பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை

ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை

30.05.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

கொன்றைப்பூ மரம், இலைகள் இல்லாமல் வறண்டுபோய் இருந்தது. வாசல் முழுக்க பழுத்த இலைகள் சிதறிக் கிடக்க, ரேச்சல் நின்றவாறே அதைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவள் இடுப்பு உயரத்துக்கு இருக்கும் பெருக்குமாற்றை வாங்கவென்றே மார்க்கெட் போய் வாங்கிவந்திருந்தாள்.

``பத்து ரூவா வாரியலுக்கு, முப்பது ரூவா செலவழிச்சிப் போவா பாதகத்தி’’ என்று, பக்கத்து வீட்டு சீதாலெஷ்மி சொல்வாள்.

``பவளமல்லிப் பூவுக்கு, பெயர் சொல்ல முடியாத ஒரு மென்மை இருக்கும். ரேச்சலின் உடல் இயல்பாகவே அப்படி இருக்கும்’’ என  ஆல்பர்ட் அவள் விரல்களைப் பிடித்துக்கொண்டு சொல்வதுண்டு. அப்போதெல்லாம் அவன் விரல்கள் அவளுடைய விரல்களைப் பிரித்துப் பிரித்துச் சேர்க்கும். பிறகு, உள்ளங்கையை விரித்து ரேகை பார்ப்பதுபோல் உற்றுப் பார்ப்பான்.

ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை
ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை

கொன்றைமரச் சருகுகள் பெருக்கப் பெருக்க, பூமியின் உள்ளங்கைபோல் இருந்தது.

``இப்டி ஒரு வாழ்க்க நீ வாழ்ந்திருக்கவே வேணாம் ரேச்சல்.”

சீதா அடிக்கடி ஆரம்பம் முதலே சொல்வாள். `ஆல்பர்ட்டின் இரண்டாவது மனைவி’ என்று எல்லா இடங்களிலும் சொல்லிக்கொள்ள முடியாத நிலையை சீதா, ரேச்சலின் சுயமரியாதையோடு தொடர்பு படுத்திப் பார்த்தாள். தெரு விளக்குகள் மட்டும் விழித்திருக்கும் இரவுகளில், தண்ணீர் குடிக்கும் சாக்கில் சூட்கேஸில் இருக்கும் அவனது புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தி ருப்பதை சீதாவிடம் சில நேரம், மதிய நேரம் படுத்தபடி பேசிக்கொண்டிருக்கும்போது காறித் துப்புவாள்.

``இது ஒரு பொழப்பு... அசிங்கமாய் இருக்கு.”

``ஆமா... வாழ்ந்தாதான் தெரியும் சீதா. அன்பு எப்டி அசிங்கமாகும்?”

``வெளியில சொல்வாரா உங்க ஆள்,  `இவ என் பொண்டாட்டி!’ன்னு. அட ஒண்ணாம் ரெண்டாம் வுடு...’’

``அவர் சூழல்.”

``ஆஹ்... அப்ப மொதல்லயே யோசிச்சிருக்கணும்.”

``அவர் ஒண்ணும் கல்யாணம் செஞ்சிக்க நினைக்கலை.”

``த்தூ... இதையும் வெட்கமில்லாம சொல்லு... உங்களுக்கெல்லாம் இந்தப் புஸ்தகம் படிச்சிப் படிச்சி மற கழண்டுபோவுது.”

``நான்தான் கல்யாணம் கட்டிக்காமலாம் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுக்காகவே தாலி கட்டினார். நான் வேணாம்னு நினைச்சிருந்தா, அவர் அதைச் செஞ்சிருக்க மாட்டாரில்ல?’’

``அடங்கொப்பனே... தாலி, கீலிலாம் சும்மான்னு பேசும்.”

``ஆமா... இப்பமும் ஆமா. ஆனா, அவர் கட்டின செயின் இல்ல... அவரே என் நெஞ்சு மேல தவழ்ற மாரி இருக்கும்.”

``அட த்தூ... அப்டி கண்ண மூடிட்டுச் சொல்றப்ப உசிர் வந்து கண்ணுல வழியுது பாரு... அப்டி என்னடீ இருக்கு அந்தாள்ட்ட?”

``அந்தாளா... உங்காள்னு சொல்லு.”

``க்கும்... இதுவேறயாக்கும்! ஊர் ஏத்துக்குமா?”

``பொல்லாத ஊரு... எத ஏத்துக்கிச்சு?”

``ஆமா... நான் இப்ப ரெண்டு புருஷனை வெச்சிட்டு வாழ்ந்தா, நீ படி ஏத்துவியா?”

``ஏன்... படிக்கு என்ன ஆச்சு? நீ ஏறவேண்டியதுதானே.”

சீதா வேகமாக வந்து முதுகில் நாலு சாத்து சாத்தினாள். ``சிலை வைய்டி அந்தாளுக்கு... வைச்சிட்டு,  காக்கா கீக்கா போனா மேல படாதைக்கு குடை பிடிச்சிட்டு உக்காந்துக்க. உன்னைக் கடைசி வரைக்கும் வெச்சுப் பாப்பாரா? எனக்கு எல்லாம் தெரியும்... அதான் திருவிழாவுல பார்த்தேனே. அந்தப் பொம்பளை யோட வர்றப்ப வயசுக்கு வந்த மாரி கால் பெருவிரலயே வெறிச்சுட்டு பின்னாலயே போறார்.”

``அவர் மனசு, என் பக்கமில்ல நடந்துட்டு வந்துச்சு... நீ பார்க்கல?”

அவள் மேற்கொண்டு டிவி-யில் `இதயம்’ படத்தில் முரளி `பூங்கொடிதான் பூத்ததம்மா...’. பாடலைப் பார்த்தாள். பாடல் வரிகளை முணுமுணுத்தபடி,  உடலை எஸ் வடிவத்தில் சுருக்கி, கழுத்தை மேல் நோக்கித் திருப்பிப் பார்த்தாள்.

``என்னன்னாலும் உங்காள் முரளி மாரி வருமா... முரளின்னா முரளிதான். அதர்வா நல்லாதான் இருக்காப்ல. ஆனா, அவங்கப்பா முக லட்சணம் இல்லை. இல்லடி ரே?”

சீதா மிகவும் அந்நியோன்யமாகப் பேசும்போ தெல்லாம் பேரைச் சுருக்குவதை ரேச்சல் கவனித்ததுண்டு. `பிரியங்களின் மொழி எதுவாக இருந்தால் என்ன?’ என்று இவளுக்குத் தோன்றும். ஆல்பர்ட் சில நேரம் கூட்டங்களில் பொதுவாகப் பேசுவதும் பார்ப்பதும் தனக்காகத்தான் என்று இவளுக்குத் தெரிந்ததுபோல.

``ரேச்சல்... இந்த மாசம் உனக்கு செலவுக்கு எவ்ளோ ரூவா வேணும்?”

``வேணாம்... இருக்கு.”

``நான் கொடுத்து ரெண்டு மாசமாச்சு.”

``எனக்குத் தையல்ல காசு வந்துச்சு. வேணாம்.”

``ஏனாம்... எங்க பணம் கேடுகெட்டதாக்கும்?”

``யேசுவே... என்ன பேசுற நீ? ஏதாச்சும் சொல்வாங்க, காசுக்காகத்தான் நான் உங்கூட இருக்கிறேன்னு.”

``இருந்திருவியா? ஏன் ரேச்சல்... நீ பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன எங்கிட்ட வரல?”

``அப்ப நான் உன்னைப் பார்க்கலையே!”

ஆல்பர்ட் அவள் விரலைத் தன் விரலால் கோதிவிட்டபடி இருப்பவன், சட்டென நெற்றியில் முத்தம் வைத்து ``நீயும் நானும் சாகிற வரைக்கும் பிரியக் கூடாதென ஆண்டவரை வேண்டிக்கோ.”

``அவரை ஏன் தொந்தரவு செய்ற? அவருக்கு வேற வேல இருக்கு. பொம்பளப் புள்ளங்க வேற சாதியில கட்னா வெட்றாங்க. பொம்பளப் புள்ளயைக் கூட்டிட்டுப் போயி போட்டோ எடுத்து நெட்ல போடுறானுங்க. அதெல்லாம் தீர்க்கச் சொல்லு மொதல்ல.”

``சீதா சொன்னாளா?”

``சீதாவும் சொல்லல... ராமரும் சொல்லல. நான்தான் சொல்றேன். நீயும் நானும் மனசுல திடமாயிருந்தா, யாரா இருந்தாலும் பிரிக்க முடியாது.”

ஆல்பர்ட்டையே ரேச்சல் பார்த்தபடி இருக்க, அவன் ``என்ன?’’ என்று கேட்டவுடன், `ஒண்ணுமில்ல’ என்று மட்டும் தலையசைத்தாள். ஆனால், அன்றிரவு ஜபிக்கையில் ``ஆண்டவரே... நான் பெரிய பருப்பு மாரி ஆல்பர்ட் முன்னால பிரிஞ்சிடுற பயம் இல்லாத மாரி பேசினேன். ஆனா, எனக்கு நிறைய இருக்கு. என்னோட எந்த பலவீனமும் என் சுயநினைவு போனாக்கூட அவருக்குத் தெரிஞ்சிடக் கூடாது ஆண்டவரே. நடுராத்திரி அவர் இருக்காப்ல நினைச்சு, பக்கத்துல விரலால துழாவுறப்ப, அவருக்கு அங்கே மார்ல கை ஊர்ந்த மாரி இருக்குமான்னு கேட்கத்தோணும். செத்தாலும் கேட்க மாட்டேன் ஆண்டவரே. அவர் என்னை விட்டுப் போயிரக் கூடாது” என்று அழுது ஜபித்தாள்.

கண் முன்னால் சீதாலெஷ்மி டம்பளரை நீட்டியபடி ``ஆண்டவர்கிட்டயே டீலா? சரி... சரி... கொஞ்சம் காபிப்பொடி கொடு” என்று நின்றாள்.

எதுவும் சொல்லாமல் எழுந்தவள், சீதாவைக் கட்டிக்கொண்டு அழுதாள். சீதா எதுவுமே சொல்லாமல் நிற்க, அவளே அழுது... அவளே தேம்பி... பிறகு அவளே போய் காபிப்பொடியை எடுத்துக் கொடுத்தாள்.

``சும்மாதான் சிரிக்கேன் சீதா. இந்தக் கண்ணீர்தான் நிஜம். ஒத்தப்புள்ளய ரெண்டா பிய்க்க மனசில்லாம அவ குழந்தைதான்னு ஒரு தாய் சொன்ன மாரி, பைபிள்ல ஒரு கதை உண்டு. அதுமாரி சொல்லிட்டுப் போயிடலாம்னு இருக்குதுதான். ஆனா, அவரு இல்லாம... அவரு என்னை கண்ணை இடுக்கிட்டுப் பார்க்க வந்துடுவார்ங்கிற நினைப்பில்லாம என்னால வாழ முடியாது.’’

ரேச்சல் சர்ரென மூக்கு உறிஞ்சிக்கொண்டே ``நேத்துதான் வாங்கிட்டு வந்தேன் காபித்தூளை. சிக்கரி கெடையாதுடி. ஒரு கரண்டி போடு போதும்.”

ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை
ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை

``சரி... நீ அழுவாத. அப்புறம் காபிப்பொடிய கேட்டதுனாலதான் அழுதுட்டியோன்னு தோணும்.”

ரேச்சல் தானே சிரித்தபடி பெருக்க, மேலிருந்து மழை தூறுவதுபோலிருக்க, நிமிர்ந்து கிளைக்குள் பார்த்தாள்.  கொன்றைமரக் கிளை நடுவே ரேச்சலை ஒரு காக்கா உற்றுப் பார்த்தபடி அவள் கீழே வரவும் தலைக்கு மேல் எச்சம் போட்டது.

``ச்சீ..!’’ என்று அவள் எரிச்சலாகி, வாரியலை வீசிவிட்டு மரத்தடி பைப்பில் தண்ணீர் பிடித்துத் தலையை அலச, பறவைக் கழிவின் வாடை வயிற்றைப் புரட்டிற்று. பக்கத்துவீட்டு கேட்டினுள் நுழையும் சீதா, இவள் வாந்தி எடுப்பதைப் பார்த்து, ``என்னடி... நான் டவுனுக்குப் போயிட்டு வர்ற துக்குள்ள நீ வாந்தி எடுக்கியாக்கும்?”

``உனக்கு பொழுதுக்கும் நக்கலும் பிடுங்கலும்தான் வாழ்க்க போ! மளிகைப் பொருள் வாங்கிட்டியா?”

``எல்லாம் சரி... உங்க ஆளை ஒரு வாரமா காணும்? நீயானா வாந்தி எடுத்துட்டு இருக்க? எங்க... மூத்த பொண்டாட்டி வீட்ல டேரா போட்டுட்டாரா?”

ரேச்சல் பதில் சொல்லாமல் அமைதியாக, சீதா அவள் கேட்டினுள் மளிகைப்பொருள் பையை வைத்துவிட்டு இவளின் கேட்டைத் திறந்து உள்ளே வந்தாள்.

``பெருக்கு பெருக்கு... நான் மட்டும் உன் இடத்துல இருந்தேன்னா, பக்க பக்கன்னு நாலு இழுப்பு.”

``யார?”

``ஆஹ்... அந்தாளத்தான்!”

``தண்ணி குடிக்கியா... ஏன் இப்ப இவ்ளோ ஆவேசம்?”

``இதெல்லாமே உனக்கு வர வேண்டிய ஆவேசம்கிறதுதான் எனக்கு ஆவேசமே. அந்த ஆளு உன்னை நல்லா வெச்சு செய்றான். அவன் அந்த மூத்தாளுக்குத்தான் முக்கியத்துவம்லாம் கொடுக்கான். எங்களுக்குத் தெரியாதாக்கும்? உனக்கு புத்தியில்லை.”

``விடு சீதா... காபி குடிக்கியா?”

``எத்தனை அபார்ஷன் செஞ்சிருக்க?”

``ஆஹ்...?”

``எத்தனை அபார்ஷன் செஞ்சிருக்கன்னு கேட்டேன்?”

``நாலு.”

``அந்தாளு ஆஸ்பத்திரியிலகூட இல்லை. அப்டிதானே?”

``டீ போடட்டா?”

``காபி டீ ஆயிருச்சு பாரு.”

ரேச்சல் பதில் சொல்லாமல்  கலங்கும் கண்களை மறைக்க,  சீதா அவளை அணைத்துக்கொள்கிறாள். அவளது அணைப்பு தந்த இதத்தில் ரேச்சலுக்குச் சட்டெனக் கண்ணீர் வழிய, அதைச் சட்டெனத் துடைத்துக்கொண்டு, ``வா உள்ளே... சூப்பரா காபி போடுறேன்.”

சீதா அவளையே உறைந்தாற்போல் பார்க்க, அவள் சீதாவின் பார்வையைத் தவிர்க்க என்றே சட்டென உள்ளே போகிறாள்.

சீதா கண்களை மூடியபடி இருக்க, வாசலில் இருபது வயதுப் பையன் ஒருவன் தயங்கியபடி இருக்க...

``யாரு?”

உள்ளே சமையலறையில் காற்றைக் கீச்சும் சத்தத்தோடு வாசனை உரசியபடி பால் காய்கிறது. ரேச்சலுக்கு, அதை மீறி சீதாவின் குரல் கேட்கிறது. சட்டென அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ரேச்சல் எட்டிப்பார்த்ததும் அவளுக்கு யார் எனத் தெரிந்துவிட்டது.

``வா அம்ப்ரோஸ்.”

அவனுக்கு உள்ளே கேட்டைத் திறந்து வருவதில் நிறைய தடுமாற்றம் இருந்தது. அவனின் கண்கள் ஆல்பர்ட் போலவே இடுக்கினதாக இருப்பதை சீதா உணர்ந்து, சட்டென இவளைப் பார்க்க இவள் பெரும் பதற்றத்துடன் நாற்காலியை எடுத்துப் போடுகிறாள். அவன் உள்ளே படி பக்கமாய் நின்று ``உங்ககிட்ட பேசணும்’’ என்று சொல்ல, ``உக்காருப்பா’’ என்று இவள் சொல்வதை, சீதா வாயை லேசாகப் பிளந்து பார்க்கிறாள்.

``சொல்லுப்பா... காபி குடிக்கியா டீயா?”

``இல்... இல்லை... வேணாங்க.”

``சீதா, காபி போடேன். பால் காச்சிட்டேன்.”

சீதா விசித்திரமாய்ப் பார்த்தபடியே உள்ளே எழுந்து போக, அவன் தானாகவே பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தான்.

``வந்து...”

``என்னப்பா?”

``இல்ல... காலையில இருந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உங்களை வெச்சி சண்டை. அப்பா ஒண்ணுமே பேச மாட்டேங்கிறார் அப்பருந்து. அதான்...”

இருவருக்குள்ளும் மெல்லிய திரை ஒன்று
கிழிந்துகொண்டிருந்தாற்போலிருந்தது. அவன், கூட்டி வைத்திருந்த கொன்றைமரச் செத்தையைக் காற்றடித்துக் கொண்டுபோகும் திசையை, கண்கள் மூடாமல் இடுக்கியபடி பார்த்திருந்தான்.

``அப்பா உங்களை மறக்காது. உங்களைப் பார்த்துட்டு வந்தா, பாட்டு பாடிட்டே இருக்கும்.”

``....”

``நான் சரி தப்புன்னு எதையும் சொல்லல... உங்கட்ட சண்டைபோடல்லாம் வரல.”

சீதா, காபி எடுத்துக்கொண்டு வர,

``இது சீதா... பக்கத்து வீடு.”

அவன் வணக்கம் சொல்லிவிட்டு காபி டம்பளரைக் கையில் எடுத்து, இப்போது ரேச்சலைக் கொஞ்சம் பிரமிப்புடன் பார்த்தான். சீதா அங்கேயே திண்ணையில் உட்கார்வது அவனுக்கு ஏதேனும் அசெளகர்யத்தைத் தரக்கூடும் என்று ரேச்சல் பார்க்க, அவன் இயல்பாய் உதட்டைக் குவித்து காபியை ஊத, இவளுக்கு ஆல்பர்ட் ஞாபகம் வந்தது.

``இவ்ளோ சூடா தராத ரேச்சல். வாய் பொக்குது பாரு. ஸ்ஸ்ஸ்...”

``வாய் பொத்தா கைவசம் மருந்திருக்கு. எடுத்து வுடவா?”

``நல்ல பொம்பளையா பேசுடி ராட்சசி.”

அவன் ஏதோ சொல்ல, சட்டென சுதாரித்துக்கொள்கிறாள் ரேச்சல். ``என்னப்பா?”

``நீங்க மட்டும்தான் தனியா இருக்கீங்களா?”

``ஆமாப்பா. வந்து...”

சீதா குறுக்கே புகுந்து ஏதோ சொல்லப்போக, ரேச்சல் தடுத்து,

``அம்மா இறந்து ஆறு வருஷமாச்சு.”

ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை
ஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை

``அப்பா வந்தா மட்டும்தான் உங்களுக்கு ஆளுகூட இருக்கிற மாரி இருக்குமில்ல... எனக்குப் புரியுது... தனியா இருக்கிறது என்னால எப்பவுமே முடியாது. எல்லாரும் ஊருக்குப் போனா, தனியா இருந்தேன்னா நமக்குத் துணை அனிருத்தான். சத்தமா பாட்டு வெச்சிட்டு பாடிட்டு இருப்பேன். ஆனா, அவர்கூட என்னைவிட ஒல்லிப்பீச்சானாதான் இருக்கார். ஆனா...”

``என்ன அம்ப்ரோஸ்?”

``வந்... வந்து... நான் ஏன்... எதுக்கு வந்தேன்னா?”

``சீனி சரியா இருக்காப்பா?”

8 மணி பஸ் கடந்து போனது. சமாதானபுரம் வழியே போகும். இவன் போனால்கூட மார்க்கெட்டில் இறங்கிக்கொள்ளலாம். ஆனால், சொல்லத் தயக்கமாய் இருந்தது. இவள் அதையே பார்ப்பதைப் பார்த்த அவன் ``அடுத்த டிரிப்ல போலாம் இல்ல” என்று அவனாகவே சொல்லிக்கொண்டான்.

``என்னமோ சொல்ல வந்தியே!”

``இல்ல... உங்களுக்கு ஓகேன்னா... ஒரு தடவ... வந்து அம்மாவ நேர்ல பார்த்துப் பேச முடிமா? நான் ஏற்பாடு செய்றேன். ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்காமலேயே பேசிக்காமலேயே எவ்வளவு கோபம் வெறுப்பு எல்லாம். அப்பா எப்பவும் சிரிச்சிட்டு இருப்பார். ரெண்டு நாளா யார்கிட்டயும் பேசறதில்லை. இதுக்கா வாழ்றோம்... ஆஹ்...?”

அவன் பேசிவிட்டு காபியை சர்ரென இழுத்தான். ரேச்சல், சீதாவைப் பார்க்க அவள் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

``என்னை... என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க.”

``சச்ச... இல்லைப்பா. என்னிக்குன்னு சொல்லு. நான் அம்மாவைப் பார்க்கிறேன். அப்பாவுக்குச் சொல்லிருவதானே?”

``நான் இந்த வழியா ஸ்கூல் படிக்கிறப்ப போவேன். என்கூட சசின்னு ஒரு பொண்ணு, ஈஸ்வரன் தெரு இருக்குல்ல, அங்கே இருந்து வருவா. அவகூட ஒரு தடவை யூனிஃபார்ம் ஆல்டர் பண்ண வந்திருக்கேன். நீங்க என்னைக் கண்டுபிடிக்கல.”

``மனசுல ஆயிருக்காதுப்பா... நீ பெரீய்ய ஆளாட்டம் பேசுற... இல்ல சீதா?”

சீதா பதில் சொல்லாமல் மேலே பார்க்க, அவன் லேசாகப் புன்னகைத்துக்கொண்டான்.

``அப்பல்லாம் எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். நீங்க ரொம்ப நேர்த்தியா விரல்ல நகம் வளர்த்திருப்பீங்க. உங்ககிட்ட `நான்தான் ஆல்பர்ட் மகன்’னு சொல்லணும்னே ஒரு தடவை டவுன் பஸ்ல வந்தேன். தோ... இந்த கேட்டாண்ட இருக்கிற மரம் வரைக்கும் வந்துட்டு அப்புறம் போயிட்டேன். அதுவும் பயம்தான். அப்பல்லாம் அனிருத் மியூசிக் போடல.”

சீதா வெடுக்கென்று ``இதெல்லாம் நல்லதுக்கு இல்லைன்னு தோணுது ரே... வேணாம், அனுப்பிடு. யாராச்சும் அவங்க அம்மாகாரிக்கு ஏதாச்சும் சொல்லிடப்போறாங்க.”

``யார் என்ன சொல்ல முடியும் ஆன்ட்டி? நான் லா படிக்கலாம்னு இருக்கேன். இந்த நாட்ல இருக்கிற எல்லா சட்டத்தையும் அப்டியே ரப்பர் வெச்சு அழிச்சுட்டு, திரும்ப எழுதிட்டா நல்லாருக்கும்னு தோணுது. அதுக்காகவே படிச்சு, இப்ப இருக்கிற எல்லா சிக்கலையும் அவுக்கிற மாரி ஒரு சட்டம் எழுதணும்.”

ரேச்சல் அவனைக் கண்கொட்டாமல் பார்க்க, சீதா முறைத்தாள்.

``இங்கதான் அன்புக்கு ஆம்பள, பொம்பள, கல்யாணம் ஆனவங்க, ஆகாதவங்கன்னு ஆயிரம் இருக்கே. இதுல எந்த ரப்பரை வெச்சி என்னத்த எப்ப அழிக்கிறது, ஆஹ்?” என்றாள் சீதா சுருக்கென்று...
ரேச்சல் பதறிப்போய் ``அவ கோபத்துல சட்டுனு பேசுவா. ஆனா, என்மேல இருக்கிற பிரியத்துலதான். நீ தப்பா எடுத்துக்காதப்பா” என்று சின்ன குரலில் தரையில் நிழல் விழுந்து வழுக்குவதுபோலச் சொல்ல, அவன் சிரித்து `இல்லை’ என்பதுபோல் தலையசைத்தான். சீதா, பெருமூச்சு ஒன்றை இருவருக்கும் இடையில் நழுவவிட்டாள்.

அவன் நீண்ட நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். கொன்றைமரம் அசையவோ இலை உதிர்க்கவோ இல்லை. சீதா டபுக் டபுக்கென விரலில் சுளுக்கு எடுத்துக்கொண்டிருந்தாள். அவன் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான்.

``பஸ் இப்பதானே போயிருக்கு. இருவது நிமிஷம் ஆகாதா திரும்பி வர?”

``இல்ல... வர்றப்ப ரொம்ப யோசனையா வந்தேன், போகவா... வேணாமா? வந்து உங்ககிட்ட கத்தணுமா அமைதியா பேசணுமான்னு. என்ன நடக்கும்னுலாம் இப்பவும் தெரியலை. ஆனா, அமைதியா பேசினது நல்லதுதான்னு தோணுச்சு. நீங்... நீங்களும் என்னை பையன் மாரிதான் என்னப்பான்னு `பா’ போட்டுப் பேசினீங்களா. புடிச்சிருச்சு. மனசு நிம்மதியா இருக்கா... அப்டியே பாளையங்கோட்ட வரைக்கும் நடந்து போயிறலாம்னு தோணுச்சு.”

அவன் கேட்டை நோக்கி நடக்க, ரேச்சல் சட்டென எழுந்து போய் அவன் தோளைத் தொட்டு நிறுத்தி நெற்றியில் சிலுவை போட்டாள். அவன் பேசாமல் நிற்க, அவன் கன்னத்தை இரண்டு கைகளாலும் ஏந்தி முத்தம் கொடுக்க, அவன் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

``தெளிவான பய. அவன் அப்பன் மாரி இல்லாம, மனசுக்கு நல்லா புடிச்ச ஒருத்தியத்தான் காத்திருந்து மொத வாட்டியே கட்டிப்பான்.”

சீதா சொல்லிவிட்டு காபி டம்பளரை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். கொன்றைமரத்தில் உதிர்ந்த இறகு ஒன்று சிக்கியிருக்கும்போல. போகும்போது அம்ப்ரோஸ் அதைத் தட்டிவிட்டுப் போக, அது அவன் கூடவே சிறிது நேரம் துணையாய்ப் பறக்க ஆரம்பித்தது.

- தமயந்தி

ஓவியங்கள்: ஸ்யாம்

(30.05.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)