ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

மின்மினி!

40 மின்மினிப் பூச்சிகள் சேர்ந்தால், ஒரு மெழுகுவத்தி கொடுக்கும் பிரகாசத்தைக் கொடுக்க முடியும்.

தூக்கணாங்குருவிகள், மின்மினிப் பூச்சிகளை வெளிச்சத்துக்காகத் தன் கூட்டில் வைத்துக்கொள்ளும்.

மெக்ஸிகோவின் பழங்குடியினப் பெண்கள், மின்மினிப் பூச்சிகளைத் தங்கள் கொண்டையில் வைத்துக்கொள்வார்கள்.

சுட்டி நியூஸ்

இலங்கைக் கொடி!

இலங்கையின் கொடியில் வாள் ஏந்திய சிங்கம் இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். இதை முதன்முதலில் பயன்படுத்தியவர், இலங்கையை ஆண்ட ஒரு தமிழ் மன்னர். இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அங்கே கடைசியாக ஆட்சி புரிந்த நான்கு மன்னர்களில் ஒருவரும், கண்டிப் பகுதியை ஆண்டவருமான, ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா என்பவரை வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர். அவர் இறந்ததும் அங்கேயே புதைத்தனர். அவரின் சமாதி இன்றும் கோட்டையில் உள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் உபயோகிக்கப்பட்ட கொடியில், சிங்கம் வாள் ஏந்தி நிற்பது போன்ற அமைப்பு இருந்தது. அதுதான் தற்போதைய  இலங்கைக் கொடியிலும் உள்ளது.

சுட்டி நியூஸ்

கீ செயின் செய்யலாமா?

 ஃப்ரெண்ட்ஸ்... கீ செயின் நாம் நினைக்கும் விரும்பும் வடிவத்தில் அடிக்கடி மாற்றும்படி இருந்தால் சூப்பராக இருக்கும் அல்லவா? அதை நாமே உருவாக்கலாமா?

பிளாஸ்டிக் க்ளே அல்லது எம்ஸீல் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் விரும்பும் வடிவத்தில் மாற்றுங்கள். அதில் தேவையான இடத்தில் துளையிடுங்கள். விரும்பிய வண்ணம் அடியுங்கள். அழகான கீ செயின் ரெடி. இதுபோல் நிறையச் செய்து, நண்பர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கலாம்.

சுட்டி நியூஸ்

அதிரவைக்கும் அலாரம் வாட்ச்!

பரீட்சை நேரத்தில் ஒரு நல்ல செய்தி... உத்தரப்பிரதேசத்தின் ஷர்தா பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிக்கும் 19 வயது மாணவி ஒருவர் புதிய கைக் கடிகாரம் ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளார். முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினாலான இந்தக் கடிகாரத்தில், அலாரம் செட் செய்து கையில் கட்டிக்கொண்டு தூங்கப்போகலாம். குறித்த நேரத்தில் அலாரம் அடித்து, உடலில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். இதனால், விழித்துக்கொள்ள முடியும்.

இதில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் உடலுக்கு எந்த விதமான தீங்கையும் விளைவிக்காதாம். இந்த அலாரத்திற்கு 'சிங் அண்ட் ஷாக்’ என்று பெயர்.

சுட்டி நியூஸ்

அலாரம் வைப்பவர்கள், தங்களுக்குத் தேவையான அளவு அதிர்வலைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ளும் வசதியும், விரும்பிய பாடலை அலாரத்தின் ஒலியாக வைத்துக்கொள்ளவும் முடியுமாம்.

ஆடும் கோபுரங்கள்!

அகமதாபாத் நகரில் உள்ளது ஆடும் கோபுரங்கள். 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 'சித்திபஷீர்’ மசூதியின் இரண்டு கோபுரங்களையும் ஒரு சமதளமான மாடி இணைக்கிறது. ஒவ்வோர் கோபுரமும் 20 மீட்டர் உயரமும், மூன்று அடுக்குகளும் கொண்டவை. இந்த அடுக்குகளில் கல்லால் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள் அமைந்த பால்கனிகள் உண்டு. இந்த இரண்டு கோபுரங்களில், ஒரு கோபுரத்தின் உச்சிப் பகுதியைக் குலுக்கினால் அந்த அதிர்வு, அந்தக் கோபுரத்தின் வெற்று வழியே சென்று, மற்றொரு கோபுரத்தை அடைந்து அதையும் ஆடவைக்கிறது. இதைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், ஒரு கோபுரத்தை ஆட்டி, மற்றொன்று ஆடுவதை கண்டு வியப்படைகின்றனர். இந்த ஆட்டம் 400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

சுட்டி நியூஸ்

டச் ஸ்கிரீன் ஹோட்டல்!

இப்போது பலருக்கும் டச் ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரை கைப்பேசியைத்தான் மிகவும் பிடிக்கிறது. டைனிங் டேபிள் போன்றவற்றிலும் டச் ஸ்கிரீன் கலக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆர்வத்தையே வியாபார தந்திரமாக சில ஹோட்டல்கள் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன.

மலேசியாவில் ஒரு ஹோட்டலில் டைனிங் டேபிளில் மெனு கார்டு உள்பட எல்லாமே டச் ஸ்க்ரீன்தான். அந்த மெனு கார்டில் விரும்பிய உணவைத் தொட்டவுடன், ஆர்டர் பதிவாகும். சற்று நேரத்தில் உணவு டைனிங் டேபிளுக்கு வந்துவிடும்.

அந்த ஹோட்டலில் ஒரு டீ நம்முடைய இந்திய மதிப்பில் 500 ரூபாய்.

சுட்டி நியூஸ்