ஸ்பெஷல்
Published:Updated:

அழிவின் விளிம்பில் விலங்குகள் !

ஜெ.வெங்கடராஜ்

##~##

''புலிகளின் இனம் அழிந்துகொண்டு வருகிறது அதை நாம் காப்பாற்ற வேண்டும். யானைகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கவேண்டும்'' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள்.

'''புலிகள், யானைகள் முதலான விலங்குகள்  அழிந்துவிட்டால் அப்படி நமக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? 'ஒரு காலத்தில் டைனோசர், மம்மோத் (Mammoth) எல்லாம் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. ஆனால் இந்தப் பூமி இன்றும்கூட அப்படியேதான் இருக்கிறது’ என்று நினைத்தால் அது நம்முடைய ஆபத்தை இன்னும் பல மடங்கு அதிகரித்துவிடும்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் அசோகன்.

''அழிந்து வரும் உயிரினங்கள்பற்றி பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை 'அழிவின் விளிம்பில் இந்தியப் பாலூட்டிகள்’ (Endangered Mammals of India) என்ற தலைப்பில் அரசு அருங்காட்சியத்தில் கண்காட்சி நடைபெற்றது.

அழிவின் விளிம்பில் விலங்குகள் !

அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் புலி, மலபார் சிவியட், ரெட் பான்டா, சிறுத்தை, ஆசிய சிங்கம், பனிச் சிறுத்தை போன்ற விலங்குகள் பற்றி பொறுமையாக நம்மிடம் விவரித்த அசோகன், ''விலங்குகளின் அழிவு என்பது அவற்றோடு முடியாது. அது மனிதர்களையும் பாதிக்கும். இயற்கையில் புல், பூண்டு, கொசு என அத்தனையும் ஒவ்வொரு காரணத்தோடுதான் படைக்கப்பட்டு உள்ளன. அவை தமது வேலைகளை சரிவரச் செய்கின்றன. இதுதான் உயிர்ச் சங்கிலி. இதில் ஒரு கண்ணி அறுபட்டாலும் அதன் விளைவு மற்ற உயிரினங்களையும் பாதிக்கும்'' என்று விவரித்தவர், ''இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டுசேர்ப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கம். அடுத்து தமிழகத்தின் 20 மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் இதேபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படும். இதன் மூலம் மற்ற உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு மிகுதியாகும்'' என்றார்.

''பள்ளிகளிலும் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். விலங்குகளைக் காப்பாற்றினால் மனித இனம் நிம்மதியாக வாழ முடியும் என்பதை மக்கள் உணர்ந்தால், அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றும் சொன்னார் அசோகன்.

நாமும் முடிந்த வரை நண்பர்களிடம் இந்தச் செய்தியைப் பரப்புவோம். நாளைய தலைமுறையான நமக்குத்தானே பொறுப்புகள் அதிகம்!

அழிவின் விளிம்பில் விலங்குகள் !