கிராமத்து மாணவர்களின் கல்வி நிலை !
##~## |
இந்திய அளவில், எளிய ஆங்கில வார்த்தைகளைப் படிப்பதில், தமிழக ஊரகப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சற்றே முன்னேற்றத்துடன் காணப்படுகின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் ஐந்து முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கற்றல் திறனை அறிவதற்கு, கடந்த 2005-ல் இருந்து ஆண்டுதோறும் கல்வி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அசர் (ASER - Annual Status of Education Report)என்ற பெயரில் கல்விநிலையின் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுவருகிறது. இதன்படி, 2012-ன் கல்வி நிலவரம் குறித்த ஆய்வு அறிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
அதன்மூலம், மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவு, பள்ளியின் அடிப்படை வசதிகள் முதலானவற்றில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது. எனினும், பாட வாரியாக மாணவர்களின் படிக்கும் திறன் மோசமான நிலையில்தான் இருக்கிறது என்பது வருத்தத்துக்கு உரியது.
அசர் ஆய்வு 2012-ன் முடிவுகளின்படி, தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் கல்வி நிலையின் முக்கிய அம்சங்கள் இதோ...
இந்திய அளவில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகைப் பதிவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களின் சேர்க்கைப் பதிவு 99.4 சதவிகிதமாக உள்ளது.
தனியார் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2006-ல் 19.5 சதவிகிதமாக இருந்தது, 2012-ல் 29 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

தமிழ் வாசிப்பில் வீழ்ச்சி...
2006-ம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 65 சதவிகிதம் பேரால் இரண்டாம் வகுப்புக்கு உரிய கதையை வாசிக்க முடியவில்லை. இந்த நிலை, 2012-ல் 70 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. அரசுப் பள்ளிகளில் 71 சதவிகிதத்தினராலும், தனியார் பள்ளிகளில் 69.1 சதவிகிதத்தினராலும் தமிழைச் சரியாகப் படிக்க முடியாத நிலை உள்ளது.
ஆங்கில வாசிப்பில் எழுச்சி...
ஆங்கிலத்தில் உள்ள எளிய வார்த்தைகளைத் தமிழக ஊரக மாணவர்களில் 57.1 சதவிகிதத்தினரால் நன்றாக வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48.9 சதவிகிதம்தான் என்பதால், அடிப்படை ஆங்கிலத்தை அறிந்துவைத்து இருப்பதில் தமிழகச் சுட்டிகள் முன்னேற்ற நிலையில் உள்ளனர்.
கணக்கில் சுணக்கம்...
கணக்குப் பாடத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 13 சதவிகிதத்தினரால் மட்டுமே எளிய வகுத்தல் கணக்குகளுக்குத் தீர்வுகாண முடிந்து இருக்கிறது. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 17.4 சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே எளிய கழித்தல் கணக்குகளுக்குத் தீர்வு காண முடிந்து இருக்கிறது. கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவைவிட தமிழக கிராமத்துச் சுட்டிகள் கணக்குப் போடுவதில் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஊரக மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கு, மாதம்தோறும் கட்டணம் செலுத்திக் கற்றுக்கொள்கிற தனியார் 'டியூஷன்’ பெரும் அளவில் பங்கு வகிக்கிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, வகுப்பு ஆசிரியர்-மாணவர்கள் விகித விதிகளைக் கடைப்பிடிப்பதில் ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 2010-ல் 47 சதவிகிதப் பள்ளிகளில் இந்த விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. இப்போது, இது 49.3 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது.
81.7 சதவிகிதப் பள்ளிகளில் ஆசிரியர்- வகுப்பறை விகிதம் விதிமுறைக்கு உட்பட்டு உள்ளது.
அசர் ஆய்வுக்காக மொத்தம் 630 பள்ளிகள் பார்வையிடப்பட்டன. அவற்றில் 80.8 சதவிகிதப் பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது. 12 சதவிகிதப் பள்ளிகளில் குடிநீர் வசதிகள் முற்றிலும் இல்லை.
கழிவறை வசதி இல்லாத பள்ளிகளின் விகிதம், 2011-ல் 9.6 சதவிகிதமாக இருந்தது. இது 5.2 சதவிகிதமாகக் குறைந்து இருக்கிறது. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள கழிவறைகள் உள்ள பள்ளிகளின் விகிதம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 44.6 சதவிகிதத்தில் இருந்து 68.9 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது.
66.1% பள்ளிகளில் முழுமையான சுற்றுச் சுவர் உள்ளது.
தமிழகத்தில் 99.8 சதவிகிதப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் முழுமையாகச் செயல்படுகிறது.