ஜாலியாக ஆடலாம்...சைகையால் ஜெயிக்கலாம் !
##~## |
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!
சென்ற முறை தாவியும் குதித்தும் உடலை முறுக்கியும் ட்விஸ்டர் விளையாடி களைத்திருப்பீர்கள். இந்த முறை உடல் அலுப்பு இல்லாமல், சத்தம் இல்லாமல் சைகையால் விளையாடுவோம்.
இந்த விளையாட்டின் பெயர், 'ஐ யம், ஐ டு’ (I am, I do). இதை விளையாட, குறைந்தது 6 வயதாகி இருக்க வேண்டும். மூன்றுக்கு மேற்பட்டவர்கள் விளையாடலாம். இது பரமபதம் ஆட்டம் போன்றது.
முதலில் ஆடுபவர், தனக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு பகடைகளை உருட்ட வேண்டும். ஒரு பகடைக்காய் (வெள்ளை) நீங்கள் யாரென்றும், மற்றது (கறுப்பு) நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவும். இதற்கு, சீட்டுக் குவியலிலிருந்து இரண்டு சீட்டுகளை எடுக்க வேண்டும். ஒன்று I am சீட்டு. மற்றொன்று I do சீட்டு. பகடைக் காயில் வரும் வண்ணத்தைக்கொண்டு, நீங்கள் யார் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்ய வேண்டும்.

இப்போது, எல்லாம் உங்கள் கையில். உங்களுடன் விளையாடுபவர்களை நீங்கள் யார் என்றும், நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றும் யூகிக்கவைக்க வேண்டும். முதலில் யார் சரியாகச் சொல்கிறார்களோ, அவர்களும் நீங்களும் ஒரு கட்டம் முன்னேறிச் செல்லலாம்.
நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்ற இரண்டையுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். ஒன்றை மட்டுமே சொன்னால், முன்னேறிச் செல்ல முடியாது. குறிப்பிட்ட நேரம் முடிவதற்குள், யாரும் யூகிக்கவில்லை என்றால், அடுத்தவர் விளையாட ஆரம்பிக்கலாம்.

நடிப்பவர் வாய் திறக்காமல், சத்தம் போடாமல் நடிக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, உங்களுக்கு 'முதலை’ என்றும், 'எண்ணெய்க் குளியல் எடு’ என்றும் வருவதாக வைத்துக் கொள்வோம். முதலை எண்ணெய்க் குளியல் எடுப்பதாக நடித்துக் காட்ட வேண்டும். முதலை என்பதை மட்டுமோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதை மட்டுமோ யூகித்தால் போதாது. முதலில் யார் முழுவதும், அட்டையில் (ஙிஷீணீக்ஷீபீ) ஒரு சுற்று வருகிறார்களோ, அவர்களே ஆட்டத்தை வென்றவர்.
இந்த விளையாட்டில், ஒரு சுவாரஸ்யமான அம்சம் உண்டு. சில நேரம், விளையாட்டு அட்டையில் 'சிரிப்பு சதுரம்’ என்ற சதுரத்தில் வந்து நிற்பீர்கள். அப்போது, நீங்கள் மற்றவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் சிரிக்க வைக்க வேண்டும். முதலில் சிரிப்பவர், ஒரு சதுரம் பின்னால் செல்ல வேண்டும். யாரும் சிரிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு சதுரம் பின்னால் செல்ல வேண்டும்.
அடுத்த முறை மேலும் ஒரு புதிய விளையாட்டுடன் சந்திப்போம்.