கண்ணா
##~## |
''ஆஹா... நாம் வெளி உலகத்தைப் பார்க்கப்போகிறோம்!'' என்று குஷியோடு கத்திக்கொண்டு, என்னை மூன்று மாதங்களாக அடைத்துவைத்து இருந்த டப்பாவில் இருந்து வெளியே வந்தேன்.
என்னுடன் இருந்த பென்சில்கள் 'ஆல் தி பெஸ்ட்’ கூறி அனுப்பிவைக்க, ஒரு தாய் தன் விரல்களால் என்னை எடுத்தாள். தன் பிள்ளையிடம், ''இந்தா வினோத்! அம்மா உனக்காகப் புது பென்சில் வாங்கி இருக்கேன்!'' என்றபடி கொடுத்தாள்.
வினோத் என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவான் என்று பார்த்தால், அவன் முகத்தில் சலிப்பு.
தாயிடம் இருந்து என்னை வாங்கிக்கொண்டு, தன் ஆட்டோவுக்கு ஓடினான் வினோத். அந்த ஆட்டோ வேகமாகச் சென்று ஓர் இடத்தில் நின்றது. அது, பள்ளிக்கூடம். அவன் இறங்கிப் பள்ளிக்குள் சென்றான்.
உடனே எங்கிருந்தோ ஒரு குரல், ''டேய் வினோத்!'' என்றபடி ஒரு பையன் அவனிடம் வந்தான். ''ஹாய் சுந்தர்'' என்றபடி வினோத், சுந்தர் இருவரும் கைகளைத் தட்டிக்கொண்டனர். இதற்குப் பேருதான் 'ஹை-ஃபை’யாம்.
இருவரும் மாடிப்படி ஏறினார்கள். ''இங்கே பாருடா... அவனவன் லேப்டாப், ஐ-ஃபோன், டேப்லட்னு வாங்கிட்டு இருக்கான். என் அம்மா பென்சிலைக் கொடுக்குறாங்க!'' என்றான் வினோத்.
''ஆமாடா! என் அப்பாவும் இப்படித்தான் பண்றார். நம்ம அப்பா, அம்மா நம்பளைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க!'' என்றான் சுந்தர்.
எனக்கு வருத்தமாக இருந்தது. 'என்னைப் பயன்படுத்தி இவன் நன்றாக எழுதினால் சரி’ என்று எண்ணிக்கொண்டேன்.

வகுப்பு அறைக்குள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தான் வினோத். சற்று நேரத்தில் அவன் கை, பாக்கெட்டுக்குள் வந்து என்னை வெளியே எடுத்தது.
'ஆஹா! பையன் எழுதிப் பார்க்கப்போகிறான்’ என்ற குஷியுடன் இருந்த என்னை எடுத்துக்கொண்டு சுந்தரின் இடத்துக்குச் சென்றான்.
மேஜையின் மேல் என்னை வினோத் வைக்க, சுந்தர் என்னைப் போன்ற இன்னொரு பென்சில் நண்பனை எடுத்து வைத்தான். திடீரென சுந்தர் என் நண்பனைச் சுண்டிவிட, அவன் என் மேல் மோதினான். மிகவும் வலித்தது. அலறினேன்... ''ஸாரி நண்பா... என் மீது தவறு இல்லை. அவன் சுண்டிவிடுகிறான்'' என்றான் அந்தப் பென்சில் நண்பன்.
மறுபடியும் வினோத் என்னைச் சுண்டிவிட, நான் என் நண்பனை மோதித் தள்ளினேன். அவன் தடுமாறி எப்படியோ நின்றுவிட்டான். இதற்குப் பேரு பென்சில்-பைஃட் விளையாட்டாம். என்ன கொடுமைடா!
''முன்பு எல்லாம் சின்ன வகுப்புப் பசங்க பரீட்சையைக்கூட ஸ்லேட்ல எழுதுவாங்க. கொஞ்சம் கொஞ்சமாக மேல் வகுப்புக்கு வந்து நம்மைப் பாத்ததும், பெரிய புரமோஷன் கிடைச்ச மாதிரி சந்தோஷப்படுவாங்க. இப்போ ரெண்டு வயதில் இருந்தே மொபைல், லேப்டாப், டேப்லட்னு எல்லாத்தையும் பார்த்துடுறதால் நம்மை இவ்வளவு அலட்சியமா நடத்துறாங்க'' என்றான் என் பென்சில் நண்பன்.
''நீ சொல்றது சரிதான். இதோ இங்கே இருக்கிறவங்க எழுதுவதைவிட காது குடைவதற்கு, விடைத்தாளில் நூலைக் கோர்க்க ஓட்டைபோடுவதற்கு, விளையாடுவதற்குத்தான் நம்மை உபயோகிக்கிறாங்க. பென்சில்னா அவ்வளவு இளப்பமா?'' என்றேன் கோபத்துடன்.

அன்று மாலை, வினோத் வீட்டுக்கு வந்துவிட்டான். நான் மேஜை மீது இருந்தேன். அவனது அறையில் ஒரு மூலையை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தான். ஓர் ஓட்டையின் வழியாக பூச்சிகள் சில, அவன் வீட்டுக்குள் வந்தன.
என்னமோ யோசித்தான். என்னைப் பார்த்தான். 'என்ன செய்யப்போகிறான்?’ என்று யோசித்துகொண்டு இருக்கும்போதே, என்னை எடுத்தான்.
ராமர் வில் வளைத்ததுபோல் முகத்தை வைத்துக்கொண்டான். எனக்குப் புரிந்துவிட்டது. நான் 'வேண்டாம்... வேண்டாம்’ என்று அலறிக்கொண்டு இருக்கும்போதே, என்னை இரண்டாக உடைத்தான்.
ஒரு பாதியைக் குப்பையில் எறிந்தான். சற்றே பெரிய இன்னொரு பாதியை அந்த ஓட்டையில் வைத்து அடைத்துவிட்டுச் சென்றான்.

அன்று முதல் இன்று வரை, அவன் மீண்டும் வந்து என்னை எடுத்து எழுதுவான் என்ற எதிர்பார்ப்புடன் அடைபட்டவாறே காத்திருக் கிறேன்.