Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா - குக்கர்

இரா.நடராசன்

##~##

'குக்கர்ல குண்டு போடுன்னு’ அம்மா சொன்னதைக் கேட்டுதானே இங்கே வந்தீங்க... என்ன முழிக்கிறீங்க? நான்தாங்க உங்க வீட்டு சமையல்குக்கர் பேசுறேன்... புஸ்...புஸ்னு கத்தி எத்தனை தடவை உங்களைக் கூப்பிட்டு இருக்கேன்? இப்பவாவது வந்தீங்களே! 'ஆறிப்போச்சு’, 'காரமா இருக்கு’, 'இது எனக்குப் பிடிக்கலை அது, இதுனு எப்பவும் சாக்குப்போக்கு சொல்லிக் கஷ்டப்பட்டு சமைச்சதைக் கொட்டுறீங்க... நான் எப்படித் தயாராகி வந்தேன்னு தெரிஞ்சா என் மூலம் தயாரான உணவைக் கொட்ட மாட்டீங்க... கேளுங்க.

என் பெயர் வெறும் குக்கர் அல்ல பிரஷர் குக்கர். எனக்கு முக்கியமான மூன்று பாகங்கள் உண்டு. டாப், பாட்டம் மற்றும் வெய்ட் என்கிற குண்டு. உள்ளதிலேயே என் டாப்பைத் தயாரிக்கத்தான் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைபார்க்க வேண்டி இருக்கு. ரொம்ப நுணுக்கமான வேலை இது. என்னைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு நீங்கள் வந்து பார்த்தால் அசந்துருவீங்க...

இண்டாலியம், அலுமினியம், காரீயம், மற்றும் எவர்சில்வர் கலந்த ஒரு கூட்டு உலோகத்தால் என்னைத் தயாரிக்கிறார்கள்.   அடுத்து, நான் வேலை செய்யும் விதத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்!

எப்படி வந்தேன் தெரியுமா - குக்கர்

வெளிக் காற்று உள்ளே புக முடியாதபடி எல்லாப் பக்கமும் மூடப்பட்ட ஒரு அமைப்பு நான். என்னுள்ளே பாத்திரம் வைத்து அரிசியோ பருப்போ போட்டால், சாதாரணப் பாத்திரங்களில் சமைக்க ஆகும் நேரத்தில் ஏழு சதவிகித நேரம் விரைவாகவும் பதமாகவும் நான் சமைத்துத் தந்துவிடுகிறேன்... காரணம் மிக எளிது. திறந்த நிலைச் சமையல், நீரின் வெப்பத்தைப் பயன்படுத்துகிறது. எனக்குள்ளே காற்று நுழைய முடியாது. மூடிய சமையலில் ஏற்கெனவே உள்ளே இருந்த காற்று வெப்பத்தால் விரிவடைவதோடு, அதீதக் காற்றழுத்தம் வெப்பத்தைப் பன்மடங்கு அதிகரித்து உணவை விரைவில் சமைக்க உதவுகிறது.அதிகமாகும் காற்றழுத்தமும் ஆபத்தானது. சமைக்கத் தேவையான அளவைவிட, அழுத்தம் அதிகமாகும்போது எனது தலையில் உள்ள குண்டை மேல் நோக்கித் தள்ளியபடி ஆவியாய்க் காற்று வெளியேறி, உள்ளே அதிக அழுத்தம் உருவாகாமல் காக்கிறது. சமயத்தில் வெயிட் எனப்படும் குண்டு சரியாக வேலை செய்யாமல் போனால், நான் வெடித்துப் பெரிய நாசத்தை உண்டாக்கிவிடுவேன் அல்லவா? அதைத் தடுக்க, ஒரு பாதுகாப்பு வால்வு என் டாப்பில் பொருத்தப்பட்டு உள்ளது. ஆபத்தான தருணங்களில் அது திறந்து கொண்டு, அதன் வழியே அதீத வெப்பக் காற்று வெளியேறி, எந்த அசம்பாவிதமும் இன்றிக் காக்கிறது.

எனவே, வெயிட் எனும் குண்டும், பாதுகாப்பு வால்வும்தான் முதலில் தயாராகின்றன. பாதுகாப்பு வால்வைப் பொருத்த வசதியாய் மற்றொரு பகுதியில் என் டாப் தயாராகிறது. இயந்திரங்கள் அவற்றைத் தயார் செய்தாலும் அவற்றை இயக்கப் பல நூறு தொழிலாளர்களும், வல்லுநர்களும் அங்கே கடுமையாய் உழைக்கிறார்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா - குக்கர்

பிறகு பாட்டம். ஒரு லிட்டர், அரை லிட்டர் எனச் சமைக்கும் அளவுக்குத் தகுந்தபடி நான் தயாராகிறேன். தீயில் நான் 'குஷியாக’ உட்காரும் அடிப்புரத்தைச் சிறப்புக் காப்பர் உலோகக் கலவை கொண்டு பிரத்யேகமாகச் செய்கிறார்கள். அப்புறம், எனக்கு இரண்டு கைகள், ஒரு காது. இவற்றை எபோனைட் என்ற வகை வேதிப் பொருளில் இருந்து செய்கிறார்கள். எபோனைட், வெப்பத்தைக் கடத்தாது. இதனால் என்னைப் பிடித்துத் தூக்கவும் இறக்கவும் அதனைப் பயன்படுத்தலாம், சுடாது. காற்று உள்ளிருந்து வெளியேறாமல் இருக்க, கேஸ்கட் எனும் ரப்பர் வளையம் என் பெல்ட். அதைத் தயாரிக்கவும் தொழிற்சாலையில் தனியே ஒரு பகுதி உள்ளது.

ஒரு பத்து நிமிடத்தில் உங்கள் எல்லோருக்கும் சுவையான உணவைத் தயாரித்துத் தரும் என்னைத் தயாரிப்பதற்கு எத்தனை பேர் உழைக்கிறார்கள் பார்த்தீர்களா... இனிமேல் உணவை வேஸ்ட் பண்ணாதீங்க ப்ளீஸ்!