பெற்றோரை வீதியிலும் முதியோர் இல்லங்களிலும் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில், அளவுகடந்த பாசத்தால் அப்பா அம்மாவுக்கு வேலூரில் ஒருவர் கோயில் கட்டியிருக்கிறார்.

அம்மாவின் வயிற்றுக் கருவறை பாக்கியமும் அப்பாவின் மார்பின் கருவறை பாக்கியமும் வாழ்நாளில் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள். அம்மாவின் பாசம் கருணையில் தெரியும். அப்பாவின் பாசம் அவரது கடமையில் தெரியும். குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரத்தில் வாழ்ந்தாலும் பெற்றோரின் பார்வையில் குழந்தைகள் எப்போதுமே இளவரசர், இளவரசிகள்தான். அப்படிப்பட்ட தூய்மையான இதயங்களுக்கு கோயில் கட்டி ஒருவர் வழிபட்டுவருகிறார் என்றால், ஆச்சர்யம்தானே!

வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் தந்தை வெள்ளை நாயக்கர், தாய் ஜெகதாம்மாள். வறுமையில் பிறந்த ராமச்சந்திரனுக்குப் பெற்றோர், அதிக செல்லம் கொடுத்தனர். இதனால், அவருக்கு வறுமை தெரியவில்லை. வளர்ந்த பிறகு வெல்லமண்டியில் வேலைக்குச் சேர்ந்தார். மகன் யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கக் கூடாது என நினைத்த பெற்றோர், கடுமையாக உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொடுத்து சொகுசாக வாழவைத்தனர்.

இதனால், பெற்றோர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் ராமச்சந்திரன். முதலில் தந்தை இறந்தார். அவரின் உடலை சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தார். பிறகு, 2008-ம் ஆண்டில் தாய் ஜெகதாம்மாளும் இறந்தார். தாயின் உடலை, சலவன்பேட்டையில் தனக்குச் சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்தார். பிறகு, சமாதியைச் சுற்றி 37 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டினார். கோயிலுக்குள் கருவறையை நிறுவி லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். லிங்கத்துக்குப் பின்புறம் பெற்றோர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
அந்தப் பகுதியின் அடையாளம் அப்பா - அம்மா கோயில்தான். ஒரு கோயில் எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் அப்பா, அம்மாவுக்காக நிறுவினார். கோயிலின் நுழைவாயிலில் பார்வதி, பரமசிவன் போன்று தாய், தந்தையரின் சிறிய சிலைகள் அமர்ந்த நிலையில் வரவேற்கின்றன. உள்ளே சென்று பார்த்தால் ஆங்காங்கே அப்பா, அம்மாவைப் பற்றிய பல கவிதைகள் பொறிக்கப்பட்டுள்ளன. `என்னை சுமந்த தாயும், மனதில் சுமந்த தந்தையுமே சிறந்தவர்கள். தாயிற் சிறந்த கோயிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ போன்ற வரிகள் பெற்றோர் மீது அவர் கொண்டிருந்த பாசத்தை உணர்த்துகின்றன.
குழந்தைப் பருவம் முதல் வளர்ந்த பருவம் வரை தாயுடன் கொஞ்சி மகிழ்ந்த புகைப்படங்களை `நினைவில் நின்றவை', `நெஞ்சில் நீங்காதவை’ என்ற இரு தலைப்பிட்டு கோயில் வளாகத்தில் மாட்டினார். கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி உடல்நலக் குறைவால் ராமச்சந்திரன் இறந்துவிட்டார். ராமச்சந்திரன் உயிரோடு இருக்கும் வரை வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அப்பா, அம்மா கோயிலில் வழிபாடு செய்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினார். ஒவ்வோர் ஆண்டும் அப்பா, அம்மாவின் நினைவு தினங்களில் நூற்றுக்கணக்கானோருக்கு வேட்டி, சட்டை, புடவையை வழங்கி அன்னதானம் செய்தார்.

ஏழு மாதங்களுக்கு முன்பு இறந்த ராமச்சந்திரனின் உடலையும் அப்பா, அம்மா கோயிலில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறப்பதற்கு முன்பு தன்னுடைய குடும்பத்தாரிடம், ``கோயிலை நான் எப்படிக் கவனித்துவந்தேனோ, அதேபோல நீங்களும் பூஜை செய்து வழிபட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விருப்பத்தின்படி, ராமச்சந்திரன் குடும்பத்தினர் கோயிலில் பூஜை செய்து வழிபட்டுவருகிறார்கள். பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்திருக்கிறார், ராமச்சந்திரன்.