FA பக்கங்கள்
Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !
##~##

''ஹாய் ஜீபா... சாம்பிராணியை எப்படி தயாரிக்கிறார்கள்?''

   - தி.தமிழரசி, செங்கல்பட்டு.

''ரப்பரைப் போலத்தான் சாம்பிராணியும் மரத்திலிருந்து வடியும் ஒரு வகைப் பிசின். அந்த மரத்தின் பெயர் ஃப்ராங்கின்சென்ஸ்(Frankincense). இந்த மரம் அரேபியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே காணப்படுவதாகத் தாவரவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அங்கிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியது. சாம்பிராணி, குடிசை மற்றும் சிறுதொழில் முறையில் தயாரிக்கப்படுகிறது. ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு ஒரு கிலோ சாம்பிராணி பிசினை எடுக்கலாம். தமிழ்நாட்டில் கல்வராயன் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் இந்த மரங்கள் உள்ளன.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... டிராகுலா என்பது இப்போது இருக்கிறதா இல்லையா?''

   - கே.ஜெகன், சோமனூர்.

''நம்ம ஊர் ரத்தக்காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு, வேதாளம் போலத்தான் மேலை நாடுகளில் டிராகுலா. 18-ம் நூற்றாண்டில் மேலை நாட்டுத் திகில் கதைகளில் வாம்பயர் என்ற மனித ரத்தத்தைக் குடிக்கும் கதாபாத்திரம் உருவானது. குறிப்பாக, 1819-ல் ஜான் பாலிடொரி என்ற எழுத்தாளர் எழுதிய 'தி வாம்பயர்’ என்ற கதை மிகவும் புகழ்பெற்றது. அந்த வாம்பயரை இன்னும் மெருகேற்றி, 1897-ல் ப்ராம் ஸோக்கர் என்ற எழுத்தாளர் 'டிராகுலா’ என்ற நாவலை வெளியிட்டார். அப்போது முதல் காலத்துக்கு ஏற்ற வகையில் டிராகுலா பற்றிய கதைகள், திரைப்படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. உனக்கு கற்பனை வளம் இருந்தால், நீ கூட ஒரு டிராகுலாவை உருவாக்கலாம் ஜெகன்?''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... உலகில் அதிகமாகப் பயிராகும் உணவு தானியம் அரிசியா, கோதுமையா?''

   - வி.அபிஷேக், நாமக்கல்.

''நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கும் அபிஷேக். மக்காச்சோளம்தான் உலகில் அதிகமாக பயிரிடப்படும் உணவு தானியம். இவை பெரும்பாலும் பொழுதுபோக்குக்காகக் கொறிக்கும் பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளுக்காக பயன்படுகிறது. உலகின் மக்காச்சோள உற்பத்தியில் பாதி அளவு ஐக்கிய அமெரிக்காவில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 800 மில்லியன் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. கோதுமை மற்றும் அரிசி, சராசரியாக 700 மில்லியன் டன் உற்பத்தியுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை மாறி மாறிப் பிடிக்கின்றன.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... எனக்கு ஒரு டவுட். யேமன் (Yemen என்பதும் ஓமன் (Oman) என்பதும் ஒரே நாடுதானா?''

- த.அர்ச்சனா, திருநெல்வேலி.

''இல்லை அர்ச்சனா. யேமன், ஓமன் இரண்டும் அரேபியத் தீபகற்பத்தில் இருக்கும் வெவ்வேறு நாடுகள். யேமன், அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. இது குடியரசு நாடு. இதன் தலைநகரத்தின் பெயர் சனா. இதன் மக்கள்தொகை சுமார் மூன்று கோடி. இங்குள்ள நாணயத்தின் பெயர், யேமெனி ரியால்.

மை டியர் ஜீபா !

அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு, ஓமன். இங்கே நடப்பது மன்னர் ஆட்சி. இதன் தலைநகரம் மஸ்கட். மக்கள்தொகை சுமார் நான்கு கோடி. இங்குள்ள நாணயத்தின் பெயர் ஓமனி ரியால்.''

''ஹலோ ஜீபா... விலங்குகள், தாவரங்கள் என பெரும்பாலானவற்றுக்கு லத்தீன் மொழியில் பெயர் வைத்திருக்கிறார்களே அது ஏன்?''

   - சா. முகுந்த், ராணிப்பேட்டை.

''மிகவும் தொன்மையான மொழிகளில் லத்தீன் மொழியும் ஒன்று. இது ஆரம்பத்தில் இத்தாலியில் உள்ள ரோம் நகரைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். இப்போது வாடிகன் நகரின் ஆட்சி மொழியாக மட்டுமே இருக்கிறது. ஆனால், கி.மு.100 முதல் கி.பி. 100 வரை மிகவும் புகழ்பெற்ற மொழியாகவும் மேற்கு உலக நாட்டில் அறிஞர்கள் விரும்பிக் கற்ற மொழியாகவும் இருந்தது. அதனால்தான் அப்போதைய அறிஞர்கள், விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடித்த பலவற்றுக்கு லத்தீன் மொழியில் பெயர்வைத்தார்கள்.''

மை டியர் ஜீபா !