FA பக்கங்கள்
Published:Updated:

பரதத்தில் ஜொலிக்கும் ரஹிமுன்னிஷா !

பரதத்தில் ஜொலிக்கும் ரஹிமுன்னிஷா !

##~##

பரதநாட்டியத்தில் இஸ்லாமியப் பெண்கள் ஈடுபடுவது அபூர்வம். ஆனால், அதில் கின்னஸ் சாதனை செய்யும் அளவுக்கு பயிற்சி எடுத்துவருகிறார்,  கும்பகோணம் கியிசி பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ரஹிமுன்னிஷா பேகம்.

பரதத்தில் ஜொலிக்கும் ரஹிமுன்னிஷா !

இந்த முயற்சிக்கு முக்கியக் காரணமான  இவருடைய அம்மா சலிமாபி, ''நான் சின்ன வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. அதனால், என் மகளை அவளுடைய நான்காம் வயதிலிருந்து பரதநாட்டியம் வகுப்புக்கு அனுப்பினேன். எட்டு ஆண்டுகளாக கடுமையான பயிற்சி எடுத்துவந்ததன் பலனாக, கோவாவில் நடந்த பன்னாட்டு பரதநாட்டியப் போட்டியில்  நாட்டியப் பேரொளி பட்டம் பெற்றாள்'' என்றவரின் கண்களில் பெருமிதம்.

ரஹிமுன்னிஷாவின் நடன குருவும், ஸ்ரீ அபிநயா கலைக் குழுமத்தின் ஆசிரியருமான விஜயமாலதி, ''என்னிடம் ரஹிமுன்னிஷா பேகத்தை முதன்முதலாக அனுப்பும்போது அவள் பெற்றோர், 'ஒரு பளிங்குக் கல்லை அனுப்புகிறோம். நல்ல சிற்பமாகச் செதுக்குங்கள்’ என்றனர். அவர்களின் ஆர்வம் புரிந்தது. அவளைப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் களைக்கொண்டு ஒன்றரை மணி நேரம் பரதம் ஆடவைத்து, கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் அளவுக்கு வேகமாகவும் ஆர்வமாகவும் கற்றாள். இது ஆரம்பம்தான், அவளால் இன்னும் பிரகாசிக்க முடியும்'' என்றார்.

கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு, திருவாரூர், கோவா, குஜராத், திருச்சேரை, ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களில் தனது நாட்டியத் திறமையை வெளிப்படுத்திய ரஹிமுன்னிஷா பேகம், நாட்டியக் கலைச்சுடர், வளரும் இளங்கலைஞர், நாட்டியப் பேரோளி போன்ற பட்டங்களும் 50-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

பரதத்தில் ஜொலிக்கும் ரஹிமுன்னிஷா !

புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, கணேச களத்துவம், நடேச களத்துவம், ஜெகதீஸ்வரம், வர்ணம், போசாம்போ, தீராத விளையாட்டுப் பிள்ளை, தில்லானா, அஷ்டலெட்சுமி உள்ளிட்ட பாடல்களுக்குச் சிறப்பாக நடனமாடும் ரஹிமுன்னிஷா பேகம், பானை மீது நடனமாடுவது, தாம்பாலத்தில் நடனமாடுவது, உடலை வருத்தும் பாம்பு நடனத்தையும் மிகுந்த விருப்பத்தோடு கற்றுவருகிறார்.

''பாம்பு நடனத்துக்கான பயிற்சியை  அதிகாலையில் எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் என் உடல் வளையவில்லை. என் ஆசிரியர் விஜயமாலதி மற்றும் மாஸ்டர் குணா இருவரும் 'உன்னால் முடியும்’ என்று நம்பிக்கைதந்து ஊக்கப்படுத்தினர். அதேபோல் குறத்தி நடனத்தில்... 'வஞ்சி வந்தனலே, மலைக் குறத்தி வந்தனலே...’ என்ற பாட்டுக்கும் ஆடினேன். 2010-ம் ஆண்டு முதன்முதலாக 17 ஆயிரம் ஆணிகள் மேல் அரை மணி நேரம் நடனமாடினேன்'' என்கிற ரஹிமுன்னிஷா, விரைவில் ஒரு லட்சம் ஆணிகள் பதித்த பலகையில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனைபடைப்பேன் என்கிறார்.

''பரதநாட்டியம் ஆடுவதால், எனக்கு தன்னம்பிக்கை கூடுகிறது. அதனால்,  நன்றாகப் படிக்கவும் முடிகிறது. நாட்டியத்துக்கும் படிப்புக்கும் தனித்தனியே நேரத்தைத் திட்டமிட்டுக்கொள்வதால் இரண்டிலும் ஜொலிக்க முடிகிறது. ஐ.ஏ.எஸ். ஆவது என் விருப்பம். அப்போதும் நாட்டியத்தை விட்டுவிட மாட்டேன்'' என்று சொல்லும் ரஹ்முன்னிஷா பேகத்தின் குரலில் இருந்த உறுதி, அந்தச் சாதனையை நிகழ்த்துவார் என்பதை உணர்த்தியது.

பரதத்தில் ஜொலிக்கும் ரஹிமுன்னிஷா !