சைபர்சிம்மன் பீரகா வெங்கடேஷ்
##~## |
எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை 'பளிச்’ என்று சொல்ல வேண்டும். எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். விநாடி வினா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெளுத்துவாங்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறதா? அதற்கு இணையம் மூலமே நீங்கள் தயாராகலாம்.
முதலில் நாம் பார்க்கப்போவது சயின்ஸ்கிட்ஸ் (http://www.sciencekids.co.nz/). இந்தத் தளத்தில், விநாடி வினாவுக்கு என்று தனிப் பகுதி இருக்கிறது. நாடுகள் தொடர்பான விநாடி வினா, மனித உடல் தொடர்பானவை, இயற்பியல், வேதியியல் எனப் பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை க்ளிக் செய்து, எத்தனை கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கிறது என்பதைப் பரிசோதித்துக்கொள்ளலாம். பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் சரி பார்த்துக்கொள்ளலாம்.
பல கேள்விகள், பள்ளியில் படித்த பாடங்கள் தொடர்பானவை. எனவே, இவற்றுக்கு பதில் அளிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். கேள்வி- பதில் பகுதி தவிர, இந்தத் தளத்தில் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் விஞ்ஞான விளையாட்டுகள், அறிவியல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான பகுதிகளும் உள்ளன. மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பாடங்களும் இருக்கின்றன. இந்தத் தளத்தின் மூலம் உங்கள் அறிவியல் திறமையை சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் வளர்த்துக்கொள்ளலாம்.

சிறுவர்களுக்கான இந்தியத் தளமான பித்தாரா(http://www.pitara.com/activities/quiz.asp) தளத்திலும் எல்லாவிதமான தலைப்புகளிலும் கேள்வி-பதில்கள் உள்ளன. ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் தெளிவாகவும் விரிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளதால், புதிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்து, கிட்ஸ்வேர்ல்டுஃபன் (http://www.kidsworldfun.com/quizzes.php). இந்தத் தளத்தில், பொது அறிவு விநாடி வினாவுடன் இணையப் பாதுகாப்பு தொடர்பான விநாடி வினாவும் இடம்பெற்றுள்ளது. இணையத்தில் உலாவும்போது சிறுவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.

சரி, நம்முடைய இந்தியா பற்றி நமக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் ஓர் இணையதளம் இருக்கிறது. (http://knowindia.gov.in/knowindia/quiz_india.php). அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில் இந்தியா தொடர்பான கேள்வி-பதில் பகுதியும் இருக்கிறது. இதில் உள்ள மற்ற தலைப்புகளின் வாயிலாக இந்தியா தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் தளங்கள் எல்லாமே நீங்கள் ஜீனியஸாக உதவும் தளங்களே. இதே பெயரிலேயே ஓர் இணையதளமும் இருக்கிறது... அதுதான் மேக்மிஜீனியஸ் (http://www.makemegenius.com/gk_level.php).
இந்தத் தளத்திலும் விதவிதமான கேள்வி- பதில் பகுதிகளைப் பார்த்து பயிற்சி எடுத்துக்கலாம். விஞ்ஞான வீடியோக்களும் இருக்கின்றன. பொது அறிவை வளர்த்துக்கொள்ள இவை கைகொடுக்கும்.
மேலே சொன்ன எல்லாமே ஆங்கிலத்தில் அமைந்தவை. தமிழில் கேள்வி-பதில்களைத் தெரிந்துகொள்ள மாடர்ன் தமிழ்(http://www.moderntamilworld.com/childrenscorner/q&a_siruvar_part1.asp) என்ற தளத்தில் அதற்கான பகுதி இருக்கிறது. இந்தத் தளத்தில் உள்ள சிறுவர் பக்கத்தில், நீதிக் கதைகள் மற்றும் குழந்தைப் பாடல்களும் உள்ளன.
கணித வினாவுக்கான தளமும் இருக்கிறது. (https://www.facebook.com/KanitaVinatiVina?ref=stream).
இந்தத் தளங்கள், இணையத்தில் உலாவுவதை சுவாரஸ்யம் ஆக்குவதோடு, அறிவியல் மற்றும் பொது அறிவுத் தகவல்களையும் கற்றுக்கொள்ளவைக்கின்றன.
அடுத்த முறை பள்ளியில் விநாடி-வினா போட்டி வந்தால், தைரியமாக பெயர் கொடுத்துவிட்டு இந்தத் தளங்களின் உதவியோடு உற்சாகமாகத் தயாராகுங்கள்!