சைபர்சிம்மன்
##~## |
இணையத்தில் உலாவ ப்ரௌஸர் (Browser)அவசியம். கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகிய பிரபலமான ப்ரௌஸர்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.
ஆனால், நீங்கள் ஏன் பெரியவர்களுக்கான ப்ரௌஸரை பயன்படுத்த வேண்டும்? உங்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ப்ரௌஸர் இருக்கிறது. அதன் பெயர், கிட்ஸ்யூயி.
எப்போதுமே சிறுவர்களின் உலகம் தனிதான். அதேபோல், இணையத்திலும் சிறுவர்களுக்கான தனி உலகம் இருக்கவே செய்கிறது. அந்தச் சிறுவர் இணைய உலகில் உலாவுதற்கான வழியாக கிட்ஸ்யூயி உள்ளது. அதாவது, சிறுவர்களுக்கான இணையதளங்கள், சிறுவர்களுக்கான வீடியோக்கள், சிறுவர்களுக்கான கேம்கள் என எல்லாமே சுட்டிகளுக்கான விஷயங்களாகப் பார்க்கலாம்... பயன்படுத்தலாம்.
அடிப்படையில் இந்த ப்ரௌஸர் சுட்டிகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. இணையம் என்பது தகவல் கடல். அதில் எண்ணற்ற ஆபத்தான விஷயங்களும் இருக்கின்றன. இத்தகைய ஆபத்துகளில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று அப்பா, அம்மாவுக்குக் கவலையாக இருக்கும் இல்லையா?
அந்தக் கவலையைப் போக்குவதற்காக ஆபத்தான இணையதளங்களை பிளாக் செய்யும் சாஃப்ட்வேர்கள் நிறுவப்பட்டு உள்ளன. பொதுவாக, இவை ஃபில்டர் என்று குறிப்பிடப்படுகின்றன. சிறுவர்களுக்காக இணையத்தை வடிகட்டித் தருகின்றன இந்த சாஃப்ட்வேர்கள்.

இணைய வடிகட்டிகளில் பலவகை இருக்கின்றன. இவற்றைப் பலவிதங்களில் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு விதத்தில் இவை பிள்ளைகளைக் கண்காணிப்பது போல தான். பெற்றோர்களின் நோக்கம் நல்லதுதான் என்றாலும், இப்படிக் காண்காணிக்கப் படுவதை பிள்ளைகள் விரும்புவது இல்லை.
'விளையாடும்போதுதான் அங்கே போகாதே... இங்கே போகாதே என்றால், இணையத்திலுமா கட்டுப்பாடு?’ என்று நினைக்கலாம். ஆனால், சிறுவர்களுக்காக என்றே ஒரு ப்ரௌஸர் இருந்தால், இந்தப் பிரச்னை இருக்காது அல்லவா? அந்த ப்ரௌஸரில் சிறுவர்களுக்கு உகந்த விஷயங்களை மட்டுமே பார்க்க முடியும் என்பதால், பெற்றோர் கவலை இல்லாமல் இருக்கலாம்.
கிட்ஸ்யூயி இப்படிப்பட்ட ப்ரௌஸராக உருவாக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தும்போது சிறுவர்களுக்கு என்று தேர்வுசெய்யப்பட்ட வலைத்தளங்கள் மட்டுமே தோன்றும். இதில் தேடும்போது சிறுவர்களுக்கான தகவல்களே தோன்றும். சிறுவர்களுக்கு ஏற்ற தேடல் குறிப்புகள், வீடியோக்கள் மட்டுமே வழங்கப்படுவதோடு, புகைப்படக் குறிப்புகளையும் காணலாம்.

இதில் பார்க்கும் வலைதளங்களை அப்படியே புக்மார்க் செய்து, பின்னர் தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம். அதோடு, ப்ரௌஸரின் முகப்புப் பக்கமும் புகைப்படங்கள், அனிமேஷன்கள் என எப்போதுமே வண்ணமயமாக அட்டகாசமாக இருக்கும். கல்வி சார்ந்த வீடியோக்களையும் பார்க்கலாம். பாதுகாப்பான கேம்களையும் ஆடலாம். எல்லாமே பெற்றோரும் ஆசிரியர்களும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தன ஆகும்.
இந்த ப்ரௌஸர் இலவசமாக கிடைக்கிறது. கிட்ஸ்டயூயி தளத்தில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
இது சுட்டிகளுக்குப் பாதுகாப்பானது மட்டும் அல்ல; போரடிக்காததும்கூட. சுட்டிகளின் உலகமே தனி எனும்போது, அவர்களுக்கான ப்ரௌஸரும் தனியாக இருப்பது சரிதானே.
வலைத்தள முகவரி:
http://www.kidzui.com