ஸ்பெஷல்
Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

மனிதர்களின் சிறந்த நண்பன் என்று நாயைத்தான் சொல்வார்கள்... ஆனால், ஓர் ஊருக்கே நெருங்கிய அன்பு நண்பனாக உலா வருகிறது மயில் ஒன்று!

கர்நாடகாவின் பந்த்வால் மாவட்டத்தில் இருக்கிறது கேபு என்ற சிறிய கிராமம். சுமார் 50 வீடுகள் மட்டுமே உள்ள அந்த ஊருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மயில் வந்தது. தனது கூட்டத்தாரைவிட்டு எப்படியோ பிரிந்துவிட்ட இந்த மயில், அந்த ஊரிலேயே தங்கிவிட்டது.

அங்கு உள்ள வீடுகளில் தயக்கமின்றி நுழைந்து, அவர்கள் அளிக்கும் உணவு வகைகளைத் தின்பது, சுட்டிகளுடன் விளையாடுவது, அவ்வப்போது  தோகையை விரித்து நடனமாடி  அவர்களை மகிழ்விப்பது என... அந்த ஊரோடு ஒட்டி உறவாடி வாழ்ந்துவருகிறது இந்த அழகு மயில்.

பென் டிரைவ்

ஐஸ்க்ரீம் என்றால் சுட்டிகளுக்குக் கொள்ளைப் ப்ரியம். சமீபத்தில் பிரிட்டனில் ஹெஸ்டன் ப்ளூமெந்தால் (Heston Blumenthal) என்பவர் உலகிலேயே மிகப் பெரிய ஐஸ்க்ரீம் ஒன்றை உருவாக்கினார். கிட்டத்தட்ட ஒரு டன் எடைகொண்ட இந்த ஐஸ்க்ரீம் உயரம் 13 அடி. கோனுக்கு மேல் ஃப்ரீஜ் செய்த ஐஸ்க்ரீமை ஃபோர்க் லிஃப்ட் மூலம் தூக்கிவைத்ததை மக்கள் வாய் ஊற பார்த்து பிரமித்தனர். விரைவில் 'ஹெஸ்டன்ஸ் பிக் ஐடியா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தப்போகிறார் ஹெஸ்டன். தன் நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காகத்தான் இந்த பிரமாண்ட ஐஸ்க்ரீமை உருவாக்கினார். இதுவே கின்னஸ் சாதனை ஆகவும் மாறிவிட்டது. இதற்கு முன் இத்தாலி நாட்டில் உருவாக்கிய 9 அடி ஐஸ்க்ரீம்தான் உலக சாதனையாக இருந்து உள்ளது.

பென் டிரைவ்

அண்மையில் பிரேசில் தலைநகரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 'தி யுனைடெட் நேஷன்ஸ் கான்ஃப்ரென்ஸ் ஆன் சஸ்டைனபிள் டெவலப்மென்ட்’ என்ற மாநாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் பொடாஃபொகோ (Botafogo) கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களையே உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு பிரமாண்ட மீன்கள் உருவாக்கி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினர்.  

மூன்றே வயசுதான். ஆனால், தீரஜ் மிகத் திறமைசாலி. 215 நாடுகளின் தேசியக் கொடிகளைச் சரியாக அடையாளம் காட்டுவதுடன் அந்த நாடுகளின் பெயர்களையும் 2.19 நிமிடங்களில் சொல்லிச் சாதனை படைத்து இருக்கிறான்.

பென் டிரைவ்

சென்னை ராயப்பேட்டை ரோட்டரி கிளப் அமைப்பினர் இந்தக் குழந்தையின் திறமை உலகெங்கிலும் ஒலிக்க வேண்டும் என்று விரும்பினர். இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு அமைப்பை வரழைத்து, அவர்கள் முன்னிலையில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த ஏற்பாடு செய்தனர். விரைவிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகிறான் தீரஜ்

வாழ்த்துக்கள் தீரஜ்!

பென் டிரைவ்

பிலிஃபைன்ஸ் நாட்டில் உள்ள புனாவன் (Bunawan) நகரில் பெரிய முதலை ஒன்று பிடிபட்டது. இந்த முதலையின் நீளம் 20.24 அடி. இதுதான் உலகலேயே மிகப் பெரிய முதலை என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஒரு டன்னுக்கும் மேல் (1,075 கிலோ கிராம்) எடைகொண்ட இந்த முதலையை அங்கு உள்ள உயிரியல் பூங்காவில்  பாதுகாத்துவருகிறார்கள். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் உள்ள 17 அடி நீளம் கொண்ட முதலைதான் பெரியது எனப் பதிவு செய்யப்பட்டு இருந்தது!

பென் டிரைவ்

 காஷ்மீரைத் தவிர, நாட்டின் வேறு எந்தப் பகுதியையும் நேரில் பார்க்காத 25 சுட்டிகளை, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களைப் பார்க்கவைத்து இருக்கிறது நமது ராணுவம்.

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் என்ற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், 'தேசிய ஒருமைப்பாட்டுச் சுற்றுலா’ திட்டத்தின் கீழ் 14 நாள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு ராணுவத் தளபதி ஜெனரல் பிக்ராம் சிங் உடன் கலந்துரையாடினர்.

அவர்களிடம் தம் அனுபவத்தைச் சொன்ன ராணுவத் தளபதி, ''காஷ்மீர் பள்ளத்தாக்கு எப்போதும் என் மனதைவிட்டு நீங்காத இடம். இங்கே  பணியாற்றும்போது, எதிரிகளின் புல்லட் துளைத்து ரத்தம் சிந்தி இருக்கிறேன்'' என்றார்.

ராணுவம் தொடர்பான கேள்விகளுக்கு நிதானமாக விளக்கம் அளித்த ஜெனரல் பிக்ராம் சிங், ஒவ்வொரு சுட்டிகளுக்கும் கை கொடுத்து வாழ்த்தி, சுற்றுலாப் பயணத்துக்கு அனுப்பிவைத்தார்.

பென் டிரைவ்

 ''சில்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா (CFSI) 250-க்கும் மேலான படங்களைத் தயாரித்து உள்ளது. சிறுவர்களுக்கான அந்தப் படங்கள் இதுவரை வர்த்தகரீதியில் சினிமா தியேட்டர்களில் வெளியானதே இல்லை. இந்தக் குறையைப் போக்குவதற்கு, 'கட்டு’ (Gattu) என்ற சிறுவர்களுக்கானப் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விழாவில் பேசிய சி.எஃப்.எஸ்.ஐ. தலைவியும் நடிகையுமான நந்திதா தாஸ், ''ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகும் நம் நாட்டில், சுட்டிகளுக்காக மிகக் குறைந்த படங்களே தயாரிக்கப்படுகின்றன'' என்று வருத்தப்பட்டார்.

'ஐ அம் கலாம்’, 'ஸ்டான்லி கா டப்பா’, 'சில்லர் பார்ட்டி’ போன்ற படங்கள் நிறைய எண்ணிக்கையில் எடுப்பதற்குப் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். சினிமாவில் இனியும் நம் நாட்டுச் சுட்டிகள் உதாசீனப்படுத்தக் கூடாது என்பது நந்திதா தாஸ் ஆன்ட்டியின் விருப்பம்!