சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்
யம்மா... எத்தனை பெயர்கள்!
##~## |
வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு...
இதெல்லாம் என்ன தெரியுமா?
சங்க இலக்கியங்களில் யானைக்கு இருந்த பல்வேறு பெயர்கள். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, 'களிறு’ என்பது ஆண் யானையையும் 'பிடி’ என்பது பெண் யானையையும் குறிக்கும்.
கடல் புலி!
சுறா மீனை 'கடல் புலி’ என்பார்கள். அளவில் மிகப் பெரிய சுறா, சராசரியாக 21 மீட்டர் நீளம் இருக்கும். மீன்களில் வேகமாக நீந்தக் கூடியதும் இதுதான். தனது வலிமையான வாலால், இரையை அடித்து வீழ்த்தும். 90 கிலோ எடை கொண்ட ஆமையையும் ஒரே விழுங்காக விழுங்கிவிடும். அதிலும் வெள்ளை சுறாக்கள் மிகவும் பயங்கரமானவை. இவை, கடலில் செல்லும் மனிதர்களையும் அலறியடித்து ஓடவைக்கும்.

பலே பறவை!
புத்திசாலித்தனத்திலும் சேட்டையிலும் மனிதர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல சில பறவைகள் உள்ளன. அதில் ஒன்று, 'க்ரீன் ஹெரோன்ஸ்’ (Green Herons). இந்தப் பறவை, சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளைத் தண்ணீரின் மீது போட்டு, அதைச் சாப்பிட மேலே வரும் மீன்களைத் தனக்கு இரையாக்கிக்கொள்ளுமாம்.
ஞாபகமறதிக்கு புரோட்டீன்!
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதியைப் போக்கும் புரோட்டீனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 'RBAP 48’ என்ற இந்தப் புரோட்டீனை, வயதான எலிகளிடம் பரிசோதித்தனர். அவை, இளம் எலிகளைப் போல ஞாபகசக்தியுடன் வேலைகளைச் செய்தனவாம். எனவே, இவை விரைவில் மனிதர்களுக்கான ஞபகசக்தி மருந்தாகத் தயாரிக்கப்படுமாம்.
ஹை ஜாலி... இனிமே, 'என் மூக்குக் கண்ணாடியை எங்கே வெச்சேன்?’னு நம்ம தாத்தா, நம்மகிட்டே கேட்க மாட்டார்.

அதிசயத் தனிமம்!
விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் இருக்கும் கதவுகள், தானாகத் திறந்து மூடுவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு உதவியாக இருப்பது, 'ஸெலினியம்’ என்ற தனிமம். இது, எளிதில் மின்சாரத்தைக் கடத்தும். என்றாலும், வெளிச்சத்தில் மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும் குணம்கொண்டது. தானியங்கிக் கதவுகளில் ஸெலினியம் தகடும், அதில் ஒளிபடும் அமைப்பும் இருக்கும். நாம் கதவின் அருகே சென்றதும் ஒளி தடைபடுவதால், கதவு தானாகத் திறக்கிறது.