ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

பாதையும் பயணமும் !

வி.எஸ்.சரவணன் எம்.உசேன்

##~##

பத்திரிகைகளில் சிறுவர்கள் கைவண்ணம் பதிப்பதைப் பார்த்திருப்போம். இப்போது, சிறுவர்களின் கைவண்ணத்தில் ஒரு பத்திரிகையே வருகிறது. 'பாதையும் பயணமும்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைப் 'பாதை’ இல்லச் சிறுவர்கள் தொடங்கி, இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கதைகள், விடுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அறிவியல் செய்திகள், நாட்டு நடப்புகள் எனப் பலவித செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன.

தாங்கள் வரைந்த ஓவியங்களால் இதழின் அட்டையை அலங்கரிக்கின்றனர். படைப்புகளையும் தாங்களே எழுதி, அதை நகல் எடுத்துப் பத்திரிகையாக்குகிறார்கள். 'பாதையும் பயணமும்’ இதழில் படைப்புகளைப் பிரசுரித்துவரும் ரஞ்சிதாவின் கையெழுத்துதான், நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 'வருது வருது ரோபோ வருது’ என்ற கடித வடிவப் பாடத்தில் இருக்கிறது.

'பாதையும் பயணமும்’ இதழிலிருந்து சில பகுதிகள்...

முட்டாள் மன்னன்!

ஒரு நாட்டில் மன்னர் ஒருவர் ஆட்சி செய்தார். மக்கள் மீது அக்கறையுள்ளவர். ஆனால், கொஞ்சம் புத்திக் குறைவு.

ஒருநாள், மன்னர் கனவில் கடவுள் தோன்றினார். மன்னரின் நல்ல மனம் அறிந்த கடவுள், அவருக்கு ஒரு வரம் கொடுக்க முன்வந்தார். அதற்கு முன் மன்னரைச் சோதிக்க நினைத்தார். ''மன்னா, நாளை நீ பார்க்கும் அனைத்தும் உனக்கு பச்சை நிறமாகக் காட்சியளிக்க வேண்டும். அதற்கு நீ என்ன செய்வாயோ செய்!'' என்றார்.

பாதையும் பயணமும் !

கனவு கலைந்ததும் கடவுளிடம் வரத்தைப் பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, அரண்மனை ஊழியர்களை அழைத்து, நாட்டில் உள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு பச்சை வண்ணம் பூச உத்தரவிட்டார். மன்னர் கூறியதை மறுக்க முடியாமல், ஊழியர்கள் இரவோடு இரவாக அனைத்துப் பொருட்களுக்கும் பச்சை வண்ணம் பூசினர்.

மறுநாள் மன்னர் எழுந்து பார்த்தபோது, நாடே பச்சை வண்ணமாக இருந்தது. அன்று இரவு  கடவுள் மீண்டும் கனவில் தோன்றினார். அவரிடம் மன்னர் மகிழ்ச்சியாகத் தன் சாதனையைச் சொல்லி வரம் கேட்டார்.

பாதையும் பயணமும் !

கடவுள் மிகுந்த கோபத்துடன் மன்னரைப் பார்த்து, ''முட்டாள்! நான் உன்னிடம் சொன்னது என்னவென்று புரியாமல், பச்சை வண்ணம் பூசி, நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி இருக்கிறாய். 'நீ பார்க்கும்போது அனைத்தும் பச்சையாகக் காட்சியளிக்க வேண்டும்’ என்றுதான் நான் சொன்னேன். அதற்கு, பச்சை நிற மூக்குக் கண்ணாடி ஒன்றை நீ அணிந்துகொண்டால் போதுமே. அதை விடுத்து முட்டாள்தனமாக நடந்துகொண்டாயே!'' என்றார். மன்னர் தன் தவறினை உணர்ந்து தலைகுனிந்தார்.

- ஆ.சித்ரா, 8-ம் வகுப்பு.