- க்யூட் விளம்பரத் தூதர்ந.ஆஷிகா படங்கள் : பா.காளிமுத்து, இ.பொன்குன்றம்
##~## |
''சினிமா ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப்போன இடத்தில், 'நீதான் இந்தப் படத்தின் ஹீரோ’ என்று சொன்னால் எப்படி இருக்கும்...அப்படித்தான் என் விஷயத்திலும் நடந்துச்சு. இப்போ, நான் ஒரு ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதர். சுருக்கமாகச் சொல்லணும்னா... நான் இப்போ லிட்டில் டோனி''
மழலைக் குரலில் உற்சாகமாகச் சொல்கிறார், ஐந்து வயது உத்ரா.
ஒரு நிறுவனம், தங்களது நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதற்காக விளம்பரத் தூதுவர்களை நியமிப்பார்கள். விளம்பரத் தூதர் ஆக வேண்டும் என்றால், ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் செல்வாக்கு நிறைந்தவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயம் குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தூதர் முக்கியப் பங்காற்ற வேண்டும். பொறுப்பும் போட்டியும் நிறைந்த இந்த விளம்பரத் தூதர் துறையில், இன்று உத்ராவும் ஒருவர்.
'ஸ்போர்ட்டி இந்தியா டாட் காம்’ என்ற விளையாட்டு இணையதளம், 14 வயதுக்கு உட்பட்ட ஒரு சுட்டியைத் தங்களது விளம்பரத் தூதராகத் தேர்ந்தெடுக்க விரும்பியது. முக்கிய நிபந்தனை, அந்தச் சுட்டியின் முகச் சாயல் டோனியைப் போல இருக்க வேண்டும்.

''இந்தப் போட்டிக்கான தேர்வு, மதுரையில் உள்ள எஸ்.என். கல்லூரியில் நடந்தது. நான் எதேச்சையாக உத்ராவை அழைத்துக்கொண்டு அங்கே சென்றிருந்தேன். 'உங்கள் மகளின் தலைமுடி, முகச் சாயல், பார்க்கும் விதம் எல்லாமே டோனியை கண்கள் முன் நிறுத்துகிறது. அவரை இந்த முதல் கட்டப் போட்டியில் பங்கேற்க வையுங்கள்’ என்று சொன்னார்கள். உத்ராவும் அதில் பங்கேற்று வெற்றி பெற்றாள்'' என்கிறார் உத்ராவின் தந்தை பாலாஜி.

''இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பௌலிங் பயிற்சிகள் நடந்தன. அதுவரைக்கும் நான் கிரிக்கெட்டே விளையாடியது இல்லை. என்னைவிட உயரமான பேட்டைக் கொடுத்து விளையாடச் சொன்னாங்க. அதைத் தூக்கவே கஷ்டமா இருந்துச்சு. சமாளிச்சுட்டு பந்தை அடிச்சேன். அப்புறம் ஃபீல்டிங், பௌலிங் பண்ணினேன். 'நல்லா விளையாடுறே’னு பாராட்டினாங்க. மூன்றாம் கட்டமாக நடந்த போட்டியிலும் முதல் ஆளாக வந்தேன். 'நீதான் லிட்டில் டோனி. எங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதர்’னு சொன்னாங்க'' என்கிறார் உத்ரா.
இனி, அந்த நிறுவனம் நடத்தும் விளையாட்டு சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உத்ரா செல்வார்.அவர்களின் தூதராகச் செயல்படுவார்.
''விளம்பரத் தூதர் என்னவெல்லாம் செய்வாங்க. அவங்களோட பொறுப்பு என்ன? அதுல எப்படி பிரபலமாகலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். கிரிக்கெட்டையும் மற்ற விளையாட்டுகள் பற்றியும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா, நமக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கும்போது சும்மா போய் நிற்காம அதுக்கான ஹோம்வொர்க் பண்ணிட்டுபோய் பெஸ்ட்டா பேர் வாங்கினாதானே பெருமை'' என்று பொறுப்புடன் பேசுகிறார் இந்த க்யூட் விளம்பரத் தூதர்.