ஸ்பெஷல்
Published:Updated:

பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது !

த.வி.வெங்கடேஸ்வரன்

##~##

அறிவியல் உலகத்தில் ஒரு பெரிய சாதனை நடந்து இருக்கிறது... 'ஹிக்ஸ் போஸான்’. இந்தப் பிரபஞ்சம் உருவான ரகசியத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்!

சுமார் 1,370 கோடி வருஷங்களுக்கு முன் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்தது... 'டும்’. அப்போது வெடித்துச் சிதறிய கோடானுகோடி நுண்துகள்கள் இணைந்தே அணுக்களும் மூலக்கூறுகளும் கோள்களும் இந்தப் பேரண்டமும் உருவாயின. பெருவெடிப்பு நடந்தபோது, எல்லாத் திசைகளிலும் நுண்துகள்கள் சிதறின. எப்படி அந்த நுண் துகள்கள் இணைந்து மூலக்கூறுகளாக, அணுக்களாக, கோள்களாக, நட்சத்திரங்களாக, பேரண்டமாக மாறின? அவற்றுக்கு நிறையைக் கொடுத்தது எது? இதுபற்றி உலக விஞ்ஞானிகள் இதுபற்றி நிறைய வருஷங்களாக ஆராய்ச்சி நடத்தினார்கள்.

பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது !

இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் குழுவினர் 1964-ல் இதுவரை கண்டறியப்படாத ஒரு நுண்துகள்தான் இதற்குக் காரணம் என்று சொன்னார்கள். அதைக் கண்டறிந்தால்தான் பிரபஞ்சம் உருவான கதையான 'பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு’ முழுமை பெறும் என்று விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினார்கள். ரொம்ப காலம் இந்த ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்தது. அப்புறம் அமெரிக்கா அலுத்துக்கொள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்  இந்த ஆராய்ச்சியைக் கையில் எடுத்தது. சுமார் 37 நாடுகள், 169 ஆய்வு நிறுவனங்கள், 3,000 ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிக்குப் பின் நிற்க சின்ன அளவில் ஒரு பெருவெடிப்பை, அதாவது ஆய்வுக்கூடத்தில் ஒரு செயற்கைப் பிரளயத்தை நிகழ்த்தி, கிட்டத்தட்ட அந்தத் துகளைக் கண்டறிந்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது !

சரி, இந்த ஆராய்ச்சி எப்படி நடந்தது தெரியுமா?

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே நிலத்தில் 300 அடி ஆழத்தில், 27 கி.மீ. நீளத்துக்கு ஒரு சுரங்கம் அமைத்தார்கள். ஒரு குழாயைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதைச் சுற்றிக் கவசம்போல அதி ஆற்றல்கொண்ட மின் காந்தங்கள். அவற்றுக்கு நடுவே எதிர் எதிர் திசையில் இருந்து புரோட்டான் கொத்துகளைவைத்து மோதும்படி செய்தார்கள். டும்... இதில்தான் 'ஹிக்ஸ் போஸான்’ பிடிபட்டுவிட்டார்.

சரி, இந்தத் துகளுக்கு ஏன் 'ஹிக்ஸ் போஸான்’ என்று பெயர் வைத்தார்கள்? அதைத் தெரிந்துகொண்டால், இந்தியர்களாகிய நாம் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

ஹிக்ஸ் என்பது விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸைக் குறிக்கும். போஸான்? அது விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீனையும் போஸையும் குறிக்கும். ஐன்ஸ்டீனை உங்களுக்குத் தெரிந்து இருக்கும். போஸ் யார் தெரியுமா? சத்யேந்திர நாத் போஸ்.

இன்றைய மேற்கு வங்கத்தில், 1894-ல் பிறந்தவர் போஸ். சின்ன வயதில் இருந்தே படிப்பில் படுகெட்டி. எந்த அளவுக்குத் தெரியுமா?  1915-ல் எம்.எஸ்.சி. தேர்வில் போஸ் பெற்ற மதிப்பெண்கள் கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றில் இன்றளவும் யாராலும் முறியடிக்கப்படாத சாதனை. இயற்பியலில் நிறைய ஆராய்ச்சிகள் செய்த போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆய்வுகள் மேற்கொண்டவர். ஐன்ஸ்டீனும் போஸும் அவர்கள் காலத்தில் வெளியிட்ட ஆய்வுகளும் இப்போது 'ஹிக்ஸ் போஸான்’ கண்டுபிடிக்கப்பட ஒரு முக்கியமான காரணம். அதனால்தான், அவர்கள் பெயரை வைத்தார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது !

பெரிய சாதனை என்றாலும், இந்த ஆராய்ச்சியில் இது ஆரம்பக் கட்டம்தான், இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டி இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிற்காலத்தில் அந்தச் சாதனைகளைச் செய்யப்போகும் சுட்டிகள் நீங்களாகவும் இருக்கலாம் என்பதுதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி !

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு 2012

தமிழக அரசு,  கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சென்ற கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று, தற்போது 9-ம் வகுப்பு பயிலும் திறமையானவர்களைக் கண்டறிந்து கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது. இதற்கான ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வினை செப்டம்பர் 23-ல் மாவட்டம்தோறும் அரசுத் தேர்வுத் துறை நடத்தும்.

இந்தத் தேர்வினை எழுத 8-ம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

கணக்கு, அறிவியல், வரலாறு, குடிமையியல், புவியியல், மனத்திறன் (mental ability)   என 100 மதிப்பெண்களுக்கு மல்டிபிள் சாய்ஸ் அப்ஜெக்டிவ் டைப் (multiple choice-objective type) வகையில் இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறும். வினாக்கள் எட்டாம் வகுப்பு வரை படித்த பாடங்களின் அடிப்படையிலேயே அமையும். இந்தத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறும் 50 மாணவர்கள், 50 மாணவியர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் 1,000 ரூபாயை உதவித்தொகையாக வழங்கும்.

நீங்கள் உரிய தகுதிகளுடன் கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுட்டிகளாக இருந்தால், உடனே உங்கள் தலைமை ஆசிரியரைச் சந்தித்து தேர்வுக்கு விண்ணப்பம் கொடுக்கலாம். அரசு உதவித்தொகையினை உங்களது திறமையால் வெல்லலாம்!