தொகுப்பு: வீ.கே.ரமேஷ், சி.ஆனந்தகுமார், வீ.சக்தி அருணகிரி.படங்கள்: க.தனசேகரன், எம்.ராமசாமி.
பவித்ரா, 3-ஆம் வகுப்பு, ஜி.உசிலம்பட்டி

''எனக்குக் கண்ணாமூச்சி விளையாட்டுதான் ரொம்பப் பிடிக்கும். ஆனா, அம்மா என்னை விளையாடவே விட மாட்டாங்க. அப்பிடியே விட்டாலும், பார்த்து விளையாடு... கவனமா விளையாடு’னு சொல்லிச் சொல்லி அனுப்புவாங்க. அதனால ஃப்ரீயா விளையாட முடியாமப்போயிரும். விளையாடும்போது பொம்பளைப் பிள்ளைங்களுக்குக் காயம் பட்டுத் தழும்பு ஆயிடுச்சுனா அழகு போயிரும்னு சொல்வாங்க. நாங்க என்ன கம்பு வெச்சுக்கிட்டா விளையாடுறோம்? விளையாடும்போது எப்பவாச்சும் அடிபடத்தானே செய்யும்? அதுக்காக, சின்ன வயசுல விளையாடாம இருக்க முடியுமா அங்கிள்? விளையாடிக்கிட்டே வேலை செய்யணும், வேலை செஞ்சுக்கிட்டே விளையாடணும்னு சொல்லுவாங்க. அதனால, தாத்தாவோட ரைஸ் மில்லுல போயி வேலை செஞ்சுக்கிட்டே விளையாடுவேன். எனக்குப் பொய் சொல்றது பிடிக்காது. ஆனா, அம்மா எனக்காகப் பொய் சொல்லும்போது மட்டும் பிடிக்கும்.''
க.கோபிகா, 4-ஆம் வகுப்பு, சேலம்.

''எனக்கு ஒரே அண்ணன் கார்த்திக்ராஜா. அவன் செவன்த் படிக்கிறான். நானும் அண்ணனும் அடிக்கடி சண்டை போடுவோம். இது நாங்க ஜாலியாப் போட்டுக்கிற சண்டை. அது தெரியாம அம்மாவும் அப்பாவும் எங்களைத் திட்டுவாங்க. ஆனா, கொஞ்ச நேரத்திலேயே நானும் அண்ணனும் பேசிப்போம். அண்ணன்கிட்ட சண்டை போடுறதுதான் எனக்குப் பிடிக்கும். ஆனா அம்மாவும் அப்பாவும் எங்களைத் திட்டுறது பிடிக்கலை. அப்புறம், காலையில எழுந்திருச்ச உடனே முகத்தைக் கழுவு, பல்லு தேய், சீக்கிரமா சாப்பிடு’ன்னு மிரட்டி மிரட்டி அவசரமாப் புறப்படவச்சு, ரோபோ மாதிரி என்னை ஸ்கூலுக்கு அனுப்புறது சுத்தமாப் பிடிக்கலை. ஸ்கூல் போக லேட் ஆயிடுச்சுன்னா, 'நான் காலைல இருந்தே சொல்லிட்டு இருக்கேன். இவ புறப்படாம அங்க இங்க ஆடிட்டே இருந்தா, இப்ப வேன் போயிருச்சு, இவளை யார் இப்போ ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறது?’னு திட்டுவாங்க அப்ப அழுகை அழுகையா வரும். என்னை அவ, இவன்னு சொன்னாப் பிடிக்காது. அப்பாவும், அம்மாவும் என்னை பாப்பா, பாப்பான்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, கோபம் வந்துட்டா மட்டும் அவ, இவன்னு ஏன் சொல்லறாங்கனு தெரியலை அங்கிள். எப்பவும் ஒரே மாதிரியா இருக்கலாம் தானே?''
ஜெ.ஜெயஸ்ரீ, 4-ஆம் வகுப்பு, பெரம்பலூர்.

''நான் ஒரே பொண்ணு. என் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. நான் பிறந்ததுல இருந்து ஒரு தடவைதான் அப்பாவைப் பார்த்து இருக்கேன். அப்பா இப்போ வெளிநாட்டுல இருக்கார். என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அப்பாகூட ஸ்கூலுக்கு வண்டியில வந்து இறங்குறாங்க. அதைப் பார்க்கும்போது, 'நம்ம அப்பா எப்ப வருவாரே?’னு மனசு கேட்கும். அப்புறம், ஃப்ரெண்ட்ஸ்கூட வெளியில போயி விளையாடப் பிடிக்கும், அம்மா விட மாட்டாங்க. அம்மா அதிகம் படிக்காததுனால, பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களைக் கேட்க முடியாது. எப்படிப் படிச்சாலும் ரெண்டாவது ரேங்க்தான் எடுக்க முடியுது. அம்மா அதுக்கும் அடிக்கிறாங்க. எப்ப அப்பா வருவாரோனு கவலையா இருக்கு!''
கு.ரேஷ்மன்குமார், 5-ஆம் வகுப்பு, தேனி.

''எனக்கு நிறைய ஊர் சுற்றிப் பார்க்கணும்னு ஆசை. ஆனா முடியலை. என் தங்கச்சி நல்ல பொண்ணுதான். ஆனா, அவ என்னை அடிக்கடி அடிப்பா. அதுதான் பிடிக்கலை. நான் எல்லார்கிட்டயும் கேள்வி கேட்பேன். பதில் சொல்லலைனா, எனக்குப் பிடிக்காது. எனக்குப் பிடிக்காதவங்களோட அம்மா பேசச் சொன்னா, எனக்குப் பொல்லாத கோபம் வரும். நான் டி.வி. பார்க்கிறது இல்லை. ஏன்னா, அதில் ரொம்பக் குழப்புறாங்க. நாலு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கங்க அப்பிடின்னு சொல்றாங்க. அப்புறம், எண்ணெயே சேர்த்துக்கக் கூடாதுனு சொல்றாங்க. எதை நான் நம்புறது? எல்லாரும் பொய் சொல்றாங்க. அவனைவிட நல்லாப் படி, இவனைவிட நல்லாப் படினு அம்மா சொல்றாங்க. ஆனா, நாம படிக்கணும்னு நினைச்சு உக்காந்து படிக்கிறப்போ, வீட்டுல எல்லாரும் சீரியல் பார்க்கிறாங்க. ஒரே எரிச்சலா வரும். அப்போ எப்பிடிப் படிக்கிறது?''