பூ.கொ.சரவணன், பாரதிராஜா
##~## |
பராக் ஒபாமாவின் தந்தை சீனியர் ஒபாமா, கென்யா நாட்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்துக்குப் பட்டப்படிப்புக்காக வந்த மாணவர். அங்கே ஆன் டன்ஹாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஹவாயின் ஹோனோலுலுவில் இவர்கள் இருவருக்கும் 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார் பராக் ஒபாமா. கென்யாவின் 'ஸ்வாஹிலி' மொழியில் 'பராக்’ என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று பொருள்.
திருமணமான மூன்றே வருடங்களில் பெற்றோர் பிரிந்தனர். அதற்குப் பிறகு அம்மாவுடன் இந்தோனேஷியா சென்றார். அங்குதான் ஒபாமாவின் குழந்தைப் பருவம் கழிந்தது.
அமெரிக்காவில் தனது பள்ளிப் பருவத்தின்போது தாத்தா, பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது. பள்ளியில் படிப்பிலும், கூடைப்பந்து ஆட்டத்திலும் சிறந்து விளங்கினார். கருப்பினத்தவர் என்று கூறி, வகுப்பில் சக மாணவர்கள் இவரை இழிவாக நடத்தினர். கூடைப்பந்துப் போட்டிகளின்போது துன்புறுத்தப்பட்டார். அப்போது, கண்ணாடி முன் சட்டையைக் கழட்டிவிட்டு தன்னைத்தானே உற்றுப்பார்த்து... 'ஏன் இந்த வேறுபாடு?’ என அழுது இருக்கிறார்.

வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே அப்பா வந்து பார்ப்பார். ஒபாமாவுக்குத் தன் தந்தையின் மீது எல்லையற்ற பாசம் உண்டு. அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, அவர் வாழ்ந்த இடங்களுக்குப் பயணம் செய்து அவரைப்பற்றிய தகவல்களைச் சேகரித்தார். ''என் தந்தையிடம் இருந்து எனக்கான கனவுகள்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல், ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் வலியையும், சம உரிமைத் தாகத்தையும் உலகுக்கு எடுத்துச் சொன்னது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தார். பிறகு சில காலம் சிகாகோ தேவாலயத்தின் சமூக முன்னேற்றத் திட்ட இயக்குனராகப் பணியாற்றினார். அதையடுத்து ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்றார். பின்னர் சிகாகோ சட்டப் பல்கலைகழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தவர்.கல்விக் கடனிலேயே படித்தவர். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் தனது கல்லூரிப் படிப்புக்காக வாங்கிய கடனையே அடைத்திருந்தார். இவரது வருமானத்தின் பெரும் பகுதி, இவர் எழுதிய புத்தகங்களின் மூலமே இன்னமும் கிடைக்கிறது. அதுபோக இவரது Dreams from My Father, மற்றும் The Audacity of Hope நூல்களின் ஒலி வடிவம், இவருக்கு அமெரிக்க இசை உலகில் உயரியதாகக் கருதப்படும் கிராமி விருது கிடைக்க வகைசெய்தது.
குத்துச்சண்டை மிகவும் பிடிக்கும். 'எப்பொழுதும் மோதிப் பார்த்துவிட வேண்டும். எதிராளியின் பலத்தைப் பார்த்து பயம் இல்லை; நம்மிடம் நம்பிக்கை இருந்தால் போதும்’ என்று அடிக்கடி சொல்வார். அமெரிக்காவின் செனட் தேர்தலில் வென்று தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
முதலில் கிளின்டனை ஆதரித்து அரசியல் செய்தார். பிறகு ஜான் கேரிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இறுதியில், தானே அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்தார்.
ஒபாமாவுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தபோது, ''உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!'' என்று இவர் தன் சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் அவர் இஸ்லாமியர் என அடுத்த வதந்தி கிளம்பியது. ''இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்'' என்று பேசி, ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றிபெற்றார்.
பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 'இந்த விருது என்னைக் கூச்சப்படவைக்கிறது. இது என்னுடைய பணிகளை இன்னமும் அதிகப் பொறுப்பு மிகுந்ததாக ஆக்குகிறது'' என்று பணிவாகச் சொன்னார்.