தேடிவந்த நண்பன் !
##~## |
'நாம் தேடிச்சென்று பேசும் நண்பரோ, உறவினரோ திடீரென நம்மைத் தேடி வந்து, 'ஹாய்’ சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி எதிர்பாராத சந்தோஷத்தை அளித்தது சுட்டி விகடன்.’
கடந்த வாரத்தில் நம்முடன் பேசிய பல பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் இவை.
கடந்த ஆண்டு தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகமாகி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது CCE - FA எனப்படும் வளரறி மதிப்பீட்டு முறை. இதற்காக சுட்டி விகடன், 16 சிறப்புப் பக்கங்களை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே.
இவை எல்லா மாணவர்களிடமும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த இதழ் சுட்டி விகடனை, தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பினோம். அடுத்தடுத்த சில இதழ்களும் பள்ளிகளைத் தேடி வரப்போகிறது. FA பக்கங்கள் பற்றி மட்டுமின்றி, இதழ் முழுவதும் உள்ள பகுதிகள்குறித்துத் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் சொன்னார்கள்.

மு.உதயசங்கர்- (தலைமை ஆசிரியர், ஊ.ஒ.ந.நி. பள்ளி, வெள்ளக்குட்டை, ஊத்தங்கரை ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்) ''தாங்கள் அனுப்பிய சுட்டி விகடன் இதழைப் படித்தேன். 'FA’’ பகுதி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் கற்பித்தலுக்குத் துணைக்கருவியாகவும் திகழ்கிறது. மேலும், 'கனவு ஆசிரியர்’ பகுதி எங்களைப் போன்ற ஆசிரியர்களை இன்னும் சிறப்பாக பணிபுரியத் தூண்டுகிறது. எனது பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சுட்டி விகடனை அறிமுகப்படுத்தினேன்'' என்கிறார்.

சோபியா எஸ்தர் ராணி பாய் (தலைமை ஆசிரியை, ஆலந்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி, சென்னை.) ''நான் பல வருடங்களாகவே சுட்டி விகடன் வாசகிதான். இப்போது, எனது பள்ளிக்கே சுட்டி விகடன் வந்தது மகிழ்ச்சி. 'FA’ பக்கங்களில் தரப்படும் செயல்முறை விளக்கங்கள், நாங்கள் வகுப்பறையில் நேரடியாகப் பாடம் நடத்துவதைப் போலவே உள்ளன. 'சின்னச் சின்ன வண்ணக் கதைகள்’ மூலம் குழந்தைகளுக்கு வாழ்க்கை நெறிமுறைகளை அழகாக விளக்க முடிகிறது. ஆங்கிலம் அவசியம் என்று ஆகிவிட்ட இந்தக் காலத்தில், 'அழகாக அறிவோம் ஆங்கிலம்’ பகுதியும், தாய் மொழியின் சிறப்பை உணரும்விதமாக வருகிற, 'இனிதாகக் கற்போம் தமிழ்’ பகுதியும் சிறப்பாக உள்ளன. 'சுட்டி மனசு’ பகுதி, மாணவர்களுடன் பல மணி நேரம் செலவழிக்கும் ஆசிரியர்களும் படித்து, அவர்களின் மனதை அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எங்கள் பள்ளி நூலகத்தில் சுட்டி விகடனை சேகரிக்கத் தொடங்கிவிட்டோம்'' என்கிறார்.
மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் பணியில், ஆசிரியர்களுடன் இணைந்து சுட்டி விகடன் தொடர்ந்து செயல்படும்.