FA பக்கங்கள்
Published:Updated:

நெட்டிஸம் - வாய்ப்பாடும் வசப்படும் !

நெட்டிஸம் - வாய்ப்பாடும் வசப்படும் !

##~##

கணிதப் புலியாகத் திகழ வேண்டும் எனில், நமக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றுக்கு அடிப்படையாக வாய்ப்பாட்டை வசப்படுத்தி இருக்க வேண்டும்.

வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்துகொள்ள பல வழிகள் உண்டு. இப்போது இணையத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஆம்... வாய்ப்பாடு புத்தகத்தை வைத்துக்கொண்டு சத்தம்போட்டுப் படித்ததெல்லாம் அந்தக் காலம். இன்றைய ஹைடெக் யுகத்தில் வாய்ப்பாடுகளை இணையதளம் வாயிலாகவே பார்த்துப் பயிற்சி எடுக்கலாம்.

இதற்கு, டேபிள்ஸ்டெஸ்ட் தளம் (http://tablestest.com)ஓர் அழகான உதாரணம். இந்தத் தளம் தனது முகப்புப் பக்கத்திலேயே வாய்ப்பாட்டைக் கட்டம்போட்டு வைத்திருக்கிறது. வழக்கமான முறையில் ஒன்று முதல் பத்து வரையான வாய்ப்பாடுகள் வரிசையாக இருப்பதற்குப் பதில், அழகாக ஒரே பக்கத்தில் 100 கட்டங்களுக்குள் 10 வாய்ப்பாடுகளும் அடங்கிவிடுகின்றன. கிரிட் வடிவிலான இந்தக் கட்டத்தில், எண்களின் மீது கர்சரைக் கொண்டுசெல்வதன் மூலம் அந்த எண்ணுக்கான பெருக்கல் சமன்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கான மேல் பகுதியிலும் இடது பக்கத்திலும் ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.இரண்டு வரிசைகளிலும் ஓர் எண்ணைத் தேர்வுசெய்தால், அதன் பெருக்கல் மதிப்பு கட்டத்தின் நடுவே தெரியும்.

இதன் மூலம் வாய்ப்பாட்டை சுலபமாக மனப்பாடம் செய்துகொள்ளலாம்.

நெட்டிஸம் - வாய்ப்பாடும் வசப்படும் !

நமது வாய்ப்பாட்டுத் திறனைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். ஆறு கட்டங்களாக சோதனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டத்தைத் தேர்வுசெய்ததும், வரிசையாக பெருக்கல் சமன்பாடுகள் தோன்றுகின்றன. அதன் கீழ் கொடுக்கப்படும் எண்களில் சரியான விடையை க்ளிக் செய்யச் செய்ய, பெருக்கல் சமன் மாறும்.

வீடியோ கேம் விளையாடுவது போலவே இந்தப் பெருக்கல் கணக்குகளைப் போட்டுப்பார்க்கலாம். முதல் கட்டத்தை முடித்துவிட்டால், அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம். ஒவ்வொரு கட்டத்திலும் பெருக்கல் சமன் கடினமாகும். யாருடைய துணையும் இல்லாமல் நீங்களே பெருக்கல் சமன்பாடுகளைக் கற்கலாம்.

இதைப் போலவே மல்டிப்ளிகேஷன் டூல் தளமும்(http://www.multiplicationtool.org) பெருக்கலில் பயிற்சி எடுத்துக்கொள்ள உதவுகிறது. மேத்இஸ் ஃபன்  (http://www.mathsisfun.com/tables.html) தளமும் வாய்ப்பாட்டைக் கற்றுக்கொடுக்கிறது. வண்ண வரைபடங்களுடன் எளிதான விளக்கத்தையும் காட்டுகிறது. இதில் வாய்ப்பாடு சோதனைப் பகுதியும் இருக்கிறது.

நெட்டிஸம் - வாய்ப்பாடும் வசப்படும் !

மேத்பிளேகிரவுண்ட் தளமும் (http://www.mathplayground.com/howto_learnmultfacts.html ) 160; இதே வகைதான். இந்தத் தளத்தில் பெருக்கல் சோதனைகள் வீடியோ கேம்  போலவே இருக்கும். விடைக்கான எழுத்துகள் தோன்றும்போது, திரையில் விலங்குகளையும் மனிதர்களையும் காணலாம்.

விக்கிஹவ் தளம் (http://www.wikihow.com/Learn-Multiplication-Facts) கொஞ்சம் மாறுபட்ட வகையில் கற்றுத் தருகிறது. வாய்ப்பாட்டின் அடிப்படையை புரிந்துகொள்ளக்கூடிய குறிப்புகளின் மூலம், அவற்றை எப்போதும் மறக்காமல் நினைவில்வைக்க வழிகாட்டுகிறது.  எழுதிப்பார்ப்பது, உதாரணங்களோடு தொடர்புபடுத்திப்பார்ப்பது என எளிதான குறிப்புகள் மூலமும் பெருக்கல் சமன்பாடுகளை அழகாக நினைவில் நிறுத்துகிறது. நீளமான பெருக்கல் கணக்குகளைப் போடுவதற்கு வழிகாட்டும் தனிக் கட்டுரையோடு, கணிதத் தேர்வுக்குத் தயாராக உதவும் கட்டுரைகளும் உள்ளன.

கிட்ஸ்வேர்ல்டு தளமும் (http://www.kidzworld.com/article/4107-tips-and-tricks-to-tame-your-times-tables) 160; இதைப் போலவே அழகான அடிப்படை விளக்கக் குறிப்புகளோடு வாய்ப்பாட்டில் பயிற்சி அளிக்கிறது. வெறும் மனப்பாடமாக அல்லாமல், வாய்ப்பாட்டைப் புரிந்துகொண்டு நினைவில்கொள்ள இந்தத் தளம் வழிகாட்டுகிறது. கையில் உள்ள 10 விரல்களை அடிப்படையாகக்கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக குறிப்புகள் அமைந்துள்ளன (இந்தத் தளத்தில் உள்ள விளம்பர நோக்கிலான கீவேர்டுகள் கொஞ்சம் தொல்லை தரலாம்.)

வாய்ப்பாடு படிப்பதை அலுப்பே இல்லாமல் சுவாரஸ்யமாக மேற்கொள்ள வழிகாட்டும் இந்தத் தளங்களை கணிதப்புலியாகும் ஆர்வம் கொண்டவர்கள் குறித்துவைத்துக்கொள்ளலாம்.