ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

ஜெர்மனியில் ஒளிர்ந்த முத்தமிழ் !

என்.ஜி.மணிகண்டன்

##~##

''ஜெர்மனியை மேப்ல  பார்க்கும்போதெல்லாம் அந்த நாட்டுக்கு நேரில் போவோம்னு நினைச்சதே இல்லை. ஆனா, அங்கே போனதுடன் தமிழ்நாட்டின் கலாசாரத்தை மேடையில் அரங்கேற்றித் திரும்பியிருக்கோம்'' என்று சொல்லும்போதே, அவர்கள் முகங்களில் குதூகலம்.

ஜெர்மனியில், 'ஒடிசி ஆஃப் தி மைண்ட்’ (Odyssey of The Mind) என்னும் சர்வதேச அளவிலான போட்டி, மாணவர்களுக்காக ஆண்டு தோறும் நடைபெறும். ஆய்வு, ஓவியம், நாடகம், ஆடல், பாடல், பேச்சு எனப் பல திறன்களையும் உள்ளடக்கியது இந்தப் போட்டி.

இந்த ஆண்டு தேசிய அளவில் தேர்வாகி, ஜெர்மனிக்குச் சென்றார்கள் திருச்சி, ஆல்ஃபா விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அகில் ஷிவானி மற்றும் நித்திலா, 9-ம் வகுப்பு  விஷ்ணுப்ரியா மற்றும் அரவிந்த், 10-ம் வகுப்பு அருண் மற்றும் முகுந்தன் செல்லம் ஆகியோர்.

''ஒரு நாடகத்தை எழுதி, அதற்கு நாமே பாடல் மற்றும் இசையை உருவாக்கி, நடிக்க வேண்டும். அரங்கின் செட்டிங்கையும் நாமே தயார்செய்ய வேண்டும். இந்தப் போட்டியில் நாங்கள் 'ஹுமாயூன் கல்லறை’ என்ற நிஜமும் கற்பனையும் கலந்த நாடகத்தை நடத்தி, சர்வதேச அளவில் நான்காவதாகவும், தேசிய அளவில் முதலாவதாகவும் வெற்றிபெற்றோம்'' என்கிறார் நித்திலா.

ஜெர்மனியில் ஒளிர்ந்த முத்தமிழ் !

இந்தியாவிலிருந்து கிளம்பியது முதல் திரும்பியது வரையான அனுபவங்களையும் குதூகலமாகச் சொன்னார்கள். ''விமானப் பயணம் ஜாலியா இருந்துச்சு'' என்றார் விஷ்ணுப்ரியா. ''நாங்க ஜெர்மனிக்கு போய் தரையில் கால் வெச்சதும் உச்சி வரை ஜில்லுனு இருந்துச்சு'' எனச் சிலிர்த்தார் அரவிந்த்.

''அங்கே என்னைக் கவர்ந்த இரண்டு விஷயங்கள்...'' என்று ஆரம்பித்த அருணை, ''சாப்பாடு பற்றித்தானே?'' என்று மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் அருண் தொடர்ந்தார்.

ஜெர்மனியில் ஒளிர்ந்த முத்தமிழ் !

''எங்களுக்குக் கொடுத்த ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. இந்தப் போட்டியின் நிறுவனரே எங்களை வரவேற்றார். அமைப்பாளர்கள் டைனிங் டேபிளைத் துடைத்தார்கள். போட்டி நடுவர் வண்டி ஓட்டினார். போட்டியின்போதுதான் அவர் நடுவர் என்பது தெரிஞ்சது'' என்கிறார்.

முகுந்தன் செல்லம், ''நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல்வேறு நாட்டு மாணவர்களுக்கு மத்தியில் நம் தேசியக் கொடியை சுமந்துகொண்டு ஊர்வலத்தில் சென்றது பெருமையா இருந்துச்சு. முத்தமிழிலும் திறமையை வெளிப்படுத்தக் காரணமாக அமைந்த இந்தப் போட்டியை மறக்கவே மாட்டோம்'' என்றார்.

ஜெர்மனியில் ஒளிர்ந்த முத்தமிழ் !

''போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களை ஊக்குவித்து, வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது எங்களின் பயிற்சியாளர்தான். ஒரு நல்ல பயிற்சியாளர் எப்படி இருக்கணும்னு அவரைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டோம்'' என்கிறார் நித்திலா.

இந்தக் குழுவை வழிநடத்திய ஏஞ்சலின் மாலினி, ''இப்படி திறமையான ஒரு குழுவை வழிநடத்தியது, எனக்குக் கிடைச்ச வரம். இவர்களுடன் ஜெர்மனி போய் வந்த பின்பு, ஒரு குழுவை வழிநடத்துவது எப்படி? என்று நானும் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்கிறார்.

ஜெர்மனியில் ஒளிர்ந்த முத்தமிழ் !

''மொத்தத்தில் இந்தப் போட்டியின் மூலம் 'தன்னம்பிக்கை’ என்ற பெரிய விஷயத்தைக் கத்துக்கிட்டோம்'' என்கிறார்கள் இந்த ஆறு அசத்தல் சுட்டிகளும்...