ஞா.அண்ணாமலை ராஜா
##~## |
தமிழகத்தில் ஓர் இளம் இசைப் புயல் உருவாகிவருகிறது. கரூர் மாவட்டம், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் படிக்கும் சித்தார்த்தன்தான் அந்த இளம் இசைப் புயல்.
இசையில் இவர் சகலகலா வல்லவர். இவரது இசைப் பயணத்தின் வயது மூன்றுதான். ''சிறு வயதில் பாடல்களைக் கேட்டாலே, உற்சாகத்தில் துள்ளி ஆடுவதோடு, பாடவும் செய்வான். அதுதான் இவனது இசை ஆர்வத்துக்கு அடிப்படை'' என்கிறார் சித்தார்த்தின் அப்பா சங்கர்.
கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்று, தற்போது மேற்கத்திய இசையை லண்டனில் உள்ள டிரினிடி இசைப் பள்ளியின் தமிழகக் கிளையில் பயில்கிறார். எட்டு நிலைகள் உள்ள பாடத்தில் ஐந்தாவது நிலையைப் பயின்று வருகிறார். ஒரு முறை 99% மதிப்பெண் பெற்று, உலக அளவில் முதல் மதிப்பெண் வாங்கியவர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார்.
ட்ரம்ஸ், கிதார், கீபோர்ட், ரிதம் பேட் போன்ற அனைத்து இசைக் கருவிகளும் சித்தார்த்துக்கு அத்துபடி. தானே இசை நிகழ்ச்சியைத் தலைமை ஏற்று நடத்துகிறார். உறவினர்களின் திருமண விழாக்களில் இவருடைய இசை நிகழ்ச்சி தவறாமல் இடம்பெறும். பள்ளியில் நான்கு வருடங்களாக இறைவாழ்த்துப் பாடுவதும் இவரே!

சித்தார்த் கீ-போர்ட் வாசித்த மேடையில் பி.சுசிலா, அனுராதா ஸ்ரீராம், தீபக் சக்கரவர்த்தி போன்ற பிரபலங்களும் பாடியிருக்கிறார்கள். ''ஸ்கூல் நாட்களில் காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் ஒவ்வோர் இன்ஸ்ட்ரூமென்டை எடுத்துப் பிராக்டீஸ் செய்வேன். அதே சமயம் பள்ளிப் பாடங்களையும் குறைவைக்காமல் செய்திடுவேன். லீவு நாட்களில் முழு நேரமும் மியூசிக் கம்போசிங் தான். கரூர் லோக்கல் சேனல்களில் தீபாவளி, பொங்கல் நாட்களில் என் இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்'' என்கிறார் சித்தார்த்தன்.
இருபதுக்கும் மேற்பட்ட கேடயங்கள், சான்றிதழ்கள், இசை விருதுகள் போன்றவற்றுடன் 'யுவஸ்ரீ கலாபாரதி’ விருதையும் கடந்த ஆண்டு வாங்கி இருக்கிறார். ''பல குறும்பட இயக்குனர்கள் தங்கள்படங்களுக்கு இசையமைக்கச்சொல்லிக் கேட்டாங்க. படிப்பு முக்கியமாச்சே! அதனால், பரீட்சை சமயத்தில் படிப்பில் மட்டுமே கவனமாக இருந்தேன். இந்த விடுமுறையில்தான் 20 நிமிடக் குறும்படம் ஒன்றுக்கு இசை அமைக்கப் போகிறேன்'' என்கிறார் சித்தார்த்.

''சித்தார்த் மனசுக்குள் எப்பவும் மியூசிக் கம்போசிங் நடந்துட்டே இருக்கும். உணவு இடைவேளையில பாடல்களுக்குத் தாளம் போட்டுப் பாடிக்காட்டுவான். அவன் இருந்தாலே அந்த இடம் செம ஜாலியா இருக்கும்'' என்கிறார்கள் நண்பர்கள்.

''இப்பவும் வாரம் ஒரு முறை கீ-போர்ட் கத்துக்க சேலம் போயிட்டு வர்றேன். 30 கிலோ எடை உள்ள கீ-போர்டை அப்பாதான் தூக்கிட்டு வருவார். என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஸ்ரீநாத்ஜி என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவான். எங்க கிளாஸ் மிஸ் நான் ஒரு போட்டியில் ஜெயிச்சுட்டு வந்த உடனே வகுப்பில் உள்ள எல்லாரையும் கைதட்டிப் பாராட்டச் சொல்வாங்க. இத்தனை பேரின் ஊக்கம்தான் என்னோட வெற்றிக்குக் காரணம்'' என்று சொல்கிற சித்தார்த்தின் குரலில் நன்றியும் பணிவும் மிளிர்கிறது!
