ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

வருது வருது ஐசோன் வால் நட்சத்திரம் !

பேரா சோ.மோகனா ஆ.முத்துக்குமார்

##~##

நவம்பர் மாதத்தில் நமக்கு மிகவும் பிடித்த வானவேடிக்கை பண்டிகையான தீபாவளி வருவது தெரியும். அதே மாதம் வானில் இன்னொரு விஷயம் நடக்கப்போகிறது. 'ஐசோன்’ எனப்படும் வால்நட்சத்திரம் பூமியை நோக்கி வரப்போகிறது.

அச்சமூட்டும் வால்மீன்!

'வால்மீன்’ எனப்படும் வால்நட்சத்திரம் வந்தால், நாட்டுக்கு கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை உலக மக்களிடம் பழங்காலம் தொட்டே உள்ளது. 1910, மே 19-ல் வந்த 'ஹாலி வால்மீன்’ பூமிக்கு மிக அருகில் தெரிவதாக இருந்தது. அதன் வாலிலிருந்து நச்சு வாயு வீசப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதனால், பயந்துபோன மக்கள் சிலர் அதற்கு எதிரான மருந்துகள் உட்கொண்டார்கள். வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டார்கள். ஒரு சிலரோ அதற்குப் பயந்து தற்கொலையும் செய்துகொண்டனர். ஆனால், அந்த ஹாலி வால்மீன் சாதுவாக வந்து, அமைதியாகப் போய்விட்டது.

யார் இந்த வால்மீன்?

பொதுவாகவே வால்மீன் ரொம்ப சாதுவானதுதான். இதன் உள்பகுதி துளித்துளி மில்லிமீட்டர் அளவே உள்ள தூசுத் துணுக்குகளால் ஆனது. அதனைச் சுற்றி பனிக்கட்டி அடுக்குகள். அத்துடன் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் அம்மோனியாவும் இருக்கும். இதில் பாறை, வாயுக்கள், பனிக்கட்டியும் இணைந்த உட்கரு இருக்கும். வால்மீன்கள் வான்வெளியில், இரண்டு இடங்களிலிருந்து உருவாகின்றன. ஒன்று, நம் சூரிய மண்டலக் கோள்களைத் தாண்டி உள்ள 'குய்ப்பர் வளையம்’ (Kuiper Belt).அடுத்து, சூரிய மண்டலத்தின் தொலைதூரக் கடைக்கோடி எல்லையில் உள்ள 'ஊர்ட் மேகங்கள்’ (Oort clouds).ஒரு வால்மீன் என்பது  குய்ப்பர் வளையம் அல்லது  ஊர்ட் மேகத்தில் பல கோடி ஆண்டுகள் தங்கி வாழ்ந்த பின்னரே, அங்கிருந்து கோள்களை நோக்கி ஓடிவரும். அதுவும் சூடான சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் வந்தபின்னரே, வால்மீனுக்கு வால் முளைக்கும். அப்போதுதான் அது பிரகாசமாவும் தெரியும்.

வருது வருது ஐசோன் வால் நட்சத்திரம் !

பழங்கால கருத்துகளும், உண்மையும் !

பழங்காலத்தில் வால்மீன்கள் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை யாருக்கும் தெரியாது. நம் முன்னோர்கள் வால்மீனையும் அதன் வாலையும் பார்த்தும்கூட அது ஒரு விண்மீன்தான் என்று நம்பினர். வால்மீன் பூமியின் வளிமண்டலத்தில் பயணிக்கிறது என்றும் பல நூறு ஆண்டுகளாக  நினைத்தனர். டேனிஷ் நாட்டு வானவியலாளர் டிகோ ப்ராசே (Tycho Brache) என்பவரே, 'வால்மீன்கள் என்பவை சந்திரனையும் தாண்டி வலம் வருகின்றன’ என்ற உண்மையை, முதன் முதலில் கி.பி.1577-ல் கண்டறிந்தார். வால்மீன், கோள்கள் போலவே சூரியனைச் சுற்றி வரும். ஆனால், அது தன் இஷ்டம் போல ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து சுற்றிவிட்டுப் போகும். சில வால்மீன்கள் 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சில வால்மீன்கள் 60,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் வந்து, சூரியனைச் சுற்றிவிட்டு ஓடிவிடும். மீண்டும் வரவே வராது. இப்படி ஓர் ஆண்டில் சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம்! அது நம்மை, இந்த உலகை எதுவும் செய்யாது. 2013, ஜூலை வரை 4,894 வால்மீன்கள் கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளன.

புதிய விருந்தாளி!

நாம் இப்போது, நவம்பரில் வரவுள்ள புதிய விருந்தாளி ஐசோன் கதைக்கு வருவோம். மற்ற வால்மீன்கள் போலவேதான் ஐசோனும். ஆனால், ஐசோன் வால்மீன், இதுவரை வந்த வால்மீன்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும்கூட.

இந்த ஐசோனின் வயது என்ன தெரியுமா? இது, சூரியனுக்கு முன்னே பிறந்ததாம். இதன் வயது சூரியனைவிட அதிகம் என்கின்றனர். அதாவது, 470 கோடி ஆண்டுகள். அப்போது உருவான அந்த வால்மீன் இப்போதுதான், நம்மை முதல் முறையாகப் பார்க்க வருகிறது. இது மிக மிகப் பெரிது. இதன் வாலின் நீளம், 3,00,000 கி.மீ., அகலம், 5 கி.மீ.

நவம்பர் 22 அன்று, சூரியனுக்கு மிக அருகில் 1.16 மில்லியன் கி.மீ. தொலைவில் வந்து, சூரியனின் ஒளியுடன் போட்டியிடப் போகிறது. 2013, நவம்பர் 28-ம் நாள், பூமிக்கு மிக அருகில் வருமாம். இதனைத் தொலைநோக்கி மட்டுமின்றி வெறும் கண்களாலும் பார்க்கலாம். உலகில் அனைத்துப் பகுதியினரும் பார்க்கக்கூடிய வால்மீன் இதுதான்.

ஐசோனை மேளதாளத்துடன் வரவேற்போம்!