ஸ்பெஷல்
Published:Updated:

பாட்டில் தோட்டம் !

ஞா.அண்ணாமலை ராஜா

##~##

மின்வெட்டு... பாடம் படிக்க முடியலை; டிவியில் பிடிச்ச ப்ரோக்ராம் பார்க்க முடியலை-னு நமக்கும் தலையாயப் பிரச்னையா இருக்கு. இதற்கு சூரிய  ஆற்றல் மூலம் தீர்வு காண்பதுடன், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் நம் வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்க முடியும் என்று சொல்லி, அவற்றுக்கு 'டெமோ’வும் காட்டுகிறார்கள் விக்னேஷ் பாண்டியன் மற்றும் திருச்செந்தூரன்.

தங்களது 'தி திங்க் சென்டர்' மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வரும் இவர்கள் ''மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க, தீராத ஆற்றலான சூரிய ஒளிதான் ஒரே தீர்வு. சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் வகையிலான அமைப்பை நம் வீடுகளில் பொருத்திப் பயன் பெறலாம். ஒட்டு மொத்தமாகக் குண்டு பல்புகளுக்கு குட் பை சொல்லிவிட்டு, சி.ஃஎப்.எல் பல்புகள் பொருத்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்'' என்றனர்.

பாட்டில் தோட்டம் !

தாங்கள் உருவாக்கிய சோலார் எனர்ஜி கிட்ஸ்-ஐ வெயிலில் கொண்டுவந்து மாணவர்களுக்கு விளக்கினார்கள். ''இந்த சோலார் தட்டின் மீது சூரிய ஒளி படும்போது உள்ளே இருக்கின்ற இன்வெர்ட்டரில் எனர்ஜி ஸ்டோர் ஆகிவிடும். பிறகு தேவையான மின்சாரத்தை அந்த இன்வெர்ட்டரில் இருந்து பெறலாம்'' என்றார்கள். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உதவியின்றி வீட்டிலேயே எளிய முறையில் காய்கறிகளை விளைவிப்பதற்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.

பாட்டில் தோட்டம் !

''குளிர்பான பாட்டில்கள் ஐந்தை எடுத்து  ஒன்றின் கீழ் ஒன்று இருக்கும்படி படுக்கை வசத்தில்   கட்டுக்கம்பியைக்கொண்டு கட்ட வேண்டும். அதில் செடிகளை ஊன்றிவைக்க வேண்டிய அளவுக்கு மூன்று துளைகளைப் போடவும். பிறகு பாட்டிலைச் சுற்றி சிறிய அளவில் ஆங்காங்கே துளைகள் போட வேண்டும். இது செடிக்குக் காற்றோட்டத்தைத் தரும். பாட்டிலில் மேற்புறமாகப் பார்த்த மாதிரி இருக்கும் துளைகள் வழியே, தோட்டத்தில் இருந்து எடுத்துவந்த மண்ணைப் போட்டு நிரப்ப வேண்டும். அதில் மிளகாய் செடியை, அதன் வேர் மண்ணில் முழுதாகப் புதையும் அளவுக்கு ஊன்றவும். அதேபோல மண் நிரப்பப்பட்ட மீதி பாட்டில்களில் கீரை வகைகள், வெங்காயம்னு வெவ்வேறு காய்கறிகள்கூட வளர்க்கலாம். இது நிலத்தில் விளைகிற பொருட்களைவிட சுவையாகவும் இருக்கும். பாட்டில்களைக் கம்பியால் கட்டி, இந்த தொங்கு சாரத்தை வீட்டு ஜன்னல்கள் தொங்கவிடலாம்'' என்றதும், இதை நாங்களும் செயல்படுத்தப்போகிறோம்’ என்று உற்சாகத்துடன் சொன்னார்கள் சுட்டி ஆர்வலர்கள்.