பென் டிரைவ் !

பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் திருச்சி, வாசவி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டனர். முதல் நாளில் 400 மாணவர்கள் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் 39 அங்குல அகலமும், 400 மீட்டர் நீளமும்கொண்ட வெள்ளைத் துணியில் கைவிரல் அச்சுகளைப் பதித்து, மிக நீண்ட ஓவியம் வரைந்தார்கள். மேலும், 10 நிமிடங்களில் 4,000 காகிதக் கப்பல்கள், 4,783 காகித அம்புகள் செய்தனர். இரண்டாவது நாள், 43,200 காகித டம்ளர்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், ஒரு லட்சம் காட்டன் பட்ஸ்களைக்கொண்டு பசுமை மாறாக் காடுகளை உருவாக்குதல், 60 ஆயிரம் ஐஸ் குச்சிகளை அடுக்கி, சோலார் மின் உற்பத்தி குறித்த விழிப்பு உணர்வு ஓவியம் என அசத்தினார்கள்.

காஷ்மீர் மாநிலம், ரெய்சி மாவட்டத்தில் சீனாப் ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் ஒன்று கட்டப்படுகிறது. கொங்கண் ரயில்வே சார்பில், ஜம்முவில் இருக்கும் பாரமுல்லா மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் அமையும் இந்தப் பாலம், 1,315 மீட்டர் நீளமும் 359 மீட்டர் உயரமும்கொண்டது. அதாவது, ஈஃபிள் டவரைவிட 35 மீட்டர் உயரம். 'ஆர்க்’ வடிவில் அமையும் இந்தப் பாலம், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்று சிறப்புப் பெறும். நிலநடுக்கம், குண்டு வெடிப்பு போன்றவற்றினால் சேதம் அடையாதாம். 2016-ம் ஆண்டு இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வரும்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து வயதுத் தமிழர்களுக்கும் டல்லாஸ்(யு.எஸ்) சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் திருக்குறள் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டு, பிப்ரவரி 9-ம் தேதி போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். திருக்குறள் போட்டியில் 13 வயது சீதா 320 குறள்களை ஒப்பித்து, முதல் பரிசைத் தட்டிச்சென்றார். மொத்தம் 5,463 தடவை தொடர்ந்து ஐந்து மணி நேரம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குரலில் திருக்குறள்கள் ஒலித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு 5,000 டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

நம் நாட்டில் பாலத்தின் மேல் ரயில்கள், மோட்டார் வாகனங்கள் செல்லும். ஜெர்மனியிலோ விமானமே பாலத்தின் மேல் செல்கிறது. ஜெர்மனியில் லெயிப்ஜிக் (Leipzig) மற்றும் ஹாலே என்னும் இரு நகரங்களுக்கான விமான சேவை தொடங்கியது. அங்கே விமானப் பாதை அமைக்கும்போது சாலை குறுக்கிட்டது. அத்னால், போக்குவரத்து எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் சாலை மேல் ஓடுதளப் பாலம் அமைக்கப்பட்டது. விமானங்கள் இந்தப் பாலத்தின் மேலே செல்லும்போது, கீழே வாகனங்களில் செல்பவர்கள் தலைக்குமேல் மிகவும் நெருக்கத்தில் விமானத்தைப் பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது.

உலக அளவில் சாக்லேட்டுக்குப் பெயர்பெற்ற நாடுகளில் ஒன்று பெல்ஜியம். தங்களுடைய புகழைப் பறைசாற்றும் வகையில் அந்த நாட்டுத் தபால்துறை, சாக்லேட் சுவை உள்ள தபால்தலையை வெளியிடப்போகிறது. இதில் என்ன ஸ்பெஷல்?
தபால்தலையின் பின்புறம் சாக்லேட் சுவைகொண்ட பசை தடவப்பட்டு இருக்கும். அந்த ஸ்டாம்பை நாம் நாக்கால் ஈரப்படுத்தும்போது, சாக்லேட்டின் சுவையையும் அதனோடு பக்காவான வாசனையையும் அனுபவிக்கலாம். ஐந்து தபால்தலைகள்கொண்ட ஓர் அட்டையாக மார்ச் மாதம் வெளிவர உள்ளது. இதன் விலை 430 ரூபாய்.

சுட்டிகளுக்குக் கதை சொல்லும் பாட்டிகள் அரிதாகிவிட்ட இந்த நாளில், அபிநயத்தோடு கதை சொல்லி அனைவரையும் அசத்துகிறார் ஸ்ரீநிதி.
மயிலாடுதுறை டி.பி.டி.ஆர்.தேசிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், ஸ்ரீநிதி. சத்ய சாய் நிறுவனங்கள் நடத்திய மாநில அளவிலான கதை சொல்லும் போட்டியில், இறுதியாகத் தேர்வாகி இருந்த 14 சுட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றார் ஸ்ரீநிதி.
மகாபாரதத்தில் கிருஷ்ணரும், அர்ச்சுனரும் உரையாடும் காட்சியை அபிநயத்தோடு, அழகாகச் சொல்லிக் கேட்பவர்களின் மனதைக் கவர்ந்தாள்.

ஆப்ரிக்காவில் உள்ள லைபீரியாவில் வசிக்கும் மக்களுக்கு, உலகில் நடக்கும் விஷயங்கள் எதுவுமே தெரிவது இல்லை. பெரும்பாலான வீடுகளில் டி.வி., ரேடியோ கிடையாது. பேப்பர் வாங்கக்கூடக் காசு இல்லை. நாட்டில் நடக்கும் விஷயங்கள், உலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். இதனை அறிந்த அந்த நாட்டு சமூக ஆர்வலர், ஆல்ஃப்ரெட் ஜே சர்லீஃப் (Alfred J.sirleaf)மக்களுக்குச் செய்திகளைத் தெரியப்படுத்த ஒரு கரும்பலகையை வைத்தார். அதில் சாக்பீசால் தினமும் செய்திகளை எழுதிவைக்கிறார். இதற்காக அவர் செய்தித்தாள்கள், இன்டர் நெட், டி.வி. மற்றும் தெரிந்த நிருபர்களிடமும் செய்திகளைச் சேகரிக்கிறார். துப்மன் பொலிவார்ட் (Tubman Boulevard) என்ற இடத்தில் 2000-ல் நிறுவி, இதற்கு 'டெய்லி டாக்’ என்று பெயரும் சூட்டினார். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்தச் செய்திகளைப் படித்துப் பயன்பெறுகிறார்கள்.

'உங்கள் லட்சியங்களை அடையக் கனவு காணுங்கள்’ என்றார் அப்துல் கலாம். விண்வெளி வீரர்களைப் பார்த்ததும் நாமும் அவர்களைப் போல் உடை அணிந்து, விண்வெளி வீரர் ஆகவேண்டும் என்று கனவு காண்போம். இதோ, உங்களுக்காகவே 'ஜாம்பி பெட் ஷீட்’ என்ற நிறுவனம், அஸ்ட்ரோனட் பெட் ஷீட் தயாரித்து உள்ளது. இது முழுக்க முழுக்க பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டது. இந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கும் சுட்டியைச் சற்று உயரத்தில் இருந்து பார்த்தால், அசல் விண்வெளி வீரரைப்போல் தெரிவார். இந்த அஸ்ட்ரோனட் பெட் ஷீட் விலை 80 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 4,250 ரூபாய்.