சுட்டி ஸ்டார்
விண்கல் பள்ளம்!

##~## |
கீரின்லாந்து நாட்டில் மனிட்சாக் நகருக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதன் நீளம் சுமார் 100 கி.மீ. இது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய மிகப் பெரிய விண்கல் ஏற்படுத்திய பள்ளமாம். இதுவரை உலகில் நிகழ்ந்த விண்கல் தாக்குதல்களில் இதுவே பழமையானது என டென்மார்க் புவி ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இந்த விண்கல் மோதலால் அப்போது இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் பேரிழப்பு ஏற்பட்டு இருக்கும். அத்துடன் பூமியின் மேல் பரப்பு 25 கி.மீ உயரம் தாழ்ந்துபோய் இருக்கும். இதனால் ஏற்பட்ட அதிர்வலைகளும் வெப்பமும் பூமியின் ஆழ்ப் பகுதிவரை தாக்கி இருக்குமாம்.

டிஸ்கவரியும் இன்வென்ஷனும்!
டிஸ்கவரிக்கும் இன்வென்ஷனுக்கும் என்ன வித்தியாசம்? ஏற்கனவே இருக்கிற பொருளை அறிந்து பயன்படுத்துவது டிஸ்கவரி. உதாரணமாக மரம் என்பது ஏற்கனவே உள்ள பொருள். அதை முதன்முதலில் பார்த்து பயன்படுத்தியதை டிஸ்கவரி என்று சொல்ல வேண்டும்.

ஆய்வு நிகழ்த்தி புதிதாக ஒரு விஷயத்தை அல்லது பொருளை உலகின் பார்வைக்குகொண்டு வருவது இன்வென்ஷன். உதாரணமாக, பிளைவுட். மரத்தை புது முறையில் மாற்றி அமைத்துப் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்து கண்டுபிடித்ததால் இன்வென்ஷன் என்று சொல்ல வேண்டும்.
இப்பச் சொல்லுங்க பார்ப்போம்... தண்ணீர், மின்சாரம் இதில் எது டிஸ்கவரி? எது இன்வென்ஷன்?

மரமும் மனிதர்களும்!
ஒரு ஆப்பிள் மரம் இருந்தது. அதில் மூன்றே மூன்று பழங்கள் இருந்தன. ஒரு நாள் மதுமதி அந்த வழியே சென்றபோது ''நான் உனக்கான அதிர்ஷ்டம்'' என்றவாறு ஓர் ஆப்பிள் கீழே விழுந்தது. மது அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள். அதை யாருக்கும் கொடுக்காமல் பெட்டிக்குள் வைத்துவிட்டாள்.
அடுத்த நாள் மரம் இருந்த வழியே ரீனா வந்தாள். ''நாங்கள் உனக்கான அதிஷ்டம்'' என்றபடியே இரண்டு ஆப்பிள்களும் விழுந்தன. ரீனா அவற்றை எடுத்துச் சென்று ஏழைப் பெண் தேவியிடம் ஒன்றைக் கொடுத்தாள். இன்னொன்றை அவள் சாப்பிட்டாள். இருவரும் ஆப்பிள் விதைகளை மண்ணில் புதைத்தார்கள்.

மதுமிதா பெட்டியில்வைத்த பழம் சில நாட்களில் அழுகிவிட்டது. அவளது அம்மா அதைக் குப்பையில் போட்டாள். ரீனா விதைத்த விதைகளில் இருந்து புது ஆப்பிள் செடி முளைத்தது. நமக்குக் கிடைப்பதை அடுத்தவருக்கும் பயன்படும் வகையில் செய்வது மனிதம். தனக்கே பயன்படாத வகையில் செய்வது மடத்தனம்.

பாண்ட் 50
துப்பறியும் மன்னன் ஜேம்ஸ் பாண்ட் 'டாக்டர் நோ’ என்ற திரைப்படம் மூலம் 1962-ல் வெள்ளித் திரையில் அறிமுகமானார். இது அவருக்குப் பொன் விழா ஆண்டு. சும்மா இருப்பார்களா?

‘Designing 007: fifty years of bond style’ என்ற கண்காட்சியை லண்டனில் தொடங்கி இருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் பாண்ட் திரைப்படங்களில் இடம்பெற்ற வித்தியாசமான கார்கள், துப்பாக்கிகள், ஆடைகள் இடம்பெற்று உள்ளன. அத்துடன், ஜேம்ஸ் பாண்ட் மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களின் மெழுகுச் சிலைகளும் உள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் லண்டனுக்கு வந்து இந்தக் கண்காட்சியைக் கண்டு ரசிக்கிறார்கள்.

அதிசயக் கட்டடம்!

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான ஓஹியோ (Ohio) என்ற இடத்தில் உள்ள அதிசயக் கட்டடம் பாஸ்கெட் பில்டிங் (Basket Building). இது பனைமரக் கூடைகள் தயாரிக்கும் லாங்கபெர்கர் (Longaberger) கம்பெனியின் தலைமையகம். காண்போரின் கண்களையும் கருத்தையும் கவர்வதற்காகவும் விளம்பரத்துக்காகவும் வடிவமைக்கப்பட்டு 1997-ல் திறக்கப்பட்டது. இங்கே மண், இரும்பு மற்றும் துணிகளைக்கொண்டு வீட்டு அலங்காரப் பொருட்கள், சிறப்பு வகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. 1998-ல் இதன் கட்டமைப்புக்காக 'கட்டமைப்பு ஓஹியோ விருது’ கிடைத்தது. ஏழு தளங்கள் உள்ள இது, தற்போதும் பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
