சினிமா
தொடர்கள்
Published:Updated:

கிக்கி - சிறுகதை

கிக்கி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
கிக்கி - சிறுகதை

கிக்கி - சிறுகதை

கிக்கி - சிறுகதை

தைவிடவும் பொருத்தமான பெயர் எப்படி இருக்க முடியும்? `கிக்கி’ என்று நாங்கள் கூப்பிட்டபோது அதுவும் `கிக்கி’ என்று சொல்லி அதை ஏற்றுக்கொண்டது. இனி யாருடைய சம்மதம் வேண்டும்? ஜோக்குட்டி அதற்கு வேறு பெயரை வைக்க நினைத்திருந்தானா தெரியவில்லை. அதற்குப் பெயர் வைத்தாயிற்று என்று சொன்னபோதும் அவன் அதை கவனித்த மாதிரி இல்லை. சும்மா சிரித்துவைத்தான். அவன் என்று சொல்கிறேன், நியாயமாக அவனை அண்ணன் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஜோக்குட்டிக்கு மட்டுமல்ல, அவன் தம்பி ரேக்குட்டிக்கும் இரண்டு வருடம் இளையவன் நான். `கிக்கி’ என்பது ஒரு துரையின் பேரைப்போலவும் இருக்கிறதுதானே? நான் கேட்டபோது லத்தீப்பும், ராஜேந்திரனும் வேகமாகத் தலையாட்டினார்கள். ஆட்டாமலிருந்திருந்தால் நிச்சயமாக `டூ’விட்டிருப்பேன். இதில் அதியதிசயம் என்ன தெரியுமா, கிக்கியும் சேர்ந்து தலையாட்டியதுதான்.  வேலிக்கல் ஓணான் ஆட்டுவதைப்போல ஆட்டியது. சமயங்களில் யாரும் எதையும் கேட்காதபோதும் அது தலையை ஆட்டிக் கொண்டே இருந்தது. ``இந்தாங்கடா” ஆளுக்கொரு தேக்கரண்டி ‘பூஸ்ட்டுப் பொடி’யை உள்ளங்கையில் கொட்டினான் ரேக்குட்டி. ராஜேந்திரன் ஒரே நக்காக நக்கித் தீர்த்தான். பஞ்சாமிர்தப் பழக்கம். லத்தீப்புக்கு மீசை வந்திருந்தது. நான் சிட்டிகை சிட்டிகையாக எடுத்து வாய்க்குள் போட்டேன், தீர்ந்துவிடுமே! ``பூஸ்ட்டுப் பொடியத் திங்கறதுக்கு இந்தப் பசங்க அந்த அழுக்குதொரைக வீட்டுலயே பழியா கெடக்கறானுங்க’’ என்று ராஜேந்திரனின் அக்கா எங்கள் வீட்டில் வந்து சொல்லி, எனக்கு அடி விழுந்தது. அடி வாங்கிய அன்றைக்குச் சாயங்காலமே பரிகாரமாக ஆறுமுகா தேநீரகத்தில் பாலாடை வாங்கித் தந்தார் அப்பா. பகலெல்லாம் தேநீர் போடும்போது அலுமினியக் கும்பாவில் காயும் பாலை, கரண்டியால் எடுத்து ஊற்றும் முன்பு அனிச்சையாக மேலாப்பில் ஆறி மிதக்கும் பாலாடையை ஒதுக்கிவிட்டு, பாலைச் சேந்திச்சேந்தி ஊற்றுவார் ஆறுமுகண்ணன். ஒதுக்கப்பட்ட பாலாடை ஓரளவு சேரச்சேர அதை மட்டும் மீன் பிடிப்பதுபோலக் கரண்டியில் அள்ளித் தனியாக பாட்டாவில் சேர்த்து வைப்பார். இருட்டுகிற நேரத்துக்குப்போய் பாலாடை வேண்டுமென்று என்னைப்போல் அரைக்கால் சட்டைப் பையன்கள் ஒன்றரை ரூபாய் கொடுத்துக் கேட்டால் அவ்வளவு பாலாடையையும் அள்ளி, கண்ணாடிக் குவளையில் நிரப்பி இரண்டு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு அதே கரண்டியால் `டக்கினி டக்கினி’ என்று  சத்தம் வர அடித்து, குடிப்பதற்கு ஏதுவாய் கால்கரண்டி பாலை ஊற்றி, கனிந்த முகமாக ``இந்தா கண்ணு, சாப்புடு சாமி” என்று வேட்டி நுனியில் தம்ளரைத் துடைத்துத் தருவார். இரண்டு கைகளாலும் அதை ஏந்தி உறிஞ்சிவிட்டு, பன்றியின் வாய்போல உதடு குவித்து `அபூம்சக்கா’ என்று கத்துவேன். அபூம்சக்காவென்றால், பாலாடையின் ருசி அபூம்சக்காவாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நாளாவது லத்தீப்புக்கும், ராஜேந்திரனுக்கும் இந்தப் பாலாடையை வாங்கிக் கொடுக்க வேண்டும். சாப்பிட்டுவிட்டு என்னுடைய `அபூம்சக்கா’வுக்கு மாற்றாக அவர்கள் சொல்லப் போகும் வார்த்தை என்னவாய் இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல இன்னொரு தடவை பூஸ்ட்டுப் பொடியைத் தின்னாமல் அப்படியே எடுத்துக்கொண்டு வந்து பாலாடையில் கலந்து சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ரேக்குட்டிக்கும் ஜோக்குட்டிக்கும் தினந்தோறும் பூஸ்ட்டுப் பொடியைப் பாலில்தான் கலந்து கொடுக்குமாம் சின்னமலரக்கா. அம்மா நிறைய சொல்லும் சின்னமலரக்காவைப் பற்றி. சின்னமலரக்காவுக்குத் தன் பிள்ளைகள் இரண்டும் துரைகளைப்போல வளரவேண்டும் என்று ஆசை. ``அதுக்கு ஆசப்பட்டுத்தான் தொரைய கட்டிக்கிட்டேன் ” என்று சொல்லும். பெல்மாண்டோ துரை வெள்ளைக்காரி மிஸிக்கும்  ரயில்வேக்கார மலையாளி அப்பனுக்கும் பிறந்தவர்.

கிக்கி - சிறுகதை


``ஆல் ரெடி ஐ டோல்டு யூ நோ... ஞான் நேரத்தே  நிந்நோடு பறஞ்ஞிருந்நல்லேடா?” 
 
இங்கிலீஷையும் மலையாளத்தையும் கலந்து கலந்து பேசும் துரைக்கு ரயில்வேயின் சமிக்ஞை, தொலைத்தொடர்புப் பணிமனையில் ஃபோர்மேனாக வேலை. துரைக்கும், சின்னமலரக்காவுக்கும் அடுத்தடுத்து பிறந்த இரண்டு குட்டிகளும் நிறத்தில் துரையைப் போலல்லாது அக்காளை நகலெடுத்தாற்போல் இருந்தனவாம். துரைக்குக் கவலையில்லை. அக்காளுக்குத்தான் ரொம்பவும் விசனமாம். விசனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டு இரண்டுபேரையும் ஆளாக்கத் தலைப்படுகையில் பணிமனையில் துரையின் முதுகெலும்பில் அடிபட்டுவிட, படுத்த படுக்கையானாராம். இரண்டாவது மாதத்தில் துரையின் தங்கை வீட்டிலிருந்து வந்து பாலக்காட்டு ரயில்வே மருத்துவமனையில் வைத்து  மருத்துவம் பார்த்துக்கொள்வதாக அவரைத் தூக்கிக் கொண்டுபோக, சின்னமலரக்காவும்  வீட்டுச்செலவுக்காக  வீதியிலுள்ள பெண்களுக்கு உள்பாவாடை, பாடி இதர சமாசாரங்களை வாங்கி, கால் நடையாகவே நடந்துபோய் விற்கத் தொடங்கியது. அக்காவுக்கு இந்தப் பாவாடை, பாடி, ரவிக்கைத்துண்டுகளையெல்லாம் புடவைக்காரர்தான் கொண்டுவந்து கொடுப்பார். அவர் பெயரே புடவைக்காரர்தான்! வந்தால் கொஞ்ச நேரம் ரேக்குட்டி வீட்டில் இருந்துவிட்டுத்தான் போவார். அவரும் சின்னமலரக்காவும் பாவாடை விற்ற கணக்கு எழுதிக்கொண்டிருப்பார்கள். வீடெங்கும் புதுத்துணியாக இறைந்து கிடக்கும். அப்படியான சமயங்களில் அவரது சைக்கிளை, வீதிக்குத் தள்ளிக்கொண்டுவந்து நானும் ரேக்குட்டியும் குரங்குப்பெடல் போட்டு ஓட்டுவோம். சில சமயம் அவரிடமிருந்து காசு வாங்கி எங்களுக்குக் கொடுத்தனுப்பும் சின்னமலரக்கா. துரையின் தங்கை மகனை வாரிசாக ரயில்வே வேலைக்கு எடுத்துக்கொண்டதாகக் கேள்விப்பட்ட சின்னமலரக்காவுக்கு துரை இறந்துபோன சேதியைச் சொல்லவே இல்லையாம். சிகிச்சைக்கு ரயில்வே  மருத்துவமனையில் சேர்க்கப்படவே இல்லை என்பதும் பின்னால்தான் தெரிந்ததாம். அதற்கு அப்புறம்தான் சின்னமலரக்காவுக்கு ஆங்காரம் கூடிப்போய்  மகன்களை ஆளாக்குவதில் தீவிரம் காட்டியது. `துரைப்பசங்க’ என்று அவள் குறிப்படுவதன் முலமே அவர்கள் துரையின் மகன்களாக அறியப்பட்டார்கள். தெருப்பையன்கள் இவன்களின் தோற்றப்பொலிவைக் கொண்டு `அழுக்கு தொரைக’ என்று சொல்ல அதுவே அவர்களின் அடையாளமாகிப்போனது.

``எவனோ அப்புடிச் சொல்லீட்டுப்போட்டும். நீ அப்படியெல்லாஞ் சொல்லக் கூடாது.” அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறது.

நானும் அப்படிச்சொல்வதில்லை என்பதால்தான் என்னை விளையாடச் சேர்த்திக்கொள்கிறான்களோ என்னவோ?

ரேக்குட்டியின் வீடுதான் எங்களது விளையாட்டுக்கூடம். லத்தீப், ராஜேந்திரன் அப்புறம் நான் மூன்று பேரும் சேர்ந்துதான் ரேக்குட்டி வீட்டுக்குப் போவோம். அபூர்வமாய் சில நேரங்களில் பாப்பக்கா மகள் சாந்தாமணி வருவாள். ஓடியாடி விளையாட ஏதுவாக விஸ்தாரமான வாசலும், வாசலின் ஓரத்தில் ஊதா நிறத்துக் காய்களும் தளிர்களுமாகத் தனித்த வாசனையோடு குட்டையான கருநொச்சிமரம் ஒன்றும் இருந்தது. உட்கார்ந்து விளையாடும் பல்லாங்குழி, பரமபதம், தாயம், அஞ்சு கல்லு, திருடன் - போலீஸ் போன்றவற்றுக்கும், ஒளிஞ்சு விளையாட்டு, நொண்டி போன்ற ஓடிப்பிடித்து விளையாடும் ஆட்டங்களுக்கும் வசதியான வாசல் அது. அங்குதான் `யாரது? பேயது!’ விளையாட்டு ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாகும். பேய் வந்து ஒவ்வொருத்தர் வீட்டுக் கதவையும் தட்டும்!

``டக் டக்”

``யாரது?”

``பேயது!”

``என்னா வேண்டும்?”

``நகை வேண்டும்!”

``என்னா நகை?”

``கலர் நகை”

``என்னா கலர்?”

``நீலம்”

``என்னா நீலம்?”

 ``கர்ரு... நீலம்”

நீலக்கலரில் டவுசர், சட்டை, பாப்பக்கா மகளின் பாவாடை, கழுத்து மணி எது  இருந்தாலும் பேய் வந்து பிடித்துக்கொள்ளப் பார்க்கும். எனவே  பயந்தோடுவோம். என்னிடம் நீலக்கலரில் எதுவுமில்லை என்கிற அசட்டு தைரியத்தில் நிற்கும்போது பேய் வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும்!

“எங்கிட்டதான் புளூ கலரே இல்லியே?”  சிரிப்பேன்.

``உஞ்சட்டப்பைல பாரு”  பேய் சிரிக்கும்.

பேயாக மாறுவதற்கு முன்பு அவன் எனக்குக் கொடுத்த சாக்லேட்!  அதன் உறை நீலத்தில். இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போதுதான் ஜோக்குட்டி அதைக் கொண்டு வந்தான்.

``டக் டக்”

``யாரது?”

``பேயது!”

``என்னா வேண்டும்?”

``நகை வேண்டும்”

``என்னா நகை?”

``கலர் நகை”

``என்னா கலர்?”

``பச்ச”

``என்னா பச்ச?”

``கிளிப்பச்ச” என்று ரேக்குட்டி சொல்லச்சொல்ல, சிரித்துக்கொண்டே வந்தான் ஜோக்குட்டி.

 ``சொல்லு, என்னா வேணும்?”

``நகை வேணும்”

 ``இல்லடா பச்ச வேணும்னியே… என்னா பச்ச?’’ என்றான்.

நான் எரிச்சலானேன். ``இவனுக்கு வெளாட்டே தெர்ல… என்னா வேணும்,  நோன்னா வேணும்னுட்டு  ஒரே ரோதனை.”

ரேக்குட்டியும் சலித்துக் கொண்டே ``ஸ்ஸ்ஸ்... கிளிப் பச்ச… என்னா அதுக்கு இப்போ?’’ என்றான்.

ஜோக்குட்டி  பனியனுக்குள் கையை நுழைத்து அதை எடுத்தான். ரேக்குட்டி சந்தோஷத்தில் அலறினான். ``அய்ய்ய்யா...  டோய்”  சிவந்த மூக்கும் கழுத்து வரியுமாக பைங்கிளிக் குஞ்சு! பனங்காட்டு ஆஸ்பத்திரி மரப்பொந்தில் பிடித்தி ருப்பான். கண்களைச்சுற்றிய  செவ்வரிவட்டம் எத்தனை துல்லியம்? வாயோரத் திலிருந்து தொடங்கி தலைக்குப் பின்பக்கமாகப் போகும் கறுத்த கோடு மிலிட்டரித்தாத்தா மீசை போலவேதான் இருக்கிறது. ஒரு வேளை இது தாத்தாதானோ? கிளியாகப் பிறந்து வந்திருக்கிறானா கிழவன்? வந்த புதிதில் `பேசமாட்டேன் போ’ என்பதாக குனிந்த தலையை நிமிர்த்தாமல் இருந்தது கிக்கி.’ `இரு, உன்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்போறோம்’ என்று அதனிடம் சொல்லிவிட்டார்களோ? விரித்த கண்களை மூடாமல் அதிர்ச்சியிலேயே இருப்பது போல் விழிக்கிறது. ஏதோ ஒரு மந்திரவாதி பத்து வெற்றிலை, இரண்டு குறுமிளகு, ஒரு கோவைப்பழம் எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்கூடையில் போட்டு டபடபவென்று ஆட்டிச் சுழற்றி `அபூ…ம்சக்கா’ சொல்லிக் கவிழ்த்திருக்கிறான். இறக்கைகளை அடித்தவாறு `கிர்ச்சா மர்ச்சா’ என்று கத்திக்கொண்டே தோன்றியிருக்கிறது இந்தக் கிளி. அதைத் தரையில் விட்டான் ஜோக்குட்டி. சிறகின் இறகுகள் சிலவற்றைக் கத்தரித்திருக்கிறான். குட்டையாக ஒழுங்கில்லாமல் தெரிந்தது. அப்படியே கிளி நடந்ததைப் பார்த்தால் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஆப்பி ஆப்பி நடக்கும் மேஸ்திரி தோரணை. ரேக்குட்டி உள்ளேயிருந்து தக்காளி, வெங்காயம் வைக்கிற கம்பிக் கூடையை எடுத்துவந்து இனி இதுதான் கிளிக்கூண்டு என்று பிரகடனம் செய்தான்.  நாட்டு மக்கள் அதைப் புரிந்துகொள்ளும்படி வெளி எறவானத்தில் அதைத் தொங்க விட்டான். அரைவெட்டாய்ப் பழுத்த தக்காளியை உள்ளே போட்டான். சின்னக் கிண்ணியில் தண்ணீர் ஊற்றி வைத்த அடுத்த நிமிடம் மொட்டை இறக்கைகளை விசிறி கிண்ணியைக் கவிழ்த்து விட்டது. கூண்டு ஆடியதில் தூளிக்குழந்தை ஒண்ணுக்குப் போனது மாதிரி கீழே ஒரு நீர்க்கோலம். தக்காளியைக் கொத்திப்பார்த்து விட்டு விதைகளைக் கதக்கியது. நான் உப்புமாவை இப்படித்தான் செய்வேன். உவ்வே!

 கிக்கி எங்களுடன் பழகிவிட்டது. வீட்டிலிருந்து கிளம்பும்போதே பழுத்த மிளகாய்களாகப் பார்த்து ஒன்றிரண்டைப் பொறுக்கி, பையிலிட்டுக்கொள்வேன். கிளி சாப்பிடுகிறது என்பதற்காக மிளகாய் இனிக்கவா செய்யும்? கிக்கி இஷ்டமாய்ச் சாப்பிடுகிறதே? ஆனால் கிக்கி கரும்பு சாப்பிடுவதைப் பார்ப்பதுதான் ரொம்ப அற்புதம். இணுக்கைக் கீறி ஒற்றைக்காலில் நின்று மற்றொன்றில் வாய்க்கு நேராகப் புல்லாங்குழல் வாசிக்கிறவரைப் போலக் கரும்புத்துண்டை வைத்துக்கொண்டு கொறிக்கும். கிக்கி தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துச் சாய்த்து ஒய்யாரமாகப் பார்ப்பதையும். எதிர்பாராதபோது கீ, கீயெனக் கத்துவதையும் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது உதிர்க்கும் இளம்பச்சை இறகுகளில் கொஞ்சமே கொஞ்சம் நீலமும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். பச்சைக்கிளி என்பது வெறும் பச்சையும் சிவப்புமானதல்ல! கொஞ்சம் நீலம், கொஞ்சம் கறுப்பு, கொஞ்சம் வெள்ளை, கொஞ்சம் மஞ்சள் இத்தனை வண்ணங்கள் ஒளிந்துகொண்டி ருக்கின்றன அதற்குள்ளே.

கிக்கி - சிறுகதை

ரேக்குட்டி அதன் நெஞ்சுக்குக் குறுக்காக ஆட்காட்டி விரலை நீட்டினால், கவ்வி ஏறி, தோளுக்குப் போய் நிற்கிறது. எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. என் விரலைக் கடித்துவிட்டது. குறடு மாதிரியல்லவா இருக்கிறது அலகு?

கிக்கி பேச ஆரம்பித்துவிட்டது. பேச்சுக்குப் பேச்சு பதிலெல்லாம் பேசாது. அதற்குத் தோதான சின்னச்சின்ன வார்த்தைகள். ரேக்குட்டியை `கேகுத்தி’ என்றும், சின்னமலரக்காவை `க்கா’ என்றும் கூப்பிடும். காகங்கள் வந்தால் இறக்கைகளை விசிறி அவற்றைப்போலவே `காக்கா, காக்கா, காக்கா, காக்கா’ என்று விடாமல் கத்தி, காகங்களை விரட்டி விடும்வரை கூப்பாடு போடும். `யாரது பேயது’ விளையாடும்போது `என்னா கலர்’ என்றால் போதும், உடனே `பச்ச பச்ச பச்ச பச்ச.’  வேறு ஒரு கலரும் தெரியாது. `பச்ச’தான். இதனாலேயே நாங்கள் அந்த விளையாட்டைக் கைவிட வேண்டியதாயிற்று. `திருடன் போலீஸ்’ விளையாட்டில் கிக்கிக்கு `திருடனை’ப் பிடித்துவிட்டது. திருடன் என்கிற வார்த்தையை அது என்னவாகப் புரிந்துகொண்டதோ தெரியவில்லை. திருடனைக் கண்டுபிடித்ததும் எல்லோரும் சேர்ந்து கும்பலாக `திருடன் திருடன்’ என்று கத்தியதைப் பார்த்து, ‘த்ருடேன் த்ருடேன் த்ருடேன் த்ருடேன்’ என்று எதற்கெடுத்தாலும் கத்த ஆரம்பித்துவிட்டது. பாப்பக்கா வீட்டு ரோஸிப்பூனையைப் பார்த்தாலும் `த்ருடேன்’, வாத்தியார் வீட்டுப் பப்பியைப் பார்த்தாலும் `த்ருடேன்.’ பப்பியைப் பார்த்துக் கத்தும்போது மட்டும் அது குரைப்பது போலவே `லொள், த்ருடேன்... லொள், த்ருடேன்’ என்று சொல்லிக்கோண்டே இருக்கும். பப்பிக்கு சின்னமலரக்கா வீட்டைக் கடப்பதில் ஒரு மாதிரி வெட்கமே வந்துவிட்டது, ஓரக் கண்ணால் கிக்கியைப் பார்த்தும் பார்க்காத மாதிரி நடப்பதைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கும். வாத்தியாரே  கடுப்பாகி ‘இந்தக் கிளிக்கு லொள்ளைப் பாத்தியா, நாயை  நக்கல் பண்ணுது! இரு இரு... ஒரு நா இல்லாட்டி ஒரு நா ஒன்ன சூப்பு வெக்கிறேன் பாரு’ என்று சபதம் செய்தார்.

ஆறுமுகண்ணன் டீக்கடை வாசலில் சுவரொட்டியில் நாயகன் துப்பாக்கியுடன்  நின்றிருந்ததைப் பார்த்து எனக்கு அந்தப் படத்துக்குப் போயே ஆகவேண்டும் என்று ஆவலாகிவிட்டது. புடவைக்காரர் வந்தால் போகலாம் என்றான் ரேக்குட்டி. அன்று முழுதும் வராத புடவைக்காரர் அடுத்த நாள் காலையில் உதவிக்கு ஒரு ஆளுடன் வந்தார். புது ரகங்களையெல்லாம் பிரித்துப்போட, அக்கா ஆர்வமாக உட்கார்ந்து அதில் மும்முரமானது. நாங்கள் சைக்கிளைத் தள்ளியபோது உதவியாள் சிரித்தார். சின்னமலரக்கா நிமிர்ந்து பார்த்தபோது ரேக்குட்டி கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து வட்டமாக்கிக் கண்ணருகே வைத்து, கெஞ்சுவதுபோல் பாவனை செய்து காண்பித்தான்.

அக்கா, ``பொடவகாரரே, பசங்களுக்குக் காசு குடுங்க சினிமாக்குப் போய்ட்டு வர்ட்டும்” என்றது.  புடவைக்காரர் உதவியாளைப் பார்த்துத் தலையை ஆட்டி ``குடுய்யா” என்றார். அந்த அண்ணன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தார்.  நல்ல அண்ணன். உட்டேன் சவாரியென்று திரையரங்கத்தைக் குறிவைத்து ஓடினோம்.

சுவரொட்டி இருந்த அளவுக்குப் படம் இல்லை. ரீல் மாற்றும் நான்கு இடைவேளையிலும் பப்ஸைத் தின்று கலரைக் குடித்தோம்.இன்னும்கூடப் பணம் மிச்சமிருந்தது. வடைக்கு வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த கேன்டீன்காரரிடம் கேட்டு, தட்டைக்கூடையில் கிடந்ததில் பழுத்த மிளகாய்களைப் பொறுக்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டேன்.

சாயந்திரம் வெளியே வந்ததும். ``இப்படியே வீட்டுக்குப் போட்டா” என்றதற்கு ரேக்குட்டி, ``வாடா வெளாண்ட்டுப் போலாம்” என்றான் . ``அம்மா தேடுன்டா” நெஞ்சைச் சொறிந்தேன். படத்தில்  நாயகனை வில்லன் கூப்பிடுவது போலவே `வா மாப்புளே’ என்று கூப்பிட்டு சட்டையைப் பற்றி இழுத்தான். நாயகன் சவப்பெட்டியை இழுத்துக்கொண்டு நடப்பதுபோலவே நடந்து காட்டினேன். வழி பூராவும் சிரித்துக்கொண்டே வந்தோம்.

ரேக்குட்டி வீட்டுக்குள் துணியெல்லாம் எப்போதும்போல இறைந்து கிடந்தது. சின்னமலரக்கா எங்கே? வியாபாரத்துக்குப் போயிருக்கும்.  என் பாக்கெட்டிலிருந்த மிளகாயை எடுத்து ``கிக்கீ” என்றேன். பதில் இல்லை. சுவத்துத் திருப்பத்தைத் தாண்டி எறவானத்தைப் பார்த்தால் கூண்டு திறந்திருக்கிறது. “டேய் கிளியக் காணோம்” என்றதும் ஓடி வந்தான் ரேக்குட்டி. வந்த வேகத்தில் கூண்டைப் பார்த்து அலறினான். எனக்குத் தெரிந்துவிட்டது. கண்டுபிடித்து விட்டேன். வாத்தியார்தான்! சூப்புவைக்கிறேன் என்று சொன்னாரே? பொடீரென்று ஒரு அடி என் பிடறியில் விழுந்தது. அதிர்ச்சியும் கோபமுமாகத் திரும்பினேன்.

“இங்க வரக்கூடாதுன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்?’  நாக்கை மடித்துக் கடித்தபடி அப்பா!

``ஓடுறா வீட்டுக்கு… எங்க போய் சுத்தீட்டு வர்ற?” முதுகில் ஒன்று விழுந்தது. `தொம்’ என்ற சப்தத்துக்கு ரேக்குட்டி உள்ளே ஓடிவிட்டான். வெளியே வந்தால் ஊரே நான் அடி வாங்குவதை வேடிக்கை பார்க்கக் கூடி நிற்கிறது. ரொம்ப நேரமாகக் காணவில்லை என்றதும் பயந்திருப்பார்கள். `சினிமாக்குப் போய்ட்டு வரம்மா’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருக்கலாம்.

கிக்கி - சிறுகதை

முழங்கைக்குச் சட்டையை மடித்தபடி அப்பா ``இரு வந்து வெச்சுக்கறேன்” என்றார். 

திடுதிடுவென்று வீட்டைத் தேடி ஓடினேன். திடீரென்று விழுந்த அடி, வெட்கம், பயம், அவமானம், எல்லாம் சேர்ந்து பயமுறுத்த வேகமாய் ஓடினேன். கோபமாய் வந்தது. இன்றைக்குப் பாலாடையே வாங்கிக்கொடுத்தாலும் சமாதானம் ஆகக் கூடாது.  வாசலில் அம்மா ! அம்மாவைப் பார்த்ததும் பொங்கிப் பொங்கி அழுகை வந்தது.

``அம்..மா... அ..ம்மா பாரும்மா அப்பாவ” சொல்லி முடிக்கவில்லை.

``சீவக்கட்ட பிஞ்சுபோயிரும் பாத்துக்க…  போடா… உள்ள  போடான்னா… என்னா மொறைக்கற…. ஓங்கி அப்புனன்னா பல்லெல்லாம் உதுந்துபோகும்… ஜாக்ரதை.”

``தின்னுட்டு வீட்ல இருக்க முடியாதா உனக்கு?”

``அந்த மனுசன நிம்மதியா கஞ்சி குடிக்க விடாம அலைய வெக்கப் பாக்குது சனியன்.”

அம்மாவும் திட்டுமென்று  நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தன் பங்குக்கு இன்னும் ரெண்டு அடி கொடுக்கப் போகிறதென்று பயந்தேன். அடிக்காமல் திட்டத்தானே செய்கிறது? போகட்டும். ஆனாலும் இவ்வளவு நாளும் இதைத்தானே செய்து கொண்டிருந்தேன். பாயைப் பாதியாக விரித்துப் படுத்துக்கொண்டேன். கிக்கியை வாத்தியார் கொன்றிருப்பாரா? இல்லையென்றால் ரோஸி கவ்விக்கொண்டு போயிருக்குமா?

அம்மா எழுப்பிய போது அப்பா சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிக்கொண்டிருந்தார். காலைக் குறுக்கி அமர்ந்தேன். அம்மா வறுத்த பொரியைக் கிண்ணியில் போட்டு அப்பாவுக்கும் எனக்கும் வைத்தது. கிள்ளிப்போட்ட வறமிளகாய், மஞ்சள், தேங்காய் எண்ணெய் எல்லாம் சேர்ந்து வீடே மங்கலமாக மணக்க, நிம்மதியாக இருந்தது. அப்பா இனி அடிக்க மாட்டார். ஒரு கை பொரியை அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டேன். என் பயம் என்னை விட்டு முழுமையாக விலகியிருக்க, `கிக்கி எங்கே போயிருக்கும்?’ என்னும் கேள்வி மட்டும் கலையாமல் அப்படியே இருந்தது. ரேக்குட்டியிடம் பேசவேண்டும். அப்பா திண்ணையிலிருந்து செய்தித்தாளை எடுத்து வந்தார். அம்மா வறக்காப்பியை ஆற்றிக் கொடுத்தபடியே ``எங்கீங்க அது?’’ என்று கேட்க, அப்பா வறக்காப்பியை ஒரு வாய் உறிஞ்சிக் கீழே வைத்துவிட்டு, தாளை உதறி வெளிப்பக்கமாக மடித்து ஒரு படத்தைச் சுட்டிக்காட்டினார்.

`ஆசை நாயகியை நண்பருக்கு விருந்தாக்க முயன்றவருக்குக் கத்திக்குத்து. அழகி போலீஸில் சரண்.’ பெரிய  பெரிய எழுத்துகளுக்குக் கீழே சின்னமலரக்கா படம் இருந்தது. அக்கா அதில் அவ்வளவு அழகாகவெல்லாம் இருக்கவில்லை.

- சிறுகதை: ஜான் சுந்தர்;  ஓவியங்கள்: ஸ்யாம்