ஸ்பெஷல்
Published:Updated:

தனித்துவம் காட்டுங்கள்... வெற்றியாளர் ஆகுங்கள் !

சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்

##~##

டியர் ஃப்ரெண்ட்ஸ்... 'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில் எங்களின் முதல் அசைன்மென்ட், பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா பேட்டி. அழகுத் தமிழில் ஆளுமைத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் முதல் அனுபவமே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் கேட்ட கூர்மையான கேள்விகளுக்கு அவர் அளித்தத் தெளிவான பதில்கள்...

''நீங்கள் முதன்முதலில் ஏறிய மேடை எது? இதுவரை எத்தனை மேடைகளில் பேசி இருக்கிறீர்கள்?''

''நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பாரதி பாசறை சார்பாக சென்னை - ராயபுரத்தில் நடந்த 'பாரதியார் தேசத்துக்காகப் பாடினாரா? சமூகத்துக்காகப் பாடினாரா?’ என்ற பட்டிமன்றத்தில் 'சமூகத்துக்காகப் பாடினார்’ என்ற தலைப்பில் அணித் தலைமையில் பேசினேன். இதுவரை ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி இருக்கிறேன்.''

''முதல் பேச்சுப் போட்டி அனுபவத்தைச் சொல்லுங்களேன்''

''எனக்கு மிகவும் பயமாக இருந்தது. கை, கால்கள் நடுங்கின. ஆனால், தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டேன். நான் பேசத் தொடங்கியபோது, பேச்சுப் போட்டிக்காக தயாரித்த பேப்பர் மனத்திரையில் ஓடியது. முதல் அனுபவமே நிறைவைத் தந்தது.''

தனித்துவம் காட்டுங்கள்... வெற்றியாளர் ஆகுங்கள் !

''நீங்கள் பேச்சாளராகச் சிறந்து விளங்குவதன் பின்னணி?''

''பார்வையாளர்களின் காதுகளை வசீகரப்படுத்துபவரே உண்மையான பேச்சாளர் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதற்குத் தகுந்தபடி எனது பேச்சுக்கலையை வளர்த்துக் கொண்டேன்.''

''உங்கள் வெற்றிக்கான அடிப்படைக் காரணமாக எதை நினைக்கிறீர்கள்?''

''இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். அவற்றில் 500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் முதல் பரிசு பெற்று இருக்கிறேன். நான் பேச்சாளராக வெற்றி பெற்றதற்குக் காரணம் எனக்குப் பரிசுகளைத் தந்த போட்டிகள் அல்ல; நான் கலந்துகொண்ட அனைத்துப்

தனித்துவம் காட்டுங்கள்... வெற்றியாளர் ஆகுங்கள் !

போட்டிகளுமேதான் காரணம். எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மூலமாகத் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் மேடைகளில் ஏறுவதுதான் வெற்றிக்கு அடிப் படையாக இருக்கிறது''

''ஒரு பேச்சாளர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை...''

''பேச்சு என்பது பார்வையாளர்களை வசியப்படுத்துவதாக இருக்க வேண்டும். நமது போட்டியாளர்களின் மனத்தைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. எந்தச் சூழலிலும் கண்ணியம் தவறிப் பேசக்கூடாது. அதேபோல், மொழி மீது பற்று மிகவும் அவசியம். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் பேசும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.''

''உங்களுக்கு மிகவும் பிடித்த பட்டிமன்றத் தலைப்பு?''

''ம்... (யோசிக்கிறார்) குறிப்பிட்டு ஒரு தலைப்பைச் சொல்ல முடியாது. எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நான் பேசுவேன். இலக்கியம் தொடர்பான அனைத்துத் தலைப்புகளுமே எனக்குப் பிடித்தமானவை தான்''

''நீங்கள் விரும்பிப் படிக்கும் இலக்கியம் எது?''

''திருக்குறள், கம்ப ராமாயணம் மற்றும் பாரதியார் கவிதைகள். பாரதியின் 'தேடிச் சோறு நிதம் தின்று...’ கவிதை வரிகள் மிகவும் பிடித்தவை.''

''சரி, உங்களைக் கவர்ந்த பட்டிமன்ற நடுவர் யார்?''

''ஆஹா... இப்போதே நீங்கள் நிருபர் ஆகிவிட்டீர்களே! இப்படிச் சவாலான கேள்வியைக் கேட்கிறீர்கள். குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா, சுகி.சிவம்... பட்டிமன்ற நடுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள் தான்''

''உங்களின் ரோல் மாடல்?''

தனித்துவம் காட்டுங்கள்... வெற்றியாளர் ஆகுங்கள் !

''நான் யாரையும் ரோல் மாடலாக வைத்துக்கொள்வது இல்லை. தனித்துவத்துடன் செயல்பட்டு வெற்றியாளராக வேண்டும் என்பதே எனது விருப்பம். கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால், என்னுடைய அம்மாதான் எனது முன்மாதிரி என்பேன். நான் துவண்டு இருந்தபோது எல்லாம் தட்டிக்கொடுத்து எழுச்சிபெற வைத்தவர் அவர்தான். வெற்றி - தோல்விகளைச் சரிசமமாகப் பார்க்கும் அவரது பண்பை அப்படியே நானும் பின்பற்றுகிறேன். அதுபோல், பார்க்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.''

''நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது குடும்பத்துக்கா? புகழுக்கா?''

முதலில் குடும்பம். அடுத்தது பேராசிரியர் பணி, மூன்றாவது புகழ், நான்காவது பொருள். முதல் மூன்றுக்காகப் பொருளை இழக்கத் தயங்க மாட்டேன். ஆனால் பணத்துக்காகக் குடும்பத்தையோ அல்லது பேராசிரியப் பணியையோ இழக்க முன்வர மாட்டேன்.''

''உங்களால் மறக்க முடியாத மேடை?''

''ஒரு முறை இலங்கையில் பேசுவதற்கு அழைத்து இருந்தார்கள். அப்போது அங்கு உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்த காலகட்டம். நான் பேசுவதற்காக மேடை ஏறியபோது என்னிடம் ஒரு துண்டுச் சீட்டு வந்தது. அதில் 'எந்த நேரம் வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம். எனவே பேச்சை சீக்கிரம் முடித்துவிடுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனத்தில் பதற்றம் இருந்தாலும் முழுமையாகப் பேசி முடித்தேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.''

''எங்களைப் போன்ற சுட்டிகள், பிற்காலத்தில் சிறந்த பேச்சாளர்கள் ஆவதற்கு நீங்கள் தரும் டிப்ஸ்?''

''கம்பீரமான நடை, தீர்க்கமான பார்வை, தெளிவான பேச்சு, அச்சத்தை அப்புறப்படுத்து வது இவைதான் சிறந்த பேச்சாளரின் அடையாளம். இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களைவிடச் சுட்டிகள்தான் சிறப்பாகப் பேசுகிறார்கள். நான் விஜய் டிவியில் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி யில் நடுவராக இருந்தபோது, சுட்டிகளின் தமிழ்ப் பேச்சைக் கண்டு அசந்துபோய் இருக்கி றேன். இப்போது, நீங்கள் கேள்விகளைக் கேட்கும் தொனியில் இருந்தே உங்களது திறமை பளிச்சிடுகிறது. உங்களுக்கு என தனித்துவத்தை உருவாக்கிக் காட்டுங்கள். அதற்கு நிறைய வாசிக்க வேண்டும். பாடங் களைத் தவிர நல்ல புத்தகங்களையும் பத்திரிகை களையும் வாசியுங்கள். நிச்சயம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றியாளர் ஆவீர்கள்.''

தனித்துவம் காட்டுங்கள்... வெற்றியாளர் ஆகுங்கள் !

''கடைசியாக, நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?''

''கம்ப ராமாயணத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். (மானைப் பிடிக்க ராமன் செல்ல, ராமனுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று லட்சுமணனை சீதை அனுப்ப, அதைத் தொடர்ந்து லட்சுமணன் இடும் கோட்டை சீதை தாண்டுவதால் ராவணனால் தூக்கிச் செல்லப்படும் காட்சியை அழகாக விவரிக்கிறார்.) லட்சுமணன் போட்ட கோட்டை சீதை தாண்டியதுதான் தவறு என்று நம்மில் பலரும் சொல்கிறோம். ஆனால், அதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். சீதை தனக்குத்தானே ஒரு கோட்டைப் போட்டு இருந்தால், அவள் அதைத் தாண்டி இருக்கமாட்டாள். லட்சுமணன் போட்டதால்தான் தாண்ட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நம்மை மற்றவர்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்பே நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்!''

தொகுப்பு:  மோ.லாவண்யா மோகன், ரா.தனசேகர், அ.நிதின், கு.ஸ்ரீனிவாசன், து.விஷ்ணு பிரசாத், அ.அஸ்வினி, ச.பவித்ரா, அ.கோகுல் பிரசாந்த், இர.தீபிகாஸ்ரீ, வீ. நவீன் ராஜ், சி.சதானந்த், கு.சுவாதிகா, நா.மதுமிதா, அ.ராஜ கணேஷ், சு.உ.சம்யுக்தா, வே.மனோ, ர.பிரதீப், ந.தமிழ் ஓவியா, மு.ரிஃபாத் ஸாரூக் ராஜ், த.சண்முகசுந்தர பாண்டியன், ஜா.பாசில் உசேன், த.பிரியங்கா,      அ.பிரியதர்ஷினி, ச.தீபலக்ஷ்மி, ஜெ.காவியஸ்ரீ,       அ.அல்ஃபமீனா