ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த த்ரீ ஸ்டார்ஸ் !

பாலஸ்ரீகளின் உற்சாக சந்திப்பு சரா

##~##

மார்ச் 8-மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், தேசிய அளவில் சுட்டிக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய 'பாலஸ்ரீ’ விருதை வென்று, தமிழகத்துக்குப் பெருமைசேர்த்து  இருக்கிறார்கள் மூன்று மாணவிகள்.

சென்னை, பத்மசேஷாத்ரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சிம்ரன் சிவக்குமார், சென்னை, சர்.சிவசாமி கலாலயாவில் ப்ளஸ் 1 படிக்கும் பி.எஸ். நந்தினி மற்றும் சேலம், க்ளூனி மெட்ரிக்  பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கும் எஸ்.தபுனா ஆகிய மூவருக்கும் 2011-12 ஆண்டுக்கான பாலஸ்ரீ விருதுகள் கிடைத்து உள்ளன.

மத்திய அரசால் ஆண்டுதோறும் ஒன்பது முதல் 16 வயதுவரையிலான திறமையான சுட்டிகளுக்கு பாலஸ்ரீ விருதுகள் வழங்கிக் கௌரவிக்கிறது. இந்த முறை இந்திய அளவில் 60 பேருக்கு இந்த விருதுகள் கிடைத்து உள்ளன. அதில், தமிழகத்துக்குக் கிடைத்த மூன்றுமே மாணவிகளால் வசப்படுத்தப்பட்டு உள்ளன.

நடனம், நடிப்பு போன்ற நிகழ் கலைகளை உள்ளடக்கிய 'க்ரியேட்டிவ் பெர்ஃபார்மன்ஸ்’, ஓவியம், கைவினைப் பொருட்கள் முதலான திறமைகளை வெளிப்படுத்தும் 'க்ரியேட்டிவ் ஆர்ட்ஸ்’  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான 'க்ரியேட்டிவ் சயின்டிஃபிக் இன்னோவேஷன்ஸ்’ மற்றும்  எழுத்தாற்றலைக் குறிக்கும் 'க்ரியேட்டிவ் ரைட்டிங்’ ஆகிய பிரிவுகளின் கீழ் பாலஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன.

டெல்லியில் ஜனாதிபதியின் கரங்களால் விருதுபெற உள்ள குஷியில் இருந்த சிம்ரன், நந்தினி மற்றும் தபுனா மூவரும் சுட்டி விகடனுக்காக ஒரு மாலை வேளையில் சந்தித்தனர்.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த த்ரீ ஸ்டார்ஸ் !

இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்காக டெல்லி சென்றிருந்தபோது, ஏற்கெனவே ஒருவருக்கு ஒருவர் பழகி இருந்ததால், இந்தச் சந்திப்பைத் தொடங்குவதற்கு அறிமுகம் தேவைப்படவில்லை.  பாலஸ்ரீகள் மூவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

'பாலஸ்ரீ விருதுக்கு செலக்ட் ஆகிட்டேன்னு தகவல் கிடைச்சதும் மகிழ்ச்சியில் அழுதுட்டேன். அம்மா, அப்பாவுக்கு சந்தோஷத்தில் பேச்சே வரலை. க்ரியேட்டிவ் ரைட்டிங் துறையில் ஜெயிச்சதால், என்னோட ஸ்கூலில் பிரபல எழுத்தாளரா உலா வந்துட்டு இருக்கேன்' என்று ஆச்சரியம் குறையாமல் அடுக்கினார் தபுனா.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த த்ரீ ஸ்டார்ஸ் !

''இருக்காதா பின்னே... தங்களோட துறையில் சாதனை செஞ்சுட்டு இருக்கிற  பெரியவங்களுக்குக்கூட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது எல்லாம் ஈஸியா கிடைக்கலாம். நமக்கு  அப்படி இல்லையே. டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட், சௌத் இந்தியா, நேஷனல்னு நாலு லெவலில்  திறமையை நிரூபிக்கணும். எனக்கு நியூஸ் வந்தப்ப பயங்கர சந்தோஷம்.

க்ரியேட்டிவ் ஆர்ட்டில் திறமையை வெளிப்படுத்தினதுக்காக, எனக்கு பாலஸ்ரீ கிடைச்சு இருக்கு. நான் டிராயிங்தான் வரைவேன். டெல்லியில் நடந்த கடைசி சுற்றில் களிமண் சிற்பம் செய்யச் சொன்னாங்க. எல்லாத்தையும் வித்தியாசமா யோசிச்சுச் செய்ததால் சக்ஸஸ் கிடைச்சது.'' என்ற நந்தினி, ''நீ எப்படி ரியாக்ட் பண்ணினே?' என்று சிம்ரனிடம் கேட்டார்.

'எனக்கு வானத்தில் மிதக்கிற மாதிரி இருந்துச்சு. பரத நாட்டியத்தில் கலக்கினதுக்காக, இந்த கௌரவம் கிடைச்சு இருக்கு. எல்லாப் புகழும் ஸ்ரீதேவி நிர்த்யாலயா பரதநாட்டியப் பள்ளிக்கும், என் குருநாதர் ஷீலா உன்னிகிருஷ்ணனுக்குமே' என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாணியில் சொன்னார் சிம்ரன்.

'பாலஸ்ரீ விருது பெற்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், நமக்கு இந்தியா முழுக்க எல்லா  மாநிலத்திலும் நண்பர்கள் கிடைச்சதுதான் ஹைலைட்'' என்று நந்தினி தொடங்க, டெல்லி அனுபவத்தை விளக்கினார் தபுனா.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த த்ரீ ஸ்டார்ஸ் !

'டெல்லியில ஃபைனல்ஸ் நடந்தபோது, நிறைய விளையாட்டுகளை நடத்தினாங்க. அதில் ஒண்ணு,  நண்பர்களைச் சேர்க்கிற விளையாட்டு. அதாவது, எல்லா மாநிலத்தில் இருந்தும் சுட்டிகள் வந்திருப்பாங்க. அவங்ககிட்டப் பழகி நட்பு ஆகணும். யார் அதிக நண்பர்களைச் சேர்க்கிறாங்களோ, அவங்கதான் வின்னர்ஸ். அப்படி எனக்குக் கிடைச்ச நிறைய நண்பர்களுடன் இன்னமும் தொடர்பில் இருக்கேன். ராஜஸ்தானில் உள்ள ஒரு நண்பருடன் தினமும் பேசுவேன்.' என்றார் தபுனா.

'ஆமாம் தபுனா. நம்ம நாட்டின் கலாசாரத்தை ஒரே ட்ரிப்ல தெரிஞ்சுக்க முடிஞ்சது. தமிழ்நாட்டைப் பத்தி அவங்ககிட்ட சொல்றதுக்கும் நல்ல வாய்ப்பா இருந்துச்சு' என்று  சிலாகித்தார் சிம்ரன்.

'இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகணும். பாலஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்கும் சுட்டிகளை செலெக்ட் பண்ணி, டெல்லியில் ஃபைனல் ரவுண்ட்ஸ் வரைக்கும் கூடவே இருந்து  என்கரேஜ் பண்ணின தமிழ்நாட்டின் ஜவகர் சிறுவர் மன்ற நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லியே  ஆகணும்.'

'கரெக்ட் நந்தினி. ஆனால், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றங்கள், குறைந்த கட்டணத்தில் பல கலைகள் சொல்லிக் கொடுக்கிற விஷயமே நிறையப் பேருக்குத் தெரியலை. அதுவும், அவங்களோட ஒத்துழைப்பில் சுட்டிகளுக்குக் கிடைக்கிற பாலஸ்ரீ    விருது பற்றிய விழிப்பு உணர்வும் இல்லைங்கிறது வருத்தம் தருது' என்று அக்கறையுடன் சொன்னார் தபுனா.

'இப்பதான் நாம சொல்லிட்டோமே. அடுத்த வருஷம், தமிழ்நாட்டில் இருந்து நிறையத் திறமையான சுட்டிகள் விண்ணப்பிச்சு, விருதுகளை அள்ளுவாங்க' என்று சிம்ரன் சொல்ல,  மீண்டும் கலகலப் பானது ஏரியா.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த த்ரீ ஸ்டார்ஸ் !

'இது ரொம்ப நெகிழ்ச்சியான சந்திப்பா இருக்கு. அடுத்து எப்ப சந்திக்கிறது?' என்று நந்தினி கேட்க, 'டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தாத்தாகிட்ட விருது வாங்கப் போவோமே... அப்போது தலைநகரையே கலக்கிருவோம்'' என்று தபுனா தடதடத்தார்.

ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு விடைபெற்றனர் சாதனை மாணவிகள்.

அட்டை, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்