சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

படிப்பறை

 ஹிட்லர் செய்ததைத்தான் மோடி செய்கிறார்

துபாயில் ராகுலை நிலைகுலைய வைத்த 14 வயதுச் சிறுமி.

வேதங்கள் ஐன்ஸ்டீன் தியரிகளைவிட மேலானவை : ஹர்ஷ வர்தன், பா.ஜ.க முன்னாள் அமைச்சர்.

படிப்பறை

வாட்ஸ் அப் செய்திகளின் சில சாம்பிள்கள் இவை... உலகின் முக்கியமான செய்தி ஊடகமாக வாட்ஸ் அப்பும், பிற சமூக வலைதளங்களும் மாறிப்போன பின், இதுபோன்ற போலி செய்திகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருக ஆரம்பித்துவிட்டன. பகிரப்படும் எல்லாமே செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் உலகத்தில் செய்திகளின் வேகத்தை ஈடுகட்ட, அப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்களும் ஊர்ஜிதப்படுத்தாமல் அவசரகதியில் பதிவு செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். இறப்புச் செய்தியோ பிறப்புச் செய்தியோ, இங்கே யாருக்கும் எதையும் ஊர்ஜிதப்படுத்துதலில் அக்கறை இல்லாமல் போய்விட்டது.

இவற்றில் எது உண்மை, எது பொய் என்னும் அரசியலைத் தோலுரிக்கிறது இந்த India misinformed the true story நூல். இந்த நூலில் பட்டியலிடப்பட்டிருக்கும் போலிச் செய்திகளையும் பின்னணிகளையும் படிக்கும் போது, இவற்றுக்குள் இருக்கும் அலைவரிசை நமக்குப் புலப்படுகிறது. இந்தச் செய்திகளின் முதன்மைப் புள்ளி யார் என்பது தெரிகிறது. நேரு அவரின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டுடன் இருப்பதை, ஒரு பெண்ணை நேரு கட்டிப்பிடிப்பதைப் பாருங்கள் என ஆரம்பித்து ஹாலிவுட் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை சோனியா காந்தியாக மாஃர்ப் செய்தது வரை பல்வேறு செய்திகளை அடுக்குகிறது இப்புத்தகம். பா.ஜ.க, காங்கிரஸ், இந்துத்துவ சக்திகள் என எல்லோரும் வாட்ஸ் அப்பைக் குறிவைத்து போலியான செய்திகளை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள் என்பதை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இப்புத்தகம். இந்தியாவில் வெளியான இத்தகைய போலிச் செய்திகளின் வேர்களை ஆய்வு செய்கிறது. இந்தப் பொய்ச் செய்திகள் எல்லாம் ஒரு சங்கிலித் தொடர்; எங்கோ ஒன்றோடு ஒன்று இணைகின்றன. இந்தச் சங்கிலித்தொடர் ஏன்... எதற்காக... எவ்விதம் உருவாக்கப்படுகிறது... இதனால் பலனடைபவர் யார் என்பதையும் ஆதாரங்களோடு பட்டியலிடுகிறது இந்த நூல்.

டாக்டர் சுமையா சைக், அர்ஜுன் சித்தார்த் ஆகியோருடன் இணைந்து,  Alt news என்னும் செய்தி நிறுவனத்தின் துணை நிறுவனரான பிரதீக் சின்ஹா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகவேனும் வந்திருக்க வேண்டிய ஒரு புத்தகம், ஏப்ரல் மாதம்தான் வெளியானது.

செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் இது. வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்பி, பிறருக்கு ஃபார்வேர்டு செய்யும் அன்பர்கள்... Send பட்டனை அமுக்கும் முன் இந்த நூலை ஒருமுறை படித்துவிடுவது நாட்டுக்கு நல்லது!

India Misinformed The True Story
Pratik Sinha,
Dr Sumaiya Shaikh, Arjun Sidharth
பக்கங்கள் : 270  விலை: 399
வெளியீடு : Harper Collins Publishers India