மேடைகளில் முழங்கும் குட்டி விவேகானந்தர்!
##~## |
சுட்டிகளின் கனவு நாயகனாக இருக்கும் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'கோவையில் எனக்குக் கிடைத்த சிறந்த நண்பன்’ என்று ஒரு சிறுவனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சபரி வெங்கட் என்கிற சிறுவன்தான் அந்த மாண்புமிகு மாணவன். கோவை, சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சபரி, பிறவியிலேயே பார்க்கும் திறனை இழந்தவர். ஆனால், மன உறுதியையும் நம்பிக்கையையும் இழக்காத சபரியின் குரல், இப்போது பல மேடைகளில் 'கணீர்... கணீர்...' என ஒலித்துக்கொண்டிருக்கிறது.

''எனக்கு பார்வை இல்லையேனு எப்பவுமே வருத்தப்பட்டது கிடையாது. காலை முதல் மாலை வரை மற்ற சிறுவர்கள் படிக்கும் ரெகுலர் பள்ளியில்தான் படிக்கிறேன். மாலையில் இரண்டு மணி நேரம் மட்டும் ப்ரெய்லி முறையில் பயிற்சி எடுத்துக்கிறேன்'' என்கிறார்.
சபரிக்கு கர்னாடக சங்கீதம், கீதா சாரம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது. விவேகானந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். ''அவரோட வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தெரிஞ்சுக்கிட்டேன். அவரின் சொற்பொழிவுகள், எப்பேர்பட்ட கஷ்டத்தில் இருக்கிறவங்களுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். நான் தெரிஞ்சுக்கிட்டதை மற்றவர்களுக்கும் சொல்லணும்னு பல மேடைகளில் அவரைப் பற்றி பேச ஆரம்பிச்சேன்'' என்கிறார்.
சபரியின் ஸ்பெஷல், விவேகானந்தரைப் போலவே வேடம் அணிந்துகொண்டு மேடைகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை பேசுவது. ''விவேகானந்தருக்கு அடுத்து எனக்கு ரொம்பப் பிடிச்சவர், அப்துல் கலாம். அவரைப் பற்றி நண்பர்கள் நிறைய சொல்லியிருக்காங்க. அவரை ஒருமுறை சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசையும் நிறைவேறிச்சு. கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், என்கிட்டே ரொம்ப அன்பாகப் பேசினார். தோளைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அப்புறம், 'கோவையில் எனக்குக் கிடைத்த நண்பர்களில் ஒருவன் சபரி’னு மேடையில் சொன்னப்ப, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு'' என்று நெகிழ்கிறார் சபரி.
விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மூலம் பலருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதும், கலெக்டருக்குப் படித்து மக்களுக்கு சேவை செய்வதும் தனது வருங்காலத் திட்டங்கள் என்கிறார் இந்த க்யூட் விவேகானந்தர்.
கி.விக்னேஷ்வரி