வாங்க விருந்தாளிகளா வாங்க !சுட்டிகளுக்குக் கதை சொல்கிறார் சத்யராஜ் !
கே.யுவராஜன், சா.வடிவரசு, மகா.தமிழ்ப் பிரபாகரன்
ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன், கே.கணேசன் கே.ராஜசேகரன்
##~## |
''என்னம்மா கண்ணுங்களா சௌக்கியமா?'' என்று கேட்டவாறே செம்மொழிப் பூங்காவுக்குள் நுழைந்தார் சத்யராஜ் அங்கிள்.
எழுந்து நின்று வணக்கம் கூறி வரவேற்றனர் புளியந்தோப்பு, தேவி பிரைமரி நர்சரி பள்ளி சுட்டிகள். ''அட பரவாயில்லையே... குட் மார்னிங்னு ஆங்கிலத்தில் சொல்வீங்கன்னு நினைச்சேன். தமிழ்ல சொன்னது சந்தோஷமா இருக்கு'' என்றார்.
''எங்க ஸ்கூல்ல எப்பவுமே தமிழ்லதான் வணக்கம் சொல்லணும்னு சொல்லிக்கொடுத்து இருக்காங்க அங்கிள்'' என்றாள் நித்யா.
''இப்படி ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லிக்கொடுத்தா நம்ம தமிழ் மொழி உங்களை மாதிரி அடுத்த தலைமுறையிடம் செழிப்புடன் இருக்கும்'' என்றார் சத்யராஜ் அங்கிள்.
பிறகு ஒவ்வொருவரிடமும் பெயர், வகுப்பைக் கேட்டவர் ''நான் யார் தெரியுமா?'' என்று கேட்டதும், ''தெரியுமே... வைரஸ்'' என்று கூட்டத்தில் இருந்து குரல் வர, எல்லோரும் சிரித்தார்கள்.
''அடேங்கப்பா... பயங்கர அப்டேட்டா இருக்கீங்க? அந்தப் படம் உங்களுக்குப் பிடிச்சு இருந்ததா?'' என்று கேட்டார்.

''ஓ... நீங்க வைரஸ் கேரக்டர்ல சூப்பரா நடிச்சு இருக்கீங்க அங்கிள்'' என்று அஷோக் சொல்ல, ''ரொம்ப நன்றி! அந்தப் படம் கல்வியைப் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் சொல்ற கதை. காலேஜ்ல படிக்கிறவங்களுக்கான கதை. அதனால் இன்னும் கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு அதே படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு அதில் பல விஷயங்கள் புரியும். இப்போ நான் சொல்லப்போறது ஒரு ஸ்கூலில் நடக்கிற கதை'' என்றார்.
''சொல்லுங்க அங்கிள்'' என்று அவரை இன்னும் நெருக்கமாக ரவுண்ட் கட்டினார்கள்.
''ஒரு ஊருல ரகு, பாலாஜி என ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரே தெருவில் வீடு. ஒரே ஸ்கூலில் ஏழாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தாங்க. ஒரு நாள் ஓட்டமும் நடையுமா ஸ்கூலுக்குப் போய்ட்டு இருந்தாங்க. ஏன்னா, அன்னிக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு. வேகமா நடந்ததில் அவங்க முகமும் சீருடையும் வியர்வையில முழுசா நனைஞ்சு இருந்துச்சு. 'என்னால இதுக்கு மேல வேகமா வர முடியாதுடா. நீயாவது கேட் மூடுறதுக்குள்ளே சீக்கிரம் போயிரு’னு சொன்னான் ரகு. 'நான் மட்டும் எப்படிடா போறது?’னு பாலாஜி வேகத்தைக் குறைச்சு நடக்க ஆரம்பிச்சான். அவங்க பள்ளித் தலைமை ஆசிரியர் பிரகாசம் ரொம்பவும் கண்டிப்பானவர்'' என்றார் சத்யராஜ் அங்கிள்.
''நண்பன் பட வைரஸ் மாதிரியா அங்கிள்?'' என்று கேட்டாள் நிஷா.

''ஏறக்குறைய அப்படித்தான். 'படிப்பு என்பது இரண்டாம் பட்சம்தான். என் மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கம், காலந்தவறாமையில் சிறந்தவங்களா இருக்கணும்’னு சொல்வார்'' என்றவர், ''நீங்க ஸ்கூலுக்கு லேட்டாப் போனா என்ன தண்டனை கொடுப்பாங்க?'' என்று கேட்டார்.
''கிளாஸுக்கு வெளிய நிக்கவைப்பாங்க, இல்லைன்னா இம்போசிஷன் கொடுப்பாங்க'' என்று வரிசையாகச் சில தண்டனைகளைச் சொன்னார்கள்.
''இந்தப் பிரகாசம் சார் என்ன செய்வார் தெரியுமா? லேட்டா வர்றவங்களைப் பிரம்பால அடிப்பார். பிரேயர் மணி அடிச்சதுமே பள்ளியின் வாசல் கதவை மூடிருவாங்க. பிரேயர் முடிஞ்ச பிறகு பிரகாசம் சார் விரைப்பா வாசலுக்கு வருவார். அவரு கையில பிரம்பு இருக்கும். தாமதமா வந்தவங்களுக்கு அடி விழும். இதுக்கு விருந்துன்னே பேர். அவரிடம் அடி வாங்குகிறவங்க விருந்தாளிங்க. இந்தப் பேரு பள்ளி முழுக்க ஃபேமஸ். அடி வாங்கிட்டு வர்றவங்களைப் பார்த்து மற்ற மாணவர்கள் ''என்னடா இன்னிக்கு செம விருந்தா?’னு கேலி செய்வாங்க. நம்ம ரகுவும் பாலாஜியும் இருக்கிற அதே தெருவுலதான் பிரகாசம் சார் வீடும் இருக்குது. அதனால அவங்களை அவருக்கு நல்லாவே தெரியும். இதுக்கு முன்னாடி அவங்க இப்படி தாமதமா வந்ததே இல்லை. இதுதான் முதல் முறை. அதுக்கு ஒரு காரணமும் இருக்கு'' என்றார் சத்யராஜ் அங்கிள்.
''என்ன காரணம் அங்கிள்?'' என்று கேட்டான் ராகுல்.
''இருடா அவசரக் குடுக்கை. அது கதையில் சஸ்பென்ஸா இருந்து பின்னாடி வரும். அதானே அங்கிள்?'' என்றான் அர்ஜூன்.
''சபாஷ் பின்றியே... அது சஸ்பென்ஸ்தான். 'காரணங்களைச் சொல்ல ஆரம்பிச்சா, எல்லாத் தவறுகளுக்கும் சொல்லலாம். காரணங்கள் தவறுகளைச் சரி செஞ்சிடாது. அதனால், யாரும் காரணங்களச் சொல்லிட்டு இருக்காதீங்க’ என்பது பிரகாசம் சாரின் பாலிசி. இவங்க பள்ளியின் வாசலை நெருங்கியபோது இன்னும் நிறையச் சிறுவர்கள் தாமதமாக வந்து காத்துட்டு இருந்தாங்க. பிரேயர் முடிஞ்சதும் பிரகாசம் சார் வழக்கம்போல பிரம்புடன் வந்தார். 'வாங்க விருந்தாளிகளா வாங்க... எத்தனை முறை சொன்னாலும், எவ்வளவு விருந்து சாப்பிட்டாலும் உங்க பசி அடங்கலை போல’னு சொல்லிட்டே ஒவ்வொரு பசங்களுக்கும் பிரம்படி விருந்து கொடுத்து அனுப்பினார். ரகு, பாலாஜியைப் பார்த்து 'அட... புது விருந்தாளிகள். என்னடா மத்த பசங்களைப் பார்த்து உங்களுக்கும் ஆசை வந்துடுச்சோ?’னு முறைச்சார். 'சார் அது வந்து...’னு ரகு ஏதோ சொல்ல நினைக்க, அவனை அடக்கிட்டு அமைதியா கையை நீட்டினான் பாலாஜி. ரெண்டு பேருக்கும் பிரம்படி கொடுத்து அனுப்பினார்'' என்றார் சத்யராஜ் அங்கிள்.
''நல்ல வேளை எங்க ஸ்கூல்ல அடிக்க மாட்டாங்கப்பா'' என்றாள் தீபிகா.

சத்யராஜ் அங்கிள் கதையைத் தொடர்ந்தார் ''தாமதமா வந்த எல்லோரையும் கவனிச்சு முடிச்ச பிறகு பிரகாசம் சார் தன்னோட அறைக்குத் திரும்பினார். மேஜை மேல இருந்த அவருடைய செல்போன்ல அவரு வீட்டுல இருந்து மிஸ்டு கால் வந்து இருந்துச்சு. ரொம்பவும் முக்கியமான விஷயமாக இல்லாமல் செய்ய மாட்டாங்களேனு நினைச்சுக்கிட்டே உடனே போன் பண்ணினார். விஷயத்தைக் கேட்டதும் பதறிட்டார். 'நான் உடனே வர்றேன்’னு சொன்னார். அதுக்கு அவரோட மனைவி 'வேண்டாங்க. இப்போ எல்லாம் சரியாப்போச்சு’னு சொன்னாங்க. போனைவைத்த பிரகாசம் சார் பியூனைக் கூப்பிட்டு ''ஏழாவது சி செக்ஷன்ல இருக்கிற ரகுவையும் பாலாஜியையும் உடனே வரச் சொல்லு’ என்றார். கொஞ்ச நேரத்துல வந்து நின்ற அவர்களைப் பக்கத்தில் கூப்பிட்டார். 'இப்பத்தான் போன் வந்துச்சு. தெருவில் வந்துட்டு இருந்த என் அப்பாவுக்குத் திடீர்னு மயக்கம் வந்துட்டதாகவும் நீங்கதான் அவரைத் தூக்கிட்டு வீட்டுக்குப் போனதாகவும் கேள்விப்பட்டேன். இதை ஏன் என்கிட்டே சொல்லலை?’னு கேட்டார்.
அதுக்கு பாலாஜி 'நான்தான் சார் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணினேன். தாமதமா வந்த அத்தனை பேருக்கும் நீங்க தண்டனை கொடுத்துட்டு இருக்கிறப்ப நாங்க விஷயத்தைச் சொன்னா சங்கடமாப் போய்டும். மற்ற பசங்க உங்க அப்பாவைக் காப்பாத்தினதால விட்டுட்டாருன்னு பேசிப்பாங்க. வேற யாருக்கு உதவி செஞ்சு இருந்தாலும் நீங்க எங்களைத் தண்டிச்சு இருக்க மாட்டீங்கன்னு அவங்களுக்குப் புரியாது’ என்றான் பாலாஜி. அதைக் கேட்டதும் பிரகாசம் சார் திகைச்சுட்டார். அவங்களை அப்படியே அணைச்சுக்கிட்டார். 'சின்னப் பசங்களா இருந்தாலும் எந்த அளவுக்கு யோசிச்சு இருக்கீங்க. அருமைடா கண்ணுங்களா! இன்னையில இருந்து நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே தாமதமா வர்றவங்களைத் தீர விசாரிச்சு அவங்க சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுப்பேன். வேணும்னே தாமதமா வந்து இருந்தாலும் அவங்களுக்கான தண்டனை பிரம்பு அடியா இருக்காது. வேற மாதிரி வேலை கொடுப்பேன்’ என்றார். 'அதாவது விருந்தோட ஸ்டைலை மாத்தப் போறீங்கன்னு சொல்லுங்க’ என்று உற்சாகத்துடன் சொன்னான் ரகு. சிரித்த பிரகாசம் சார் 'ஆமா... ஆமா! விருந்து புதுசு... சுவையோ வேற தினுசு’ என்றார். அந்த நாளில் இருந்து பிரகாசம் சார் யாரையும் அடிக்கிறது இல்லை. செடிகளுக்குத் தண்ணீரை ஊற்று, சின்ன கிளாஸ் பசங்க சாப்பிட ஹெல்ப் பண்ணுனு வித்தியாசமான விருந்தைக் கொடுத்தார்'' என்று முடித்தார் சத்யராஜ் அங்கிள்.
''அங்கிள் நீங்க சொன்ன கதையும் விருந்து சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு. உங்களுக்கு கை கொடுக்கலாமா?'' என்று தயக்கத்துடன் கேட்டாள் அபிராமி.
''ஓ... தாராளமா'' என்றவர் அன்புடன் கை பற்றிக் குலுக்கினார். உடனே மற்ற சுட்டிகளும் கை நீட்ட அத்தனை பேருக்கும் கை குலுக்கியவர், ''சரி கண்ணுங்களா... எல்லோரும் நல்லாப் படிங்க. பள்ளிக்கு சரியான நேரத்துக்குப் போங்க. இந்த வயசுல கத்துக்கிற பழக்கம்தான் கடைசி வரைக்கும் இருக்கும்'' என்றார்.
''நிச்சயமா வைரஸ் அங்கிள்'' என்றனர் உற்சாகமாக!