ரா.மூகாம்பிகை கே.தீபிகா
##~## |
சித்திரத்தின் மூலம் மனிதனின் எந்த ஒரு சிந்தனையையும் வெளிப்படுத்தலாம். அதை அழகாகச் செய்கிறார்கள் சென்னை, SBOA பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் சாய் சூர்யா மற்றும் ஸ்ரீ வர்ஷா என்ற இரட்டையர்கள்.
இவர்களது ஓவியங்கள், சென்னை ஸ்ரீ பார்வதி ஆர்ட் கேலரி¢யில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஓவிய ரசிகர்கள் முதல் பெரிய ஓவியர்கள் வரை பலரும் பார்த்துப் பாராட்டினார்கள். அந்த மகிழ்ச்சியில் இருந்தவர்களிடம் பேசினேன்.
அது எப்படி இரண்டு பேருக்குமே ஓவியத்துடன் பிணைப்பு ஏற்பட்டது?
''நான் யு.கே.ஜி.,யில் இருந்தே வரைவேன். ஒரு நியூஸ் பேப்பரோ, கதைப் புத்தகமோ கையில் கிடைத்தால் என் முதல் வேலை, அதில் இருக்கும் படங்களை வரைவது. அதைப் பார்த்து வர்ஷாவும் போட்டியில் இறங்கினாள். அப்புறம் ஒரு கோடை விடுமுறையில் டிராயிங் கிளாஸ் போனோம். எங்க மாஸ்டர் ஜெயபிரகாஷ் சார், 'உங்க ரெண்டு பேருக்குமே ஓவியம் நல்லா வருது. ஹாபியா மட்டும் இல்லாமல் இன்னும் சின்சியராப் பண்ணுங்க’ என்று ஊக்கம் கொடுத்தார்'' என்றார் சாய் சூர்¢யா.
''இருடா, மொத்தத்தையும் நீயே சொல்லிடாதே'' என்று குறுக்கிட்ட வர்ஷா தொடர்ந்தாள்.

''இந்தக் கண்காட்சிக்காக போன வருஷத்தில் இருந்து ஓவியங்களைத் தயார் செய்தோம். நிறைய வரைஞ்சு குவிச்சோம். இடப் பற்றாக்குறையால் செலெக்ட் பண்ணின சிலதை மட்டுமே இங்கே வைக்க முடிஞ்சது.'' என்றவர் குரலில் சற்றே வருத்தம்.
''அக்கா, ஓவியங்களில் பல வகைகள் இருக்கு'' எனச் சொல்லி, ஒரு குட்டி வகுப்பு எடுத்தார் சாய் சூர்யா.

அந்தக் கண்காட்சியில் அத்தனை வகையிலும் ஓவியங்கள் அணிவகுத்தன.
''இங்கே இருக்கும் 57 ஓவியங்களில், 29 என்னுடையது. அதில் 22 ஆயில் பெயின்டிங்ஸ். எனக்கு ஆயில் பெயின்டிங் வரையறதுனா அவ்வளவு பிடிக்கும்.'' என்றார் ஸ்ரீவர்ஷா.
சாய் சூர்யாவின் ப்ளஸ் பென்சில் ஷேடிங்.
''இந்த மாதிரி¢யான ஓவியங்களில் நாம் கொடுக்கும் ஷேட் கொஞ்சம் மாறினாலும் அவ்ளோதான். வேண்டிய டிசைன் கிடைக்காது. அதனால் ரொம்பவே கேர்ஃபுல்லா வரையணும்'' என்றார்.
குட்டி ஓவியர்களின் அம்மா ஹேமா, ''இவங்களுக்கு பொறுமை அதிகம். அதுதான் இவங்களை ஓவியத்தில் இந்த அளவுக்குக் கொண்டுவந்து இருக்கு.'' என்கிறார் பரவசத்துடன்.
ஓவியம் மட்டும் இன்றி வேறு பல கலைகளிலும் அசத்துகிறார்கள் இந்த இரட்டையர்கள். சூர்யா கீ போர்டு பிளேயர். வர்ஷாவுக்கு பரதம் தெரியும். இன்னும் மூன்று மாதத்தில் அரங்கேற்றமாம்.
அசத்துங்க!
சபாஷ்...முதல் தோழிகள் !
சுட்டித் தோழிகளே... மார்ச் 8 உலக மகளிர் தினம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் முதன் முதலில் என்ற வார்த்தைக்குப் பெருமை சேர்த்த சில பெண்களைத் தெரிஞ்சுக்குவோம். நாமும் இந்தப் பட்டியலில் இடம்பெற முயற்சிப்போம்.
1. இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ் பெண்மணி - சிரல்லாகி ரேவல்.
2. பாராசூட்டில் இருந்து குதித்த முதல் இந்தியப் பெண்மணி - கேப்டன் சந்திரா.
3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
- இந்திரா காந்தி.
4. இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்
- கே.எஸ்.நாகரத்தினம்மாள்.
5. பிரபஞ்ச அழகியாகத் தேர்வான முதல் இந்தியப் பெண்மணி - சுஷ்மிதா சென்.

6. முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியப் பெண்மணி - கர்ணம் மல்லேஸ்வரி.
7. உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு
8. இந்தியாவில் முதல் யானைப் பாகனாகப் பணியாற்றிய பெண்மணி - காளியம்மாள்.
9. முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியப் பெண்மணி - பச்சேந்திரி பால்.
10. அதிக நாவல்கள் எழுதிய பெண் எழுத்தாளர் - வை.மு.கோதை நாயகி (115 நூல்கள்).
11. நோபல், மகசாசே, பாரத ரத்னா பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா.
12. இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி - முத்துலட்சுமி அம்மையார்.
