Published:Updated:

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !
##~##

கோவில்பட்டி நகராட்சிப் பூங்கா. குட்டி சார்லி சாப்ளின்களால் நிரம்பி வழிந்தது. பெற்றோர்கள் தங்களின் குட்டீஸ்களை உலக நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளினாகவே மாற்றி அழைத்து வந்திருந்தார்கள். சார்லி சாப்ளினின் ஸ்பெஷல் அடையாளங்களான கருப்பு கோட் ஷூட், தொப்பி, வாக்கிங் ஸ்டிக் என அச்சு அசலாய் ஜூனியர் சாப்ளின்களாய் உருமாறி நின்றார்கள். ''ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுதே மிஸ்'' எனச் சுட்டிகளை அலங்கரித்துக்கொண்டு இருந்த ஆசிரியையிடம் நாம் கேட்டோம். ''இதா... பாருங்க'' என ஃபைனல் டச்சாக ஒட்டுப் புல் மீசையை ஒரு சுட்டியின் முகத்தில் ஒட்டி வைத்துக்காட்ட... சாப்ளினின் முக்கிய அடையாளமான குட்டி ஹிட்லர் மீசையை ஒட்டிய பின்தான் சாப்ளினைக் கண்ட திருப்தி.

அந்தக் காலை வேளையில் வாக்கிங் வந்தவர்கள் ஏகத்துக்கும் மகிழ்ந்துபோனார்கள். சிலர் தங்கள் மொபைல் போனில் சுட்டீஸ் கூட்டத்துக்கு நடுவே நின்று ஃபோட்டோ 'க்ளிக்’கினார்கள். ஒரு பெரியவர் தன் மனைவிக்குப் போன் செய்து, ''ஏ இங்ஙன கொள்ளை சார்லி சாப்ளின்க இருக்குதாக கேட்டியா... பூராம் வாண்டுப் பயலுவ... இன்னைக்கு கோயிலுக்குப் போவோம்னு சொன்னியே, பொறவு போயிக்கலாம். நீ வெரசா முனிசிபல் பார்க்குக்கு வந்துரு. சொணங்காம சீக்கிரம் வாலே!'' என்றார் குதூகலக் குரலில்.

''அம்மா, இங்க பாருங்க என் மீசையைக் காணோம்'' என்று ஒரு சுட்டிச் சாப்ளின் அழத் தயாரான முகத்தோடு சொல்ல, ''நான்தான் கையவெச்சுப் புடிச்சுக்கச் சொன்னேன்ல, இப்ப அதை எங்கேன்னு தேடுறது?'' என்றவாறு புல் தரையில் மீசையைத் தேடினார் ஒரு தாய். ஒரு டீச்சர் ஓடிவந்து, ''அதைத் தேடி எடுக்க முடியாது. இன்னொரு மீசையை ஒட்டிக்கலாம்'' என்று ஒட்டிவிட்டுப் போனார். அந்த சின்ன சாப்ளினின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !

''எலே மக்கா... போட்டோ புடிக்குற வரைக்கும் மீசை பத்திரம்லா!'' என்று ஒருவர் கிண்டலடிக்க அனிச்சையாய் எல்லாச் சுட்டிகளின் கைகளும் மீசையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டன.  

ஒரு சிறுவன் அப்பாவிடம் அழுது அடம் பிடித்துக்கொண்டு இருந்தான். அங்கேயும் பிரச்னைக்குக் காரணம் மீசைதான். ''மீசை அரிக்குதுன்னு அழுவுறான்'' என்றார் அப்பா அப்பாவியாய். ''மீசை வெச்சாதான் என்  செல்லக் குட்டி ரொம்ப்ப்ப்ப அழகு'' என அம்மா தாஜா பண்ண... ''இப்ப எனக்கு மீசை வைம்மா'' என்றான் உற்சாகமாக. ''ரோஷம் வந்துருச்சு எம் புள்ளைக்கு. மீசையைக் கொண்டாங்க மிஸ்'' என்றபடி தன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை அவனுக்கு ஊட்டிவிட்டார் சுட்டியின் அம்மா.

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !

இப்படி மீசை ரகளைகளுக்கு இடையே ஒரு சாப்ளின் மட்டும் தனியாக, ''ஸிங் இன் த ரெய்ன்... ஐ ஆம் ஸ்வைங் இன் த ரெய்ன்...'' என பாடிக் கொண்டு கையில் ஒரு டம்மி கிதாருடன் உதார் விட்டுக்கொண்டு இருந்தார். இன்னொரு சுட்டி சாப்ளின் கையில்வைத்து இருந்த வாக்கிங் ஸ்டிக்குடன் புன்னகை மன்னன் படத்துக் கமல் போல், ''சப்பாத்திக்கு குருமா குருமா...'' எனக் கால்களை 'எஸ்’  ஷேப்பில் அகற்றிவைத்து தேய்த்து தேய்த்து நடந்து புல்தரையில் 'தொபுக்கடீர்’ என விழுந்தார். நல்ல வேளை... மீசையில் மண் ஒட்டவில்லை. இரண்டு சுட்டீஸ்கள் சாகசங்கள்  பண்ணி எல்லோரையும் ஈர்த்தார்கள். ஒரு சுட்டி மட்கார்டிலும் இன்னொரு சுட்டி சீட்டிலும் உட்கார்ந்து ரிலாக்ஸாய் ஓட்ட முயற்சிசெய்து 'பல்பு’ வாங்கினார்கள். நல்லவேளை அவர்கள் கீழே விழுவதற்குள் ஒரு கூட்டம் ஓடிப்போய் தாங்கிப் பிடித்துக்கொண்டது.  

மத்தியான வெயிலின் வெக்கை தாங்காமல் ரெஸ்ட் எடுக்க இடம் தேடினார்கள் நம் சாப்ளின்கள். அங்கே இருந்த சிமென்ட் பெஞ்சில் உட்காருவதற்கு 'நீயா? நானா?’ போட்டி உருவானது. உயரமாய் இருந்த ஒரு சாப்ளின், ''நமக்குள்ள சண்டை வேணாம்... மியூஸிக் சேர் வச்சு விளையாடி யார் ஜெயிக்குறாங்களோ அவங்க உட்காரலாம்'' என்று குட்டி நாட்டாமையாய் சொல்ல, எல்லாச் சுட்டிகளும் தலையாட்டி ஆமோதித்து ஓ.கே. சொன்னார்கள். மொபைல் போனில் பாடல்வைத்து அவர்களுக்குள் மியூஸிக்கல் சேர் போட்டி நடத்தினார்கள்.

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !

சுட்டிகள் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக் ஹாக்கி, கிரிக்கெட் பேட்களாக மாறி கடைசியில் கத்திச் சண்டையில் வந்து முடிய... உஷாரான நாம், ''ஓ.கே... இப்போ எல்லாரும் ரோஸ் மில்க் சாப்பிடலாம்... அப்புறம் க்ரூப் போட்டோ எடுத்துக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்'' என்று சொன்னதும் மூங்கில் மரத்தின் கீழே எல்லாச் சுட்டிகளும் அசெம்பிள் ஆனார்கள். ரோஸ்மில்க் குடித்த தெம்போடு க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அசத்தினார்கள்.

சிலிர்க்கவைத்த சின்ன சாப்ளின்கள் !

''சார்லி சாப்ளின் மாதிரி வேஷம் போட்டதுக்கே கை கால்லாம் இவ்ளோ வலிக்குதே. அவர் எப்படி இவ்ளோ ஃபாஸ்ட்டா ஜம்பிங் டைவிங்லாம் லைஃப் லாங்கா பண்ணினார் அங்கிள்?'' என்று அப்பாவியாய் ஒரு சுட்டி கேட்க... ''அதனாலதான்டா இப்போவரைக்கும் சார்லி சாப்ளின் நமக்கு போர் அடிக்கலை. 'நோ பெய்ன்... நோ கெய்ன்’ இல்லையா அங்கிள்?'' என்று அர்த்தத்தோடு பதில் சொன்னான் மற்றொரு சுட்டி.

அந்த உலகக் கலைஞன் காலங்களையும் பல தலைமுறைகளையும் கடந்து நிற்பான் என்பதை நம்மால் உணர முடிந்தது!

சார்லி சாப்ளின் !

சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்கிற சார்லி சாப்ளின், 1889 ஏப்ரல் 16-ல் லண்டனில் பிறந்தார். ஐந்து வயதிலேயே நாடக மேடை ஏறி, கைதட்டல்களைப் பெற்றவர்.

அனால், திரைத்துறையில் இடம்பிடிக்க அவர் போராட வேண்டி இருந்தது. சாப்ளினிடம் உள்ள அசாத்தியத் திறமைகளைக் கண்ட தயாரிப்பாளர் மார்க்சென்ட், அவரைத் தனது கீஸ்டோன் (ரிமீஹ்stஷீஸீமீ) திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். அதுவே சாப்ளினுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. திரை உலகில் முதன் முதலில் ஒரு மில்லியன் டாலர் சம்பளமாகப் பெற்ற நடிகர் சாப்ளின்.

'தி வொர்க்’, 'தி சர்க்கஸ்’, 'மார்டன் டைம்ஸ்’, 'தி கிரேட் டிக்டேக்டர்’ எனக் காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கினார். மக்களைச் சிரிக்கவைத்த சாப்ளின், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களைச் சந்தித்தவர். எனினும் தனது சோகம் நடிப்புத் தொழிலைப் பாதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றவர் சாப்ளின். 1975-ல் பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத், 'சர்’ பட்டம் வழங்கி சாப்ளினைக் கௌரவித்தார். 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று சாப்ளின் இறந்தார். சாப்ளினுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், 1985-ல் இங்கிலாந்து அரசு அவரது அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவித்தது.