ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

தலைக்கு மேலே ஓர் எதிரி !

த.வி.வெங்கடேஸ்வரன்

##~##

பிப்ரவரி 15, 2013... உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணி. ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகர மக்கள் தங்கள் இயல்பு வேலைகளில் ஈடுபட்டுவந்தனர். குழந்தைகள் பள்ளிகளுக்கும் பெரியவர்கள் அலுவலகங்களுக்கும் சென்று சேர்ந்து இருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

விண்ணிலே வெள்ளைப் புகையுடன் நெருப்புப் பந்து ஒன்று புலப்பட்டது. சில நிமிடங்கள் சூரியனைவிட அதிகப் பிரகாசத்துடன் மாறிய அது தீச்சுவாலையுடன் பறந்தபோது சாலைகளில் கருமேகம் சூழ்ந்தது போல் இருந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 30 நொடிகள் நெருப்பை உமிழ்ந்தபடி அந்தத் தீப் பந்து பாய்ந்து வந்தது. தரைக்கு மேலே ஒன்பது கிலோ மீட்டருக்கு முன் வெடித்துச் சிதறியது. அதன் காரணமாக செல்யாபின்ஸ்க் பகுதியில் எரிகல் மழைப் பொழிவு ஏற்பட்டது. இந்த நெருப்புப் பந்தின் பாதையை 200 கி.மீ. வரை காண முடிந்தது.

அதே சமயம் உலகின் பல பகுதிகளில் வானவியளார்கள் '2012 டிஏ 14’ என்ற பெயர்கொண்ட குறுங்கோளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு இருந்தனர். பூமிக்கு வெகு அருகே, சுமார் 27,357 கிலோ மீட்டர் தொலைவில் அந்தக் குறுங்கோள் பாய்ந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. பூமிக்கு மேலே நிலைப் பாதையில் செல்லும் தகவல் தொடர்பு செயற்கைகோள் சுமார் 35,000 கி.மீ. தொலைவில்தான் இருக்கும். அதைவிடவும் அருகில் 27,357 கி.மீ. தொலைவில் 2012 டிஏ 14 குறுங்கோள் பாயும் என்பது சிறப்புச் செய்தி. அதன் காரணமாக பூமிக்குப் பாதிப்பு ஏற்படுமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அந்தக் குறுங்கோளை தமது கண்காணிப்பில் வைத்து இருந்தனர். 2012 டிஏ 14 குறுங்கோள் பூமிக்கு மிக நெருக்கமாகக் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்ட சமயத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்புதான் செல்யாபின்ஸ்க் பகுதியில் அந்த நெருப்புப் பந்து விழுந்தது.

தலைக்கு மேலே ஓர் எதிரி !

இந்த எரிகல் சம்பவத்தில் 1,000 பேர் காயம் அடைந்ததாகவும், ஒரு தொழிற்சாலை உட்பட 3,000 கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த எரி கற்கள் விழுந்ததன் விளைவாக 100 கிலோ மீட்டருக்கும் மேலான பரப்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் உயிருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அரசு தெரிவித்தது.

முதலில் 2012 டிஏ 14 குறுங்கோள்தான் இந்த எரிகல் மழையைத் தோற்றுவித்து உள்ளது எனப் பலரும் கருதினர். பிறகு நெருப்புப் பந்தின் பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள், 'இதற்கும் 2012 டிஏ 14 குறுங்கோளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை’ என்றார்கள்.

விண்வெளியில் சுற்றி வரும் குறுங்கோள்கள் சிலசமயம் மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையால் உடைந்து நொறுங்கும்போது, தெறிக்கும் சிறு பாறைகளே விண்கற்கள் எனப்படும். சிறு மணல் உருண்டையில் இருந்து கால்பந்து அளவு வரை பற்பல அளவுகளில் விண்வெளியில் துகள்கள் உள்ளன. இவை, பொதுவே விண்வெளியில் அங்கும் இங்கும் சுற்றி வரும். அவ்வப்போது பூமியின் மீது மோதும். அவ்வாறு மோதும்போது பூமியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் வெகு வேகமாகப் பாயும். அப்படிப் பாயும்போது ஏற்படும் உரசலால் வெப்பம் அதிகரித்து எரிந்துபோகும். இதுதான் எரிகல்.

தலைக்கு மேலே ஓர் எதிரி !

ஒரு நாளில் சுமார் 4,000 சிறு சிறு விண்கற்கள் பூமியில் விழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்தக் கற்களின் அளவு மிகக் குறைவு என்பதால், வளிமண்டலத்திலேயே எரிந்து பொடிப் பொடியாக மாறிவிடும். எனவே, பூமியின் தரைமீது எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு கார் அளவுடைய விண்கல் மாதத்துக்கு ஒன்று வீதம் மோதும். அதைவிடப் பெரிய விண்கல் மோதுவது அபூர்வம். இதற்கு முன்னர் இதுபோன்ற பேராற்றலுடன் 1908-ல் ரஷ்யாவின் சைபீரியக் காடுகளில் விழுந்தது. இப்போது விழுந்ததைவிடப் பெரிய விண்கல் மோதியதன் விளைவாகத்தான் டைனோசர்கள் அழிந்துவிட்டன என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இன்ஃப்ரா சவுண்ட் எனப்படும் மீயலியை ஆராயக்  கருவிகள் உள்ளன. ராணுவ ராக்கெட்கள் ஏவப்படுவதைக் கண்காணிக்கவும், எங்காவது அணுகுண்டு வெடிக்கப்பட்டால் அதனை வேவு பார்பதற்கும் பல வளர்ந்த நாடுகள் மீயலி கண்காணிப்பு மானிகளை நிறுவி உள்ளன. விண்ணில் இருந்து பாய்ந்து வந்த நெருப்புப் பந்து எந்தத் திசையில் இருந்து வந்தது, அதன் வேகம் என்ன, அதில் இருந்த ஆற்றல் என்ன எந்த உயரத்தில் இது வெடித்துச் சிதறியது போன்ற தகவல்களையும் இந்த மானிகள் திரட்டிய செய்திகள் மூலம் கணிக்க முடிந்தது.

ஒரு பேருந்து அளவில் சுமார் 50 டன் எடையுடன் நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் வந்த இந்த விண்கல் பூமியை மோதி உள்ளது. மோதியதில் ஏற்பட்ட வெப்பத்தில் அது நெருப்புப் பந்தாக மாறி உள்ளது. மோதலின் அதிர்வு காரணமாக, பூமியின் தரைக்கு சுமார் 1,012 கி.மீ. உயரத்தில் இந்த விண்கல் ஏறக்குறைய 20 அணுகுண்டுகளின் ஆற்றலுக்குச் சமமான ஆற்றலுடன் வெடித்துச் சிதறியது. சுமார் எட்டு அங்குலம் அளவிலான சிறியச் சிறிய எரிகற்களாக வெடித்துச் சிதறின. இவையே எரிகல் மழையாகப் பொழிந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மொத்தத்தில் உலகத்தின் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.