல்லி, போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பச் சொன்னேன்.

வித் இன் 24 ஹவர்ல செய்து முடிச்சிட்டான். போட்டோவை பேடன்ரூஜ் டவுன்டவுன்-ல இருக்கிற போட்டோ ஷாப்ல கொடுத்து ஃப்ரேம் பண்ணி வாங்கினேன்.’’

``இதையெல்லாம் நீ சொல்லவேயில்லையே சாரு.’’

``அதான் இப்ப சொல்லிட்டேன்ல.’’

``எப்படி சாரு நீ இன்னும் டிப்பிக்கல் இண்டியன் வுமனாவே இருக்கே?’’

``அதுல ஒண்ணும் தப்பில்லையே!’’

``என்ன பிரயோஜனம்... நாம யாருக்குப் பெருசா துரோகம் செய்தோம், எதனால நமக்கு இந்தத் தண்டனை?’’

``புலம்ப ஆரம்பிச்சிடாதே சந்து... நிச்சயம் நமக்கு நல்லது நடக்கும். அந்த விதிப்பாடு இருக்கிறதாலதான் திரும்ப இந்த மண்ணுக்கு வந்திருக்கோம்!’’

``இனி நமக்கொரு நல்லதா..! எல்லாம்தான் முடிஞ்சுபோச்சே... உயிரோடு தூக்கிக் கொடுத்துட்டோமே.’’

``கொஞ்சம் பேசாம இரு... ஏதாவது நல்லதா நடக்கும். இல்லைன்னா கனவுல தாத்தா வந்து கூப்பிடுவாரா?’’

 - அப்படிக் கேட்ட நொடி, சாருபாலாவுக்குத் தலையைச் சுற்ற ஆரம்பித்தது. அவன் மேலேயே மயங்கி விழுந்தாள்.

- தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன், -ஓவியங்கள்: ஸ்யாம்