பென் டிரைவ் !
##~## |
மகாத்மா காந்தி வலியுறுத்திய ஒருமைப்பாட்டின் மகத்துவத்தைப் பரப்புவதற்காக, குஜராத் மாநிலம் தலைநகரான அகமதாபாதில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 16 சுட்டிகள் அமெரிக்காவுக்குப் பறந்திருக்கிறார்கள்.
காந்தி ஆசிரமத்தின் 'மானவ் சத்னா’ என்ற தன்னார்வ அமைப்பு, 'ஏகத்வா’ (ஒருமைப்பாடு) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு திட்டமாக, 16 சுட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிரபலக் கலைஞர்களைக் கொண்டு, 90 நிமிட நடன - நாடக நிகழ்ச்சி கற்றுத்தரப்பட்டது.

இந்த 'ஏகத்வா’ மூலம் உள்ளூரில் அசத்திய சுட்டிகள், மே 6 முதல் ஜூன் 16 வரை அமெரிக்காவில் உள்ள பல நகரங்களிலும் நிகழ்ச்சியை அரங்கேற்றி, காந்தியின் கொள்கைகளைப் பரப்பி வருகிறார்கள்!

அமெரிக்காவின் 'ராக் அண்ட் ரோல் மன்னன்’ என்று அழைக்கப்படும் எல்விஸ் பிரெஸ்லியின் வாழ்க்கை வரலாறு, புதிய காமிக் புத்தகமாக வெளியாகி உள்ளது. ஸ்பைடர்மேன், எக்ஸ்மேன், அயன்மேன், ஹல்க் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ கைவண்ணத்தில் இந்தப் புத்தகம் தயாராகி இருக்கிறது. இதற்கு 'கிராஃபிக் எல்விஸ்’ (Graphic Elvis) எனப் பெயர் வைத்து இருக்கிறார்கள்.
இதில் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் லீ உடன் இணைந்து பணியாற்றியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த ஜீவன் ஜெ. காங், முகேஷ் சிங், சவுமின் படேல் மற்றும் சமித் பாபு என்ற நான்கு கலைஞர்கள்.

மறைந்த பிரபல ஓவியர் எட்வர்ட் முங்க் (Edvard Munch) 5,500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து இருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஏலம் ஒன்றில் இவர் வரைந்த 'தி ஸ்கிரீம்’ (கூக்குரல்) என்ற ஓவியம் உலகிலேயே மிக அதிக விலையாக

640 கோடிக்கு ஏலம் போனது. ஆனால், வாங்கியவரின் பெயர் ஏனோ அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு பாப்லோ பிகாசோ வரைந்த, 'தி நியூட் கிரீன் லீவ்ஸ் அண்டு பஸ்ட்’ என்ற ஓவியமே அதிகபட்சமாக,

568 கோடிக்கு விற்பனையாகி இருந்தது. அந்தச் சாதனையை 'தி ஸ்கிரீம்’ மிஞ்சிவிட்டது.

இந்தக் கட்டடத்தைப் பார்த்தால் கலர் கலராக பெயின்ட் அடித்திருக்கிறார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அத்தனையும் கதவுகள்தான். தென் கொரியாவைச் சேர்ந்த கொய் ஜியாங் ஹ்வா (Choi Jeong-Hwa) என்பவரின் மூளையில் தோன்றிய ஐடியாதான் சுவர்களே இல்லாமல் கதவுகளால் மட்டுமே உருவான இந்த 10 மாடிக் கட்டடம். பல இடங்களில் இருந்து சேகரித்த 1,000 கதவுகளைக் கொண்டு மட்டுமே இந்தக் கட்டடத்தை சியோல் நகரில் உருவாக்கி உள்ளார் கொய்.