ரேஞ்சர் மாமா
##~## |
ஹோட்சின் பறவைகள் அமேசான் மழைக் காடுகளில் அமேசான் மற்றும் ஓரினோகோ நதிக்கரை ஓரங்களில் வசிக்கின்றன. கூட்டம் கூட்டமாக மரக் கிளைகளில் கண்ணைக் கவரும் வண்ணங்களோடு இருப்பவை. ஹோட்சின், கயானா நாட்டின் தேசியப் பறவை.
இதன் விலங்கியல் பெயர் Opisthocomus hoazin, கிரேக்க மொழியில் Opisthocomus என்றால், 'நீளமான கொண்டை உடையது’ என்று பொருள்.
இதன் நீளம், இரண்டு அடிகள் இருக்கும். நீல வண்ணத்தில் சிறிய முகமும், சிவப்புக் கண்களும், பல வண்ணங்கள்கொண்ட நீண்ட இறகுகளால் ஆன கொண்டையுடன் இருக்கும். பல நிறங்களின் கலவையாக இவற்றின் உடல் இருந்தாலும், அச்சம் ஏற்படுத்துபவையாகவே தோற்றம் அளிக்கும்.
இவை, சுத்தமான சைவப் பறவைகள். இவற்றின் உணவு, மழைக் காடுகளில் உள்ள தாவரங்களின் இளம் துளிர்கள். சில சமயம், பூக்களையும் பழங்களையும் தின்னும்.
மற்ற பறவைகளில் இருந்து இவை பல விதங்களில் வேறுபட்டு இருக்கின்றன. அதில் ஒன்று, இவற்றின் ஜீரண மண்டலம் கால்நடைகளுக்கு உள்ளதைப் போல இருக்கும்.

உடலின் அளவில், கால் பாகம் அளவுக்கு இரைப்பை இருக்கும். மிகப் பெரிய இரைப்பை இருப்பதால், பறப்பதற்கு சிரமப்படும். அந்தப் பெரிய இரைப்பையில் உள்ள ஏராளமான பாக்டீரியாக்கள் உணவைச் செரிக்க உதவுகின்றன. அதே சமயம், அவை பயங்கரமான துர்நாற்றத்தையும் உண்டாக்கும். அதனால், ஹோட்சின் பறவைக்கு 'துர்நாற்றப் பறவை’ என்ற பெயரும் உண்டு. வேட்டையாடும் எதிரிகளிடம் இருந்து இந்தப் பறவையைக் காப்பதும் இந்தத் துர்நாற்றம்தான்.
கூட்டத்தில் இருக்கும் எல்லாப் பறவைகளுமே குஞ்சுகளுக்கு இரையை ஊட்டுவது வழக்கம்.
ஒவ்வொரு பக்கச் சிறகிலும் நகம் போன்ற அமைப்பு இருக்கும். அவற்றின் உதவியால் மரத்தில் தொற்றித் தொற்றி ஏறும். ஆபத்துக் காலத்தில், மரத்தில் இருந்து கீழே ஓடும் நதிக்குள் குதித்துவிடும். ஆபத்து நீங்கியதும் நீந்தியபடி மரத்தின் அருகில் வந்து மீண்டும் ஏறிக்கொள்ளும்.
மனிதர்கள் இவற்றின் சிறகுகளுக்காகவும், முட்டைகளுக்கா கவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடுகின்றனர்.