ஹாசிப்கான்
##~## |
-எம்.புவனேஷ், அருப்புக்கோட்டை.
''நம் தலையில் ஃபாலிக்கிள் என்ற ஒரு வகை செல்கள் இருக்கின்றன. அவை, தலைச் சருமத்தின் மேல் பகுதியில் தொடங்கி, அடிப் பகுதி வரை ஊடுருவி இருக்கும். இந்த செல்களே தலைமுடி எப்படி வளர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. உருவத்தைப் பொருத்த வரை, டி.என்.ஏ. வேறுபாட்டினைப் பொறுத்து சிலருக்கு வட்டமாகவும் சிலருக்கு முட்டை வடிவிலும் இந்த செல்கள் இருக்கும். வட்டமான செல் அமைப்பு இருப்பவர்களுக்குத் தலைமுடி நீளமாகவும், முட்டை வடிவில் இருந்தால் சுருண்டும் வளர்கிறது. உன்னோட ஃபாலிக்கிள் என்ன வடிவம்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டியா புவனேஷ்?''
''டியர் ஜீபா... நம்மை மாதிரியே புழு பூச்சிகளும் மூச்சுவிடுமா?''
-ந.த.திருவாசகம், ஈரோடு.
''எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்காக சுவாசிக்கின்றன திருவாசகம். சுவாசிக்கும் முறைதான் ஒவ்வொன்றுக்கும் வேறுபடும். நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம். இதற்கு மூச்சுக் குழாய் உதவி செய்கிறது. மண்புழு, தனது மேல் தோலில் இருக்கும் துவாரங்களின் வழியாகச் சுவாசிக்கிறது. தவளைக்கும் நுரையீரல் உண்டு. ஆனாலும் இது டூ இன் ஒன் போல் தோல் மூலமாகவும் சுவாசிக்கும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் டிராகியா (ஜிக்ஷீணீநீலீமீணீ) என்ற குழாய்கள் உள்ளன. அதன் மூலம் அவை சுவாசிக்கின்றன. நமக்கு எல்லாம் ஒரு மூச்சுக் குழாய்தான் இருக்கிறது. புழு பூச்சிகளுக்கோ நூற்றுக்கணக்கான மூச்சுக் குழாய்கள் உண்டு.''

''ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் ஜீபா?''
-இரா.ப.ஆதித்யன், ஒட்டன்சத்திரம்.
''சபாஷ் ஆதித்யா... 'நம்ம வேலை படிக்கிறதும் விளையாடுறதும்’ என்று இல்லாமல், இந்த வயசிலேயே இப்படி ஒரு கேள்வி உனக்குள் எழுந்து இருப்பது நல்ல விஷயம். ஊழல் என்பது கடமை தவறும் மனிதர்களால் மட்டும் நடப்பவை அல்ல. நமக்கு ஒரு வேலை சுலபமாக நடப்பதற்காகப் பணம் கொடுப்பது என்பதும் ஊழலின் ஓர் அங்கமே. சில சமயம் வேலை சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பெரிய மனிதர்களிடம் சிபாரிசுக்குப் போவதும் தவறுதான். எந்த விஷயமாக இருந்தாலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதற்கான விதிமுறையோடு பெற வேண்டும் என்று இந்த வயதிலேயே தீர்மானித்து, அதன்படி நடந்துகொண்டாலே போதும். ஊழல் இல்லாத இந்தியாவை நிச்சயமாக உருவாக்க முடியும்!''
''புளியமரத்தின் வேர்கள் ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கிற நிலத்தடி நீரை உறிஞ்சிடும்னு சொல்றது உண்மையா ஜீபா?''
-எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.
''அப்படி இல்லை சௌமியா... மற்ற மரங்களின் வேர்களைவிடப் புளிய மரத்தின் வேர்கள் நிலத்திற்குள் நீண்ட தூரம் பரவும் தன்மைகொண்டவை. காரணம், தென்னை போன்ற பிற மரங்களைப் போல் புளிய மரத்திற்குத் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது இல்லை. அதனால் தனக்கான தண்ணீரைத் தேடி அதன் வேர்கள் பரவும். தேவையான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.''
''ஹலோ ஜீபா... உண்மையிலேயே டிசம்பர் 27-ஆம் தேதி உலகம் அழிஞ்சுடுமா?''
-கே.பிரவின்குமார், பரமக்குடி
''டியர் ஜீபா... 2012-ல் உலகம் அழியாமல் இருக்க வழி என்ன?''
-எம்.புவனேஷ், தேனி
''2012-ல் உலகம் அழியுமா... அழியாதா? உன் பதிலை உடனடியா எதிர்பார்க்கிறேன் ஜீபா''
-வீ.பிரேமாகுமாரி, அய்யம்பாளையம்
''இப்படியான கேள்விகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு வருகின்றன. எல்லாம் ஹாலிவுட் சினிமாக்காரர்கள் கிளப்பிவிட்ட பீதியின் தாக்கம். அப்படி எல்லாம் ஒரு தேதியைக் குறித்து வைத்துக்கொண்டு ஒரே நாளில் உலகம் அழிந்துவிடாது ஃப்ரெண்ட்ஸ். உலகில் உள்ள உயிரினங்கள் வாழ்வதில் சூரியனுக்கும் காற்றுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதில் சூரியனிடம் இருந்து கிடைக்கும் ஒளிக் கதிர்கள் முழுமையாகத் தீர்வதற்கே 500 கோடி ஆண்டுகள் ஆகுமாம். எரிமலை, சுனாமி, பூகம்பம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம்தான். உதாரணமாக, உலகின் ஒரு பகுதியில் பூகம்பம் ஏற்பட்டு முற்றிலும் அழிந்துவிட்டாலும், சூரியனும் மனிதனின் அறிவும் இணைந்து அங்கே வசிப்பதற்கான சூழலை மீண்டும் ஏற்படுத்த முடியும். அதனால், பயத்தைவிட்டு லீவை என்ஜாய் பண்ணுங்க...''