மா.அ.மோகன் பிரபாகரன் க.தனசேகரன்
##~## |
கம்பீரமான குதிரையைப் பார்த்தால், அதில் சவாரி செய்யும் ஆசை நம் எல்லோருக்குமே ஏற்படும். ஆனால், மனதுக்குள் எழும் 'பயம்’ குதிரை வேகத்தில் ஓடும்.
ஆனால், ''எனக்கு குதிரை செல்லப் பிராணி மாதிரி. குதிரையேற்றத்தில் ரைடிங், ஜம்பிங் போன்றவற்றில் நிறையப் பரிசு வாங்கி இருக்கேன்'' என்கிறார் தொல்காப்பியன்.
சத்தியமங்கலம், மான்ஃபோர்ட் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார் தொல்காப்பியன். சிலம்பம், கராத்தே, குங்ஃபூ என வீரக் கலைகள் பலவற்றிலும் வெற்றிபெற்று, தன் வீட்டை பதக்கங்களால் நிறைத்திருக்கிறார்.
''தொல்காப்பியன் இரண்டரை வயதிலேயே சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பரிசு வாங்கியிருக்கிறான். ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் வென்று, இந்த வருட இறுதியில் நாக்பூரில் நடக்கும் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துக்கத் தேர்வாகி இருக்கான்'' என்கிறார் தொல்காப்பியனின் தந்தை வைரவேல்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தொல்காப்பியனுக்கு குதிரையேற்றம் மீது ஆர்வம் ஏற்பட்டது.
''அப்பாகிட்டே 'நான் குதிரையேற்றத்தில் கலந்துக்கிறேன்’னு சொன்னேன். 'சரி ஏற்பாடு செய்யறேன்’னு சொன்னார். சத்தியமங்கலத்தில் இருக்கும் 'சாரு ரைடிங் ஸ்கூல்’ல சேர்த்தார்'' என்கிறார் தொல்காப்பியன்.

மதுரையில் நடந்த ஜூனியர் தடகளப் போட்டிக்கு முன்பாக குதிரையேற்றப் போட்டியும் நடந்தது. இதில் பங்கேற்ற தொல்காப்பியன், குதிரை ஜம்பிங்கில் வெற்றிபெற்றார். முன்னாள் தமிழகக் காவல் துறைத் தலைவர், தேவாரம் இவரைப் பாராட்டி பரிசு கொடுத்தார்.
அடுத்ததாக, கோவையில் நடக்க இருக்கும் போட்டியில் கலந்துகொள்கிறார் தொல்காப்பியன். ''தமிழக அமெச்சூர் கபடிக் குழுத் தலைவர் சோலைராஜாவுக்கும் என்னைப்பற்றி தெரியும். இரண்டு வருடமாக என்னுடைய பள்ளிப் படிப்புக்கான செலவு முழுவதையும் அவர்தான் செய்து வருகிறார்'' என்கிறார் தொல்காப்பியன்.
'சாரு ரைடிங் ஸ்கூல்’ உரிமையாளரும் பயிற்சியாளருமான சக்தி பாலாஜி ''எங்களிடம் ஆறு குதிரைகள் உள்ளன. குதிரையேற்றம் உடம்புக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம். குதிரையை நம் சொல்லுக்குக் கட்டுப்படுத்தி, தாண்டவைப்பது அழகான கலை. சரியாகப் பயிற்சி எடுத்தால், குதிரையையும் குழந்தை மாதிரி கையாள முடியும். தொல்காப்பியன் ரொம்ப சீக்கிரமே குதிரையை லாவகமா ஓட்ட ஆரம்பிச்சுட்டான். இன்னும் பல போட்டிகளில் நிறைய சாதனைகள் படைப்பான்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

''குதிரையேற்றம், வசதி படைத்தவர்களுக்கான விளையாட்டு. ஒரு போட்டியில் கலந்துக்க நுழைவுக் கட்டணமே 10,000 ரூபாய். குதிரைக்கான மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு, வாடகை... என அதிக செலவு பிடிக்கும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தாலும், சவாலாக எடுத்து செய்துட்டிருக்கோம்'' என்கிறார் வைரவேல்.
''சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங்... என எத்தனையோ விளையாட்டுகளில் நிறையப் பரிசு வாங்கியிருந்தாலும், இப்போ என்னோட ஃபேவரைட் குதிரையேற்றம்தான். இதில், தேசிய அளவில் சாதனை செய்யணும்னு ஆசை'' என்று குதிரையை அன்புடன் தடவிக்கொடுக்கிறார் தொல்காப்பியன்.
கலக்குங்க குதிரை ராஜா!