கே.ஆர்.ராஜமாணிக்கம், இ.கார்த்திகேயன்ஏ.சிதம்பரம்
##~## |
'தூக்குமேடை எனக்குப் பஞ்சு மெத்தை’ எனக் கொக்கரித்து, மரணக் கயிற்றை முத்தமிட்டவர்... வெள்ளையரின் பீரங்கிப் படையைத் தன் நெஞ்சுரத்தால் எதிர்த்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் இன்று நேரில் வந்தால்...
தூத்துக்குடி, கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.டி.ஆர். பள்ளியில் வழக்கம்போல் சீருடை அணிந்துவந்த சிறார்களுக்கு இடையே சில சின்னப் பிஞ்சுகள், கையில் வாளுடன் ராஜா வேஷத்தில் வந்து இறங்கியதைக் கண்டதும், பள்ளி வாட்ச்மேன்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து, ''என்னலே இது... கையில வாலோடு வந்திருக்கே?'' என்று கேட்க, ''இது வாலு இல்லே வாட்ச்மேன், கத்தி. வாலு பின்னால இருக்கும் தெரியுமா'' என்று கலாய்த்துச் சிரித்தனர்.

ஓர் அறையில் குட்டிக் குட்டி மாணவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன்களாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்கள் டீச்சர்கள். முதலில் மேக்-அப். அடுத்து, இடுப்பில் பஞ்சகச்ச வேட்டியுடன் சிவப்புப் துண்டு. தோளில் இருந்து இடுப்பு வரை குறுக்காக அணியப்பட்ட ஜரிகைப் பட்டி, மார்பில் தொங்கும் மணிமாலை, கழுத்தைச் சுற்றிய ஒட்டியாணம், காதுகளில் குண்டலங்கள், கைகளில் அழகிய

தங்க நிறப் பட்டைகள், தலைக் கிரீடம், நெற்றியில் குங்குமத்துடன் திருநீறு, இடையில் எதிரியை நடுங்கவைக்கும் வாள் என அத்தனையும் அணிவிப்பதற்குள் களைத்துவிட்டார்கள் டீச்சர்கள். ஆனால், அத்தனையும் அணிந்து முடித்து, மீசை வரைந்ததும் முழுமையான கட்டபொம்மன் களைக் கண்டபோது அனைவரின் முகங்களிலும் கிழ்ச்சி.
இன்னொரு பக்கம் ''எனக்குதாண்டா பெரிய மீசை... உனக்கு சின்ன மீசைடா'' என்று ஒருவன் இன்னொருவனிடம் சொல்ல, அவன் ''மிஸ்... மிஸ் எனக்கும் பெரிய மீசையா வைங்க மிஸ்'' என்றான். ''மிஸ் என் மீசையை இவன் அழிச்சிட்டான்'' என்றும், ''என் மீசையை இவன் முறுக்குறான்'' என்றும் கட்டபொம்மன் களிடம் இருந்து புகார் மழை.
ஒரு கட்டபொம்மன் மட்டும் ''எனக்கு மீசைவேண்டாம்'' என்று அழுது அடம்பிடித்தது சுவாரஸ்யமாக இருந்தது.
ஒரு கட்டபொம்மனுக்குத் தாகம் எடுக்க, தண்ணீர் பாட்டில் வைத்திருந்த சக கட்டபொம்மனிடம், 'தண்ணீ கொடுடா’ என்று கேட்டான். பதிலுக்கு, 'உனக்கேன் கொடுக்க வேண்டும் தண்ணீ... என்னோடு அடிபம்புக்கு வந்தாயா? பைப்பை அடித்தாயா? அல்லது பாட்டிலில்தண்ணீரை நிரப்பினாயா?’ என்று டைமிங்காக வசனம்பேசி அசத்தினான்.

கட்டபொம்மனாக வேஷம் அணிந்ததும் சிறுவர்களிடையே சோர்வுஎன்பதே காணப் படவில்லை. உணவு இடைவேளை ஆரம்பமானதே தெரியாமல் பசியையும் மறந்து, வீரச்சிறுவர்களாய் விளையாடியது வியப்பாக இருந்தது. வீரம் விளைந்த மண்ணில் விளைந்தவர்கள் நாம் என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்வோம்.
வீரபாண்டிய கட்டபொம்மன்!

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு சகோதரிகளும் இருந்தனர்.
அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள் வந்தது.
1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம் ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.
'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதியில் 2010-ஆம் ஆண்டு எஸ்.டி.ஆர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. X-SEED பாடத்திட்டம் கொண்டு ICSE அமைப்பின் கீழ் செயல்படுவது பள்ளியின் சிறப்பு அம்சம்.
விளையாட்டு, யோகா வகுப்புகள், ஸ்கேட்டிங், இசைப் பயிற்சி, சமையல் வகுப்புகள், நடனம், பாடல், சதுரங்கம், நீச்சல் போன்ற துறைகளில் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. நீச்சல் வீராங்கனையாக ஒன்பதாம் வகுப்பு மாணவி கரோலின் சிந்தியா, இந்திய அளவில் பல வெற்றிகளைப் பெற்று இருக்கிறார். எட்டாம் வகுப்பு மாணவன் ஜுபெல், சதுரங்கத்தில் சிறப்பாக விளங்குகிறார்.
படிப்புச் சுமையைக் குறைக்க இரு பருவத் தேர்வுகள் நடத்தி, மாணவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச்செல்ல SDR பள்ளி வழிவகுக்கிறது.