Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே...தரைக்கு வந்த தங்கக் குதிரை !

சுட்டிகளுக்குக் கதை சொல்கிறார் சசிகுமார்

ஒரே ஒரு ஊரிலே...தரைக்கு வந்த தங்கக் குதிரை !
##~##

அழகான தாடிக்கும் அட்டகாசமான சிரிப்புக்கும் சொந்தக்காரரான சசிகுமார் கதை சொன்னால் சந்தோஷத்துக்குச் சொல்ல வேண்டுமா?

 காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பங்களாவில் சசிகுமாரைப் பார்த்ததும், ''ஹே... சசி அங்கிள்'' என இரண்டு பக்கத்திலும் இறக்கைகள் செருகிக்கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாகத் துள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

''உங்க பேர் என்ன?'' என சசிகுமார் அங்கிள் கேட்க, ''அங்கிள், எங்க பேர் மட்டும் இல்ல. எங்களோட கொள்ளுப் பாட்டி, கொள்ளுத் தாத்தாவோட பேர்களையும் கரெக்டா சொல்வோம். 'நாடோடிகள்’ படத்துல மூணு தலைமுறைகளோட பெயர்களையும் சொல்லி அசத்திய ஆள்தானே நீங்க?'' எனச் சேட்டையைக் காட்டி கலகலப்பைத் தொடங்கினான் தமிழரசன்.

''அது சினிமாவுக்காக மட்டும் பேசிய வசனம் இல்லை. நம்ம மூதாதையர்களோட பெயர்களைக்கூட தெரிஞ்சுக்காமல், வரலாற்றைப் பத்திப் படிக்கிறதில் என்ன புண்ணியம்? நம்ம குடும்ப வரலாற்றைத் தெரிஞ்சுக்கிற ஆர்வம் வந்துட்டாலே நாட்டோட வரலாற்றைத் தெரிஞ்சுக்குவோம்'' என்ற சசிகுமார், ''சரி, ஆளுக்கு ஒரு கதை சொல்லுங்க. சினிமாக் கதைகளைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போச்சு. சின்னப் புள்ளைங்களோட கதைகளைக் கேட்க ஆர்வமா இருக்கேன்'' என்றார்.

ஒரே ஒரு ஊரிலே...தரைக்கு வந்த தங்கக் குதிரை !

''என்னது, நாங்க கதை சொல்லணுமா? 'சுப்ரமணியபுரம்’ டைரக்டர் சூப்பரான கதை சொல்லப்போறார்னு  ஆசையா வந்தா, நீங்க எங்ககிட்ட கதை கேட்குறீங்களே?'' என்றாள் சந்திரலேகா.

''சரி... நான் கதை சொல்றேன். அதுக்கு முன்னால பட்டுக்கோட்டை பக்கம் இருக்கிற துவரங்குறிச்சியில்  நடந்த ஒரு நிஜக் கதையைச் சொல்றேன். அந்த ஊர்ல விக்னேஷ்னு ஒரு பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறான். அவனுக்கு சரியாப் பேச்சு வராது. அவனோட அம்மாவும் அப்பாவும் பல டாக்டர்கள்கிட்ட காட்டியும் அவனைப் பேசவைக்க முடியலை. ஒரு நாள்  ஊர்க்காரப் பெரியவர் ஒருத்தர் ஏதோ வேலை சொல்லி இருக்கார். விக்னேஷ் அதைச் செய்யலை. அதனால், கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி இருக்கார். விக்னேஷ§க்கு அவர் சொன்ன வார்த்தைகளைத் தாங்கிக்கவே முடியலை. அவனுக்கு எங்கே இருந்துதான் இவ்வளவு வேகம் வந்துச்சோ... பதிலுக்கு அந்தப் பெரியவரை சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பிச்சுட்டான். பெரியவருக்கு ஆச்சரியம். 'டேய் விக்னேஷ், நீ பேச ஆரம்பிச்சிட்டடா’னு கோபத்தை மறந்து  கட்டிப்புடிச்சுக்கிட்டார். அப்புறம்தான், தனக்குப் பேச்சு வந்திருச்சுங்கிற விஷயமே விக்னேஷ§க்குப் புரிஞ்சது'' என்றார் சசிகுமார் அங்கிள்.

''இதை நானும் பேப்பர்ல படிச்சேன் அங்கிள்'' என்றான் அசோக்குமார்.

ஒரே ஒரு ஊரிலே...தரைக்கு வந்த தங்கக் குதிரை !

''இந்தச் செய்தியில இருந்து உங்களுக்கு என்ன தெரியுது?'' என அவர் கேட்க, ''முயற்சி செஞ்சா, நம்மால் எதையும் செய்ய முடியும்னு தெரியுது'' என்றாள்  நர்மதா.

''ரொம்பச் சரி'' என்ற சசிகுமாரிடம், ''அது இருக்கட்டும் அங்கிள். இப்போ நீங்க கற்பனைக் கதையைச் சொல்லுங்க'' என்ற கோகிலாவைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டார்.

''ரெடி... ஸ்டார்ட்... ஆக்ஷன்'' என்றபடி, கதையின் கதாபாத்திரங்களாகவே மாறி கதையைச் சொல்ல ஆரம்பித்தார் சசி.

''ஒரு ஊர்ல ஒரு பையன் இருந்தான். அவன் பேரு தமிழரசன். அவன் வீட்ல ரொம்ப வறுமை. அப்பா, அம்மாவால் அவனைப் படிக்கவைக்க முடியலை. மாடு மேய்க்க அனுப்பிட்டாங்க. நண்பர்கள் எல்லாரும் ஸ்கூலுக்குப் போறப்ப, தான் மட்டும் மாடு மேய்க்கப்போறதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டான் தமிழரசன். 'எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?’னு நினைச்சு அழுதான். மேல இருந்து உலகத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்த கடவுளுக்கு, தமிழரசனின் அழுகையைப் பார்த்து கஷ்டமாகிடுச்சு. ஒரு குதிரை உருவத்தில் அவன் மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்த இடத்துக்கு வந்தார். தங்க வண்ணத்தில் மின்னிய அந்தக் குதிரையைப் பார்த்து தமிழரசனுக்கு ஆச்சர்யம். மெள்ள குதிரைக்கிட்ட வந்தான். ''வா தமிழரசா'' என்று குதிரை பேசியதும் இன்னும் ஆச்சர்யம். ''குதிரையே, நீ யார்?''னு கேட்டான். ''நான் ஆகாயக் குதிரை. வழி தவறி பூமிக்கு வந்திட்டேன்’னு சொல்லுச்சு.

''உன்னோட உடம்பு முழுக்க தங்கமா?''னு கேட்டான் தமிழரசன். தலையாட்டிய குதிரை, ''எனக்கு அபூர்வ சக்தி இருக்கு. நீ என்ன கேட்டாலும் நான் தருவேன்''னு சொல்லுச்சு. தமிழரசனும் பரவசமாகி, ''அப்படின்னா நான் ஒண்ணு கேட்கிறேன் செய்வியா? ஏழையா பொறந்துட்டதால என்னால படிக்க முடியாமப்போச்சு. என் வயசுல உள்ளவங்க எல்லாம் நல்லாப் படிக்கிறாங்க. அவங்களுக்கு என்ன அறிவு இருக்கோ, அதே அறிவு எனக்கும் வேணும். அதை உன்னால கொடுக்க முடியுமா?''னு கேட்டான். கொஞ்ச நேரம் கண்களை மூடிய குதிரை, ''நீ கேட்ட வரத்தைக் கொடுத்திட்டேன்''னு சொல்லுச்சு'' என்றார் சசிகுமார்.

ஒரே ஒரு ஊரிலே...தரைக்கு வந்த தங்கக் குதிரை !

''உண்மையாகவா?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் கோகிலா.

''உன்னை மாதிரியே தமிழரசனுக்கும் நம்பிக்கை வரலை. ''நீ எனக்கு அறிவு கொடுத்துட்டேங்கிறதை எப்படி நம்புறது?’னு கேட்டான். அதுக்கு குதிரையாக மாறி இருந்த கடவுள் சொன்னார்... ''நான் ஆகாயத்தில் இருந்து வந்தேன்னு சொன்னேன். நீ அதை நம்பினே. நான் தங்கக் குதிரைன்னு சொன்னதையும்  நம்பினே. ஆகாயத்தில இருந்து இங்க எப்படி வர முடியும்னு  கேட்கலை. ஆனா, இப்போ கேள்வி கேட்கிறே பார்த்தியா... எப்போ நீ ஒரு விஷயத்தைப் பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டியோ... அப்பவே உனக்கு அறிவு வந்திருச்சுன்னு அர்த்தம். அதனால, படிக்க முடியலைன்னு நினைச்சுக் கவலைப்படாமல், எதையும் கூர்ந்து கவனிச்சுக் கேட்டுத் தெரிஞ்சுக்கவும் கத்துக்க. அதுதான் உன்னைப் பெரிய அறிவாளியாக்கும்’னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சுட்டார்''

கடவுளாகவும் பையனாகவும் மாறி மாறிக் கதையைச் சொல்லி முடித்தார் சசிகுமார் அங்கிள்.

''உண்மையாகவே கடவுள் குதிரை உருவத்தில் வருவாரா அங்கிள்?'' எனச் சொல்லிவைத்தது போல் அத்தனைப் பேரும் கேட்க, ''சபாஷ் கேள்வியைக் கேட்டு நீங்களும் அறிவாளிகள்னு நிரூபிச்சிட்டீங்களே... கீப் இட் அப்'' என்றதும் அத்தனைப் பேரின் முகங்களிலும் வெட்கச் சிரிப்பு!