மை டியர் ஜீபா !
ஹாசிப்கான்
##~## |
''ஹாய் ஜீபா... எனக்கு ஒரு டவுட்! சிலந்தி கடித்தால் ஸ்பைடர்மேனாக மாறுவது உண்மையா?''
- ந.லாவன் குமார், சிந்தாமணிப்புதூர்.
''ஸ்பைடர்மேன் என்பது அமெரிக்க எழுத்தாளர் ஸ்டான் லீ (Stan lee) கற்பனையில் உருவான ஒரு கதாபாத்திரம். சிலந்திகளில் சிலவற்றுக்கு கடுமையான நஞ்சு இருந்தாலும், தனக்கான இரையைப் பிடிக்கவே அதைப் பயன்படுத்துகின்றன. எந்தச் சிலந்தியாலும் மனிதர்களைச் சாப்பிட முடியாது. எனவே, அவை மனிதர்களைக் கடிக்க வேண்டிய சூழலே பெரும்பாலும் ஏற்படுவது இல்லை. அப்படியே கடித்தாலும் ஸ்பைடர்மேனாக மாற முடியாது. நீ ஸ்பைடர்மேனாக மாற வேண்டுமென்றால், அந்தக் கதையில் வரும் பீட்டர் பர்க் பெயரை, 'லாவன் குமார்’ என்று ஸ்டான் லீ மாற்ற வேண்டும்.''
''இனிய ஜீபா... உலகில் முதன்முதலில் யார், யாருக்கு கடிதம் எழுதினார்கள்?''
- கே.பாலகுமார், நீர்விளங்குளம்.
''அப்படி சரியாக சொல்லும் வகையில் எந்த ஆதாரமும் கிடையாது பாலகுமார். மன்னர்கள் தவிர்த்து, மக்கள் கடிதம் எழுதி அனுப்பும் வழக்கம், பழங்கால எகிப்தியர்களிடம் இருந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் இந்திய, ரோம் மற்றும் சுமேரியர்களிடமும் கடிதம் அனுப்பும் முறை தோன்றிவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.''

''டியர் ஜீபா... தேசிய கீதம் பாடும் பழக்கம் எப்போது தோன்றியது?''
- வி.சந்தோஷ் பிரபு, திருச்சி.
''உலகின் முதல் தேசிய கீதத்தை உருவாக்கியவர்கள் ஜப்பானியர்களே. 'கிமி க யோ’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் 14-வது நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது என்றாலும், இதை அவர்கள் முறைப்படி இசையுடன் பாடவில்லை. பிறகு, 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் தேசிய கீதங்கள் பரவலாக உருவாக ஆரம்பித்தன. அதில், டச் மொழியில் எழுதப்பட்ட 'காட் சேவ் த குயின்’ என்ற பாடல், 'உலகின் முதல் தேசிய கீதம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது.

நமது இந்திய தேசிய கீதம் 'ஜன கண மன’, 1911-ல் கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ல் முறைப்படி தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.
''ஹலோ ஜீபா... சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்கிறார்கள்... ஆனால், சூரியன் மட்டும் வட்ட வடிவில் இருப்பது ஏன்?''
- தி.கீர்த்தனா, சென்னை.
''எல்லா நட்சத்திரங்களுமே கோள வடிவமானதுதான் கீர்த்தனா. இதில் சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. இதனால், ஒளிச்சிதறல் காரணமாக நம் கண்களுக்கு கூர்மையான முனைகள்கொண்டதைப் போல் தெரிகிறது. சூரியன் நமக்கு அருகில் இருப்பதால், அதன் உண்மையான வடிவம் புலப்படுகிறது. அருகில் என்றால், சுமார் 14 கோடி கிலோமீட்டர். அப்படியென்றால் மற்ற நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கும் என்று யோசித்துப் பார்.''

''ஹலோ ஜீபா... கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?''
- இரா.சரத்குமார், திண்டுக்கல்.
''சீல் (Seal) எனப்படும் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் வாழும் நீர்வாழ் பாலூட்டிதான் 'கடல் சிங்கம்’. இதன் மீசையும் பற்களின் அமைப்பும் சிங்கத்தைப் போன்று இருப்பதால், 'கடல் சிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் ஏழு வகைகள் உள்ளன. ஆண் கடல் சிங்கம் சராசரியாக 300 கிலோவும், பெண் கடல் சிங்கம் 100 கிலோவும் இருக்கும். இந்தியக் கடல் பகுதி மற்றும் அட்லாண்டிக் கடல் தவிர மற்ற எல்லாக் கடல் பகுதிகளிலும் இவை பரவலாக இருக்கின்றன. டால்பினைப் போல புத்திசாலித்தனம் நிறைந்தது. இந்தக் கடல் சிங்கத்தையும் டால்பினைப் போலவே பழக்கி, சாகஸங்கள் செய்யவைப்பார்கள். மூக்கு நுனியில் பந்தை வைத்துக் கொண்டு இவை செய்யும் வித்தை, பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மனிதர்களின் தோழனாகவும் இருக்கிறது. கடலில் தத்தளிக்கும் மனிதர்களை, இவை காப்பாற்றிய சம்பவங்கள் பல நிகழ்ந் துள்ளதாகச் சொல்வார்கள்.''
''ஹாய் ஜீபா... பாம்புகளில் மிக வேகமாகச் செல்வது எது?''
- எம்.ஸ்ரீகணேஷ், கடலூர்.
''ஆப்பிரிக்காவில் காணப்படும் 'கறுப்பு மாம்பா’ (Black mamba) என்கிற பாம்புதான் உலகிலேயே அதிவேகமாக செல்லும் பாம்பு. இதன் வேகம், மணிக்கு 20 கிலோமீட்டர். 4 மீட்டர் நீளம் வரை வளரும் இந்தப் பாம்பின் உடல், சாம்பல் நிறத்தில் இருக்கும். வாய்ப் பகுதி கறுப்பாக இருக்கும். அதனால், ஆப்பிரிக்கர் களால் 'கறுப்பு மாம்பா’ என அழைக்கப்படுகிறது.''