ஸ்பெஷல்
Published:Updated:

கேப்பபாரா !

ரேஞ்சர் மாமா

##~##

கேப்பபாரா என்னும் விலங்குதான் வளை தோண்டும் பிராணிகளிலேயே மிகவும் பெரியது. ’கே என்றால் 'புற்களின் அரசன்’ எனத் தென் அமெரிக்காவில் பேசப்படும் குரானி மொழியில் அர்த்தம். அந்த வார்த்தையில் இருந்து வந்ததுதான் 'கேப்பபாரா’ என்ற சொல்.

இந்தப் பிராணியின் பூர்வீகம், தென் அமெரிக்கா. இவை கினியா பன்றிகளுக்கு தூரத்துச் சொந்தம். இதன் விலங்கியல் பெயர், ஹைட்ரோகேரஸ் ஹைட்ரோகேரிஸ் (Hydrochoerus Hydrochaeris).

பனாமா, வெனிசுலா, கயானா, பெரு, பிரேசில், பரகுவே, வடக்கு அர்ஜென்டினா, மற்றும் உருகுவே பகுதிகளே இவற்றின் வசிப்பிடங்கள். இவை நீரிலும் நிலத்திலும் வசிக்கும் இயல்புடையவை.

பீப்பாய் வடிவ உடல் அமைப்பைக் கொண்டவை. நன்கு வளர்ந்த கேப்பபாரா 4 அடி நீளமும் 45 கிலோ வரை எடையும் கொண்டதாக இருக்கும். உரோமம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கேப்பபாரா !

10 அல்லது 20 என்ற எண்ணிக்கையில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. கூட்டத்துக்கு ஓர் ஆண் விலங்கு தலைமை ஏற்கும். முனகுவது, கத்துவது மற்றும்  விசிலடிப்பது போன்றவற்றால் இவை ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளும்.

புற்களையும் நீர்த் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பழங்கள் மற்றும் மரப் பட்டைகளையும் சாப்பிடும்.

தண்ணீரில் தூங்குவது மிகவும் பிடிக்கும். மூக்கை மட்டும் நீருக்கு மேலே நீட்டியபடி உல்லாசமாகத் தண்ணீரில் தூங்கும். பகலில் கொஞ்ச நேரமே தூங்கிவிட்டு இரவு முழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.

தண்ணீருக்கு அடியில் ஐந்து நிமிடங்கள் வரை மூச்சை அடக்கிக் கொள்ளும் திறன் உடையவை. எதிரிகளிடம் இருந்து  தப்புவதற்கு இந்த டெக்னிக் பயன்படும்.

இதனுடைய தோலுக்காகவும், உரோமத்துக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குப் போட்டியாகப் புற்களை மேய்ந்துவிடுகின்றன என்பதற்காகவும் இவை கொல்லப்படுகின்றன.

12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய விலங்கு இது.