ஹாசிப் கான்
##~## |
''ஹாய் ஜீபா... ஸ்லாத் (sloth) மிகவும் சோம்பேறியான விலங்காமே உண்மையா?''
-பெ.தர்ஷனா, பழநி.
''ஸ்லாத், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அழகான விலங்குகளில் ஒன்று. தமிழில் இதற்கு 'அசையாக் கரடி’ என்று பெயர். தென் அமெரிக்காவில் வாழும் இது, பகல் முழுக்கத் தன் இருப்பிடத்தில் அசையாமல் இருக்கும். இரவில் இரையைத் தேடிச் செல்லும். அப்படிச் செல்லும்போதும் மிக மிக மெதுவாக நகரும். இவற்றின் உணவு பெரும்பாலும் தாவரங்களே. பூச்சி, பல்லி போன்றவற்றையும் சாப்பிடும். இந்த விலங்கை ஆராய்ச்சி செய்த உயிரியல் வல்லுனர்கள், 'இவற்றின் வயிறுகூட மிகவும் மெதுவாகவே இயங்குகிறது, ஸ்லாத் ஒரு நாளில் சராசரியாக 10 மணி நேரம் உறங்குகிறது’ என்கிறார்கள். மனிதர்களாகிய நாமும் இரவில் 8 மணி நேரம் உறங்குகிறோமே. எனவே, ஸ்லாத்தை சோம்பேறி என்று சொல்லலாமா... வேண்டாமா? என்பதை தர்ஷனாதான் முடிவு செய்யவேண்டும்.
''ஹலோ ஜீபா... ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வான்?''
-பி.ஆர்.நவின்குமார், சாய்பாபா காலனி.

''எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதைவிட எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்வான் என்று கேட்கலாம். காரணம், ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் பல வகையான வைட்டமின்கள் சரிவிகிதத்தில் தேவை. கீரையில் ஒரு சத்து, காய்களில் சில சத்துகள், பருப்பு வகையில் ஒரு சத்து என ஒவ்வொன்றில் இருந்தும் நம் உடம்புக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கின்றன. அப்படித்தான் பழங்களில் குறிப்பிட்ட சில சத்துகள் மட்டுமே கிடைக்கும். மேலும், ஒரு காய், பழம் ஆகும்போதே, அதில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். எனவே, ஒரு மனிதன் பழத்தை மட்டுமே சாப்பிட்டால், விரைவில் அவன் உடம்பிலும் சர்க்கரை கூடிவிடும். சமைக்கத் தெரியாத ஆதி

மனிதன்கூட பழம், கிழங்கு, காய் என்று கலந்துதான் சாப்பிட்டான். எதுவுமே அளவுடன்தான் இருக்க வேண்டும் நவின்''
''மாலை நேரக் கடல்காற்று, மலைப்பிரதேசத்துக் குளிர் காற்று இவற்றில் சுகமானது எது ஜீபா?''
-எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.
''கவிதையான வரிகளில் கேள்வியைக் கேட்டு இருக்கே சௌமியா. நானும் பதிலை கவித்துவமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். மாலை நேரக் கடல்காற்று ஐஸ்கிரீம் மாதிரி. 'சிலுசிலு’னு சுவையையும் சந்தோஷத்தையும் மட்டுமே கொடுக்கும். மலைப்பிரதேசத்து குளிர் காற்று கொஞ்சம் நடுங்கவைத்தாலும் அம்மா மாதிரி அக்கறையானது. காரணம், அம்மா நமக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்கிற மாதிரி, மலைப் பகுதிக் காற்றில் மூலிகையின் பலன்களும் கலந்துவந்து நம் சுவாசக் குழாயை நிரப்பும். எப்பூடி!
''டியர் ஜீபா... உலகின் மிகப் பெரிய கோயில் எது?''
- சி.பாலமுருகன், கோயம்புத்தூர்.
''கம்போடியாவில் அங்கோர் என்ற நகரில் இருக்கும் அங்கோர் வாட் (ANGOR WAT) என்ற விஷ்ணு கோயில்தான் உலக அளவில் மிகப் பெரிய கோயில். இங்கே புத்தருக்கும் சிலை உண்டு. அங்கோரின் பழைய பெயர் யசோதாபுரம். 'வாட்’ என்றால் கம்போடியர்களின் மொழியில் கோயில் என்று பொருள். இந்தக் கோயில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னரால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 8,20,000 சதுர மீட்டர். பழைய ஏழு உலக அதிசயங்களில் இந்தக் கோயிலும் உண்டு. இதற்கு அடுத்த பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இதன் பரப்பளவு 6,31,000 சதுர மீட்டர்.''

''டியர் ஜீபா... வீட்டில் பாலை எங்கே வெச்சாலும் பூனை எப்படிச் சரியாகக் கண்டுபிடிச்சு வருது?''
- கே.லோகேஷ், செஞ்சி.
''பூனைக்கு நம்மைவிட நுகரும் சக்தி 14 மடங்கு அதிகம். அதனால்தான், பாலை எங்கே ஒளிச்சு வெச்சாலும் கண்டுபிடிச்சுக் குடிக்குது. அதே நேரம், பூனையின் நாக்கில் இனிப்பு சுவைக்கான மொட்டுகள் கிடையாது. அந்த விதத்தில் சந்தோஷப்பட்டுக்க லோகேஷ். இல்லைனா, போகிறபோக்கில் 'ஹலோ, பாலில் சர்க்கரை போடலியா?’னு பூனைகள் எரிச்சலுடன் நம்மைப் பிராண்டிவிட்டுப் போகும்.''