ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

இது எங்க ஏரியா

கால்வாய்... கால்வாய்!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்
##~##

 நீர்வழித் தடமான, 'கால்வாய்’ என்பது ஆங்கிலத்தில் CANAL மற்றும் CHANNEL என்ற வார்த்தைகளால் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ?CHANNEL என்பது இயற்கையாக உருவான கால்வாயைக் குறிக்கும். உதாரணத்துக்கு, ஆங்கிலக் கால்வாய் மற்றும் மொஸாம்பிக் கால்வாய் (Mozambique Channel). CANAL என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயைக் குறிக்கும். உதாரணத்துக்கு, பனாமா கால்வாய் (Banama Canal).

 10 டாலர் வழக்கு!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராக இருந்தபோது... பணக்காரர் ஒருவர், ''எனக்கு ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டிய ஒருவர் மீது வழக்குப் போட வேண்டும்'' என்றார். 'ஐந்து டாலர்களுக்காக  வழக்கு வேண்டாமே’ என்று லிங்கன் எவ்வளவோ  சொல்லியும் பணக்காரர் கேட்கவில்லை. ''சரி, எனக்கு வழக்குக் கட்டணமாக 10 டாலர் தாருங்கள்'' என்றார் லிங்கன். அதைப்பெற்று, அந்த ஏழையிடம் ஐந்து டாலர்களைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னார். வழக்கும் முடிந்தது.

 அதுதான் நேரு!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

நமது நாட்டின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 1959-ல் பீகார் மாநிலத்தில் தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாஞ்சேட் அணைக்கட்டைத் திறந்துவைக்கச் சென்றார். அவரை மாலை அணிவித்து வரவேற்க, 'புத்னி மேஜான்’ என்கிற பழங்குடி இனப் பெண்ணை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த அணை கட்டுவதற்குப் பணிபுரிந்த கூலித் தொழிலாளிகளில் அவரும் ஒருவர். நேருக்கு மாலை அணிவித்த புத்னி மேஜான், நேருவின் தலையில் சிவப்பு ரிப்பன் ஒன்றையும் கட்டினார். பதில் மரியாதை செய்ய விரும்பிய நேரு, அந்தப் பெண்ணையே அணைக்கட்டைத் திறந்துவைக்கும்படிக் கூறினார். தன் வாழ்வில் கிடைத்த பெரிய பாக்கியமாக மகிழ்ந்து, அணைக்கட்டைத் திறந்துவைத்தார், புத்னி மேஜான்.

விக்ராந்த் வருகிறான்!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

சமீபத்தில் கொச்சியில் நடந்த கோலாகல விழாவில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ். விக்ராந்த்’ வெள்ளோட்டம் விடப்பட்டது. 860 அடி நீளம், 200 அடி அகலம், 37,500 டன் எடைகொண்ட இதன் தளங்களின் மொத்தப் பரப்பு, 2.5 ஏக்கர். 1,500 வீரர்களுடன் மணிக்கு 52 கி.மீ. வேகத்தில் கடலில் செல்லும். போர்க் கப்பல் தயாரிக்கும் திறனை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் நாடுகள் மட்டுமே பெற்றிருந்தன. இந்தியாவும் இதில் இணைந்துள்ளது. 2016-ல் கடல் பயண சோதனைக்கு விக்ராந்த் செல்லும். 2018-ல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.

 பரபரப்பான விமான நிலையம்!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

உலகில், மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில், சிக்காகோவின் 'ஓ'ஹரே பன்னாட்டு விமான நிலையம்’ (O’Hare International Airport) முக்கியமானது. இங்கே, ஒவ்வொரு 42 நொடிகளுக்கும் விமானங்கள் பறந்து செல்வதும் இறங்கி வருவதுமாக இருக்கின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 2,000 விமானங்கள். 2012-ம் ஆண்டு கணக்கின்படி, ஆறு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கே வந்து சென்றுள்ளார்கள்.